Friday, 8 February 2013

குளிரிலும் மிளிர...Makeup Tips For Winters

Makeup Tips For Winters - Beauty Care and Tips in Tamil
குளிர்காலத்தில் பொலிவாக மிளிர வேண்டுமா?
குளிர் காலம் ஆரம்பமாகிவிட்டது. வெப்ப நிலையும் குறைந்திருக்கிறது. வீடு, வேலை, விஷேசங்கள் என்று காலில் சக்கரம் கட்டி சுற்றிக் கொண்டிருக்கும் பெண்களால், தங்களின் உடல் அழகைப் பராமரிக்க அதிக நேரம் கிடைப்பதில்லை. கிடைக்கும் நேரத்தில் வீட்டிலிருந்தபடியே விரைவாக அழகைப் பராமரித்து பொலிவுடன் ஜொலிக்கலாம்.

சருமம்

குளிரும் பனியும் சருமத்தில் சுருக்கங்களை உருவாக்கலாம். குறிப்பாக கண்கள் மற்றும் உதடுகளைச் சுற்றி சுருக்கங்கள் ஏற்படலாம். உங்களுடையது வறண்ட சருமமாக இருந்தால் அதிக திறனுள்ள மாய்ச்சுரைசரைப் பயன்படுத்துவது அவசியம். சருமத்தில் உள்ள சிறுசிறு ஓட்டைகளை இது அடைத்துவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். மேக்கப் செய்யும் முன் இதனை கண்கள் மற்றும் உதடுகளைச் சுற்றி போட்டுக் கொள்ளுங்கள். இதனால் நாள் முழுவதும் மேக்கப்பும் கலையாமல் இருக்கும். கண்களைச் சுற்றி இருக்கும் சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படலாம் என்பதால் இதற்கு அதிக கவனம் தேவை. சாதாரண பாதாம் எண்ணெயை கண்களைச் சுற்றி தேய்த்து, மோதிர விரலால் ஒரு நிமிடம் மசாஜ் செய்யுங்கள். கருவளையத்தைப் போக்க இது கைகொடுக்கும். சிறந்த பலன் கிடைக்க, 15 நிமிடம் கழித்து, மென்மையான பஞ்சுத் துணியால் துடைத்து எடுத்துவிடுங்கள். அல்லது வெள்ளரி ஜூஸ் மற்றும் தக்காளி ஜூஸ் இரண்டையும் சமமான அளவு கலந்து கண்களுக்குக் கீழே தேய்த்து 15 நிமிடம் வைத்திருந்தால் போதும், உங்களின் கண்கள் கவிபாடும். லா ப்ரைரீ நிறுவனத்தின் ரீவைட்டலைசிங் ஐ ஜெல் மற்றும் ஷாநாஸ் ஹூசைனின் ஷா மில்க் லோஷனையும் இதற்காகப் பயன்படுத்தலாம். பனி மூட்டம் இருந்தாலும் சூரியனிலிருந்து வரும் புற ஊதாக் கதிர்களின் தாக்கம் இருக்கும். தாக்குதலைத் தடுக்கும் சன் பிளாக் கிரீம்களை உபயோகிப்பது நன்மை தரும். கொஞ்சம் அதிக நேரம் இருந்தால், மாய்ச்சுரைசரையும் ஒலே டோட்டல் எஃபக்ட்ஸ் சன் பிளாக் கிரீமையும் கலந்து உபயோகிக்கலாம்.

உடம்பு

பனி மூட்டம் நிறைந்த காலைப் பொழுதும் குளிர்ந்த காற்றும் உங்கள் உடம்பின் சருமத்தை சொர சொரப்பாகி விடும். இதிலிருந்து விடுபட சருமத்தில் நீர்ச்சத்து அவசியம். ஆலிவ் ஆயில் அல்லது உங்கள் சருமத்திற்கு ஒத்துப் போகும் ஏதேனும் ஒரு எண்ணெயை ஒரு கப் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் கல் உப்பை எண்ணெயில் முழுமையாக நிரம்பும் அளவிற்கு சேர்க்கவும். இந்தக் கலவையை கழுத்தில் இருந்து உடல் முழுவதும் பொலிவு இழந்த சருமத்தின் மீது வட்ட வடிவமான அசைவில் தேய்க்கவும். எண்ணெயினால் சருமத்தின் சொரசொரப்பு குறைவதோடு, உப்பினால் சருமத்திற்கு நீர்ச் சத்தும் கிடைக்கும். வறண்ட சருமத்திற்கு கிரீம் கலந்த சோப் வகைகள் உகந்தது. குளித்த பிறகு, பாடி லோஷன் தேய்த்து விட்டு பின்னர் பவுடர் உபயோகித்தால் உங்கள் சருமம் மிருதுவாக இருக்கும்.

பாதங்கள்

உடலின் மொத்த பாரத்தையும் தாங்கும் பாதங்கள் தான் அதிக அழுத்தங்களைச் சந்திக்கிறது. உடலின் முக்கிய நரம்பு மண்டலங்களுடன் இணையும் பிரஷர் பாயின்டுகளும் பாதங்களில்தான் இருக்கின்றன. இதனால் வாரம் ஒரு முறை மசாஜ் செய்தால் இந்த அழுத்தத்திலிருந்து பாதங்கள் விடுபடும். ஆனால் உங்களால் இதற்கு வெளியில் சென்று நேரம் செலவிட முடியவில்லை என்றால், வீட்டிலேயே இதற்கென கவனம் செலுத்தலாம். ஒரு டப்பில் வெதுவெதுப்பான தண்ணீரில் எக்சோட்டிக் பாத் கிரிஸ் டல்சை கரைக்கவும். இதில் 10 முதல் 15 மார்பிள் கல் துண்டுகளைப் போடவும். பாதங்களை இந்தத் தண்ணீரினுள் வைத்து, மார்பிள் கல்லில் குதிகால்களைத் மெதுவாகத் தேய்க்கவும். இது உங்கள் பாதங்களை மிருதுவாக வைப்பதோடு, பித்த வெடிப்புகளும் வராது. தினமும் பாடி லோஷன் தேய்ப்பது இன்னும் அதிக பலனைத் தரும்.

கூந்தல்

உங்கள் கூந்தலுக்காக வாரம் ஒரு முறை ஆயில் மசாஜ் என்பதை விட வேறு எந்த சிறந்த சிகிச்சையும் இருக்க முடியது. தேங்காய் எண்ணெயை சூடாக்கும் முன் அதில் கால்பாகம் ஆலிவ், பாதாம் அல்லது விளக்கெண்ணையை சேர்த்துக் கொள்ளவும். இதை தலையில் தேய்த்து குறைந்தது அரை மணி நேரம் ஊற வைக்கவும். வறண்ட வானிலை நிலவும் போது, இந்த ஆயில் மசாஜ் கூந்தலுக்குத் தேவையான சத்தை தரும். உங்களுக்கு இதற்கு நேரமில்லை என்றால் டோனி அண்ட் கையின் ரிப்ரெஷ் இட் ட்ரை ஷாம்புவை உபயோகிக்கலாம்.

பொலிவான தோற்றத்திற்கு

விசேஷங்களுக்கு செயற்கையாக அழகு செய்து கொள்ளலாம். ஆனால் இரவு நேர பார்ட்டிகளுக்கு ப்ரைட் கலர் மேக்கப் செய்து கொள்ளவும். அலுவலகங்களுக்குச் செல்லும்போது, ஆழமான நிற லிப்ஸ்டிக்குகளைப் பயன்படுத்தலாம். உங்கள் லிப்ஸ்டிக்கின் நிறமும் மேக்கப் நிறமும் உங்கள் நிறத்திற்குத் தகுந்தாற் போல் பார்த்துக் கொள்வது அவசியம். அதிலும் இதற்கு ஏற்றபடி உங்கள் ஆடையும் அமைந்தால், உங்களை கவனிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. இந்த நிறத் தேர்வும் உடை தேர்வும் உங்கள் அழகிற்கு மேலும் அழகு சேர்க்கும். இதிலும் அலுவலங்களில் பணியாற்றுபவர்களுக்கு இந்த மேக்கப் தேர்வும் உடை தேர்வும் வேலைப் பளுவை மறந்து செயலாற்ற உதவும்.

மேக்கப் டிப்ஸ்:

 விழா, விசேஷங்களுக்கு அளவான மேக்கப் பொருந்தும்.
அலை அலையான கூந்தலுக்கு:வாரம் ஒருமுறை ஆயில் மசாஜ் சிறந்தது.
கரு வளையம் போக: கண்களைச் சுற்றி பாதாம் ஆயில் தேய்த்தால் கரு வளையம் மறையும்.
சருமம் மிருதுவாக: அதிக திறனுள்ள மாய்ச்சுரைசரைப் பயன்படுத்தவும்.
பொலிவு பாதங்களுக்கு: வெதுவெதுப்பான நீரில் கால்களை வைக்கவும்.
மிருதுவான சருமத்திற்கு: வெளியில் செல்லும் முன் சன் பிளாக் கிரீமை தவறாமல் உபயோகிக்கவும்.

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home