Monday, 21 January 2013

பாரதியார் கவிதைகள் 10 பகுதி 1

பாரதியார் கவிதைகள் 10 பகுதி 1




ஜயம் உண்டு

[ ராகம் - கமாஸ்] [தாளம்-ஆதி]

பல்லவி

ஜயமுண்டு பயமில்லை மனமே-இந்த
ஜன்மத்திலே விடுதலையுண்டு நிலையுண்டு. (ஜய)

அனுபல்லவி

பயனுண்டு பக்தியினாலே - நெஞ்சிற்
பதிவுற்ற குலசக்தி சரணுண்டு பகையில்லை. (ஜய)

சரணங்கள்

புயமுண்டு குன்றத்தைப் போலே - சக்தி
பொற்பாத முண்டு அதன் மேலே
நியம மெல்லாம்சக்தி நினைவன்றிப் பிறிதில்லை;
நெறியுண்டு; குறியுண்டு; குலசக்தி வெறியுண்டு. (ஜய) 1


மதியுண்டு செல்வங்கள் சேர்க்கும் - தெய்வ
வலியுண்டு தீமையைப் பேர்க்கும்:
விதியுண்டு; தொழிலுக்கு விளைவுண்டு; குறைவில்லை;
விசனப்பொய்க் கடலுக்குக் குமரன்கைக் கணையுண்டு. (ஜய) 2

அலைபட்ட கடலுக்கு மேலே - சக்தி
அருளென்னுந் தோணியி னாலே
தொலையெட்டிக் கரையுற்றுத் துயரற்று விடுபட்டுத்
துணிவுற்ற குலசக்தி சரணத்தில் முடிதொட்டு (ஜய) 3


உலகத்தை நோக்கி வினவுதல்

நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே,
நீங்களெல்லாம்
சொற்பனந்தானா? - பல
தோற்ற மயக்கங்களோ?
கற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே,
நீங்களெல்லாம்
அற்ப மாயைகளோ? - உம்முள்
ஆழ்ந்த பொருளில்லையோ? 1

வானகமே, இளவெயிலே, மரச்செறிவே,
நீங்களெல்லாம்
கானலின் நீரோ? - வெறுங்
காட்சிப் பிழைதானோ?
போனதெல்லாம் கனவினைப்போற்
புதைந்தழிந்தே போனதனால்
நானுமோர் கனவோ? - இந்த
ஞாலமும் பொய்தானோ? 2

காலமென்றே ஒருநினைவும்
காட்சியென்றே பலநினைவும்
கோலமும் பொய்களோ? - அங்குக்
குணங்களும் பொய்களோ?
சோலையிலே மரங்களெல்லாம்
தோன்றுவதோர் விதையிலென்றால்
சோலை பொய்யாமோ? - இதைச்
சொல்லொடு சேர்ப்பாரோ? 3

காண்பவெல்லாம் மறையுமென்றால்
மறைந்த தெல்லாம் காண்பமன்றோ?
வீண்படு பொய்யிலே - நித்தம்
விதிதொடர்ந் திடுமோ?
காண்பதுவே உறுதிகண்டோம்,
காண்பதல்லால் உறுதியில்லை
காண்பது சக்தியாம் - இந்தக்
காட்சி நித்தியமாம். 4


ஆத்ம ஜெயம்

கண்ணில் தெரியும் பொருளினைக் கைகள்
கவர்ந்திட மாட்டாவோ? - அட,
மண்ணில் தெரியுது வானம், அதுநம்
வசப்பட லாகாதோ?
எண்ணி யெண்ணிப்பல நாளு முயன்றிங்
கிறுதியிற் சோர்வோமோ? - அட,
விண்ணிலும் மண்ணிலும் கண்ணிலும் எண்ணிலும்
மேவு பராசக்தியே. 1

என்ன வரங்கள், பெருமைகள், வெற்றிகள்,
எத்தனை மேன்மைகளோ -
தன்னை வென்றாலவை யாவும் பெறுவது
சத்திய மாகுமென்றே
முன்னை முனிவர் உரைத்த மறைப்பொருள்
முற்று முணர்ந்த பின்னும்
தன்னை வென்றாளும் திறமை பெறாதிங்கு
தாழ்வுற்று நிற்போமோ? 2



தெளிவு

எல்லா மாகிக் கலந்து நிறைந்தபின்
ஏழைமை யுண்டோடா? - மனமே!
பொல்லாப் புழுவினைக் கொல்ல நினைத்தபின்
புத்தி மயக்க முண்டோ? 1

உள்ள தெலாமோர் உயிரென்று தேர்ந்தபின்
உள்ளங் குலைவ துண்டோ? - மனமே!
வெள்ள மெனப்பொழி தண்ணரு ளாழ்ந்தபின்
வேதனை யுண்டோடா? 2

சித்தி னியல்பு மதன்பெருஞ் சத்தியின்
செய்கையுந் தேர்ந்துவிட்டால், - மனமே,
எத்தனை கோடி இடர்வந்து சூழினும்
எண்ணஞ் சிறிது முண்டோ? 3


சென்றது மீளாது!

சென்றதினி மீளாதுமூடரே! நீர்
எப்போதும் சென்றதையே சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து
குமையாதீர்! சென்றதனைக் குறித்தல் வேண்¢டாம்.
இன்றுபுதி தாய்ப்பிறந்தோம் என்று நீவீர்
எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்றுவிளை யாடியின்புற் றிருந்து வாழ்வீர்;
தீமையெலாம் அழிந்துபோம், திரும்பி வாரா.


மனத்திற்குக் கட்டளை

பேயா யுழலுஞ் சிறு மனமே
பேணா யென்சொல் இன்றுமுதல்
நீயா யொன்றும் நாடாதே
நினது தலைவன் யானேகாண்
தாயாம் சக்தி தாளினிலும்
தரும மெனயான் குறிப்பதிலும்
ஓயா தேநின் றுழைத்திடுவாய்
உரைத்தேன் அடங்கி உய்யுதியால்.


மனப் பெண்

மனமெனும் பெண்ணே! வாழிநீ கேளாய்!
ஒன்றையே பற்றி யூச லாடுவாய்
அடுத்ததை நோக்கி யடுத்தடுத் துலவுவாய்
நன்றையே கொள்ளெனிற் சோர்ந்துகை நழுவுவாய்
விட்டுவி டென்றதை விடாதுபோய் விழுவாய் 5

தொட்டதை மீள மீளவுந் தொடுவாய்
புதிய காணிற் புலனழிந் திடுவாய்
புதிய விரும்புவாய் புதியதை அஞ்சுவாய்
அடிக்கடி மதுவினை அணுகிடும் வண்டுபோல்
பழமையாம் பொருளிற் பரிந்துபோய் வீழ்வாய் 10

பழமையே யன்றிப் பார்மிசை யேதும்
புதுமை காணோமெனப் பொருமுவாய், சீச்சீ!
பிணத்தினை விரும்புங் காக்கையே போல
அழுகுதல், சாதல், அஞ்சுதல் முதலிய
இழிபொருள் காணில் விரைந்ததில் இசைவாய். 15


அங்ஙனே,
என்னிடத் தென்றும் மாறுத லில்லா
அன்புகொண் டிருப்பாய், ஆவிகாத் திடுவாய்,
கண்ணினோர் கண்ணாய் காதின் காதாய்ப்
புலன்புலப் படுத்தும் புலனா யென்னை 20

உலக வுருளையில் ஒட்டுற வகுப்பாய்,
இன்பெலாந் தருவாய், இன்பத்து மயங்குவாய்,
இன்பமே நாடி யெண்ணிலாப் பிழை செய்வாய்,
இன்பங் காத்துத் துன்பமே யழிப்பாய்,
இன்பமென் றெண்ணித் துன்பத்து வீழ்வாய், 25

தன்னை யறியாய், சகத்தெலாந் தொளைப்பாய்,
தன்பின் னிற்குந் தனிப்பரம் பொருளைக்
காணவே வருந்துவாய், காணெனிற் காணாய்,
சகத்தின் விதிகளைத் தனித்தனி அறிவாய்,
பொதுநிலை அறியாய், பொருளையுங் காணாய், 30

மனமெனும் பெண்ணே! வாழிநீ கேளாய்!
நின்னோடு வாழும் நெறியுநன் கறிந்திடேன்;
இத்தனை நாட்போல் இனியுநின் னின்பமே
விரும்புவன்; நின்னை மேம்படுத் திடவே
முயற்சிகள் புரிவேன்; முத்தியுந் தேடுவேன்; 35


உன்விழிப் படாமல் என்விழிப் பட்ட
சிவமெனும் பொருளைத் தினமும் போற்றி
உன்றனக் கின்ப ஓங்கிடச் செய்வேன். 38


சிட்டுக்குருவியைப் போலே

விட்டு விடுதலை யாகிநிற்பா யிந்தச்
சிட்டுக் குருவியைப் போலே.

சரணங்கள்

எட்டுத் திசையும் பறந்து திரிகுவை
ஏறியக் காற்றில் விரைவொடு நீந்துவை
மட்டுப் படாதெங்கும் கொட்டிக் கிடக்குமிவ்
வானொளி யென்னும் மதுவின் சுவையுண்டு (விட்டு) 1


பெட்டையி னோடின்பம் பேசிக் களிப்புற்றுப்
பீடையி லாததொர் கூடு கட்டிக்கொண்டு
முட்டைதருங் குஞ்சைக் காத்து மகிழ்வெய்தி
முந்த வுணவு கொடுத்தன்பு செய்திங்கு (விட்டு) 2

முற்றத்தி லேயுங் கழனி வெளியிலும்
முன்கண்ட தானியம் தன்னைக் கொணர்ந்துண்டு
மற்றப் பொழுது கதைசொல்லித் தூங்கிப்பின்
வைகறை யாகுமுன் பாடி விழிப்புற்று (விட்டு) 3


விடுதலை

[ராகம்-நாட்டை]

பல்லவி

வேண்டுமடி எப்போதும் விடுதலை, அம்மா!

சரணங்கள்

தூண்டு மின்ப வாடைவீசு துய்யதேன் கடல்
சூழ நின்ற தீவிலங்கு சோதி வானவர்
ஈண்டு நமது தோழராகி எம்மோ டமுதமுண்டு குலவ
நீண்ட மகிழ்ச்சி மூண்டு விளைய நினைத்திடு மின்பம் அனைத்தும் உதவ (வேண்டுமடி) 1


விருத்தி ராதி தானவர்க்கு மெலிவ தின்றியே
விண்ணு மண்ணும் வந்துபணிய மேன்மை துன்றியே
பொருத்த முறநல் வேத மோர்ந்து பொய்ம்மை தீர, மெய்ம்மை நேர
வருத்த மழிய வறுமை யொழிய வையம் முழுதும் வண்மை பொழிய (வேண்டுமடி) 2

பண்ணில் இனிய பாடலோடு பாயு மொளியெலாம்
பாரில் எம்மை உரிமைகொண்டு பற்றி நிற்கவே,
நண்ணி யமரர் வெற்றி கூற நமது பெண்கள் அமரர் கொள்ள
வண்ண மினிய தேவ மகளிர் மருவ நாமும் உவகைதுள்ள (வேண்டுமடி) 3


கடமை

கடமை புரிவா ரின்புறுவார்
என்னும் பண்டைக் கதை பேணோம்;
கடமை யறியோம் தொழிலறியோம்;
கட்டென் பதனை வெட்டென்போம்;
மடமை, சிறுமை, துன்பம், பொய்
வருத்தம், நோவு, மற்றிவை போல்
கடமை நினைவுந் தொலைத் திங்கு
களியுற் றென்றும் வாழ்குவமே.

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home