Tuesday, 9 April 2013

நல்லி எலும்பு கறி கிரேவி

Nalli Elumbu Curry ஆட்டு எலும்பு கறி சத்து நிறைந்தது. இதனை வேகவைத்து சூப் ஆக குடிக்கலாம். கிரேவி செய்தும் சாப்பிடலாம். கிராமங்களில் இன்றைக்கும் நல்லி எலும்பு கறிக்கு அதிக வரவேற்பு உண்டு. பக்குவம் மாறாமல் செய்தால் சுவை சூப்பராக இருக்கும். 
 
தேவையான பொருட்கள் 
 
ஆட்டு நல்லி எலும்பு - 15 
பெரிய வெங்காயம் - 1/2 கிலோ 
தக்காளி - 5 
தயிர் - 1/2 கப் 
இஞ்சி, பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன் 
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் 
 மிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன் 
கரம் மசாலா - 1 டேபிள்ஸ்பூன் 
 உப்பு - தேவையான அளவு 
கொத்தமல்லி - 1 கைப்பிடி 
எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன் 
பட்டை - சிறிது 
கிராம்பு - 5 
ஏலக்காய் - 4 
 பிரிஞ்சி இலை - 2, 
 
நல்லி எலும்பு கறி செய்முறை 
 
தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். ஆட்டு எலும்பை கழுவி சுத்தம் செய்து வைக்கவும். குக்கரில் எண்ணெய் விட்டு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை போட்டு தாளிக்கவும். 
 
இதனுடன் வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானதும் இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் போட்டு வதக்கி, கறியை சேர்த்து பிரட்டவும். 
 
கறி நன்கு வதங்கியதும் உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடவும். 10,12 விசில் வந்த உடன் ஸ்டவ்வை நிறுத்தி விடவும். விசில் இறங்கிய உடன் தக்காளி, நன்கு அடித்த தயிர் சேர்த்து கொதிக்க விடவும்.
 
 அடுப்பை மிதமாக எரியவிட்டு எண்ணெய் பிரியும் வரை வைத்து இறக்கவும். இதனுடன் நறுக்கிய கொத்தமல்லி தூவி பரிமாறவும். நல்லி எலும்பு கிரேவி சாதம், சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள சூப்பராக இருக்கும்.

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home