Tuesday, 22 January 2013

அவன் தான் இறைவன்

 
பூஜ்ஜியத்துக் குள்ளே ஓரு 
ராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டு 
புரியாமலே இருப்பான் ஒருவன் - அவனை
புரிந்து கொண்டால் அவன் தான் இறைவன் 

தென்னை இளநீருக் குள்ளே 
தேங்கியுள்ள ஓட்டு குள்ளே 
தேங்காயைப் பொல் இருப்பான் ஒருவன் - அவனை
தெரிந்து கொண்டால் அவன் தான் இறைவன் 
வெள்ளருவிக் குள்ளி ருந்து
மேலிருந்து கீழ் விழுந்து
உள்ளுயிரைச் சுத்தம்செய்வான் ஒருவன் - ‍அவனை
உணர்ந்து கொண்டால் அவந்தான் இறைவன்

வானவெளிப் பட்ட ணத்தில்
வட்டமதிச் சக்க ரத்தில்
ஞானரதம் ஓட்டிவரும் ஒருவன் - அவனை
நாடிவிட்டால் அவன்தான் இறைவன்

அஞ்சுமலர்க் காட்டுக் குள்ளே
ஆசைமலர் பூத்தி ருந்தால்
நெஞ்சமலர் நீக்கிவிடும் ஒருவன் - அவனை
நினைத்துக் கொண்டால் அவன்தான் இறைவன்
முற்றும் கசந்ததென்று பற்றறுத்து வந்தவர்க்கு
சுற்றமென நின்றிருப்பான் ஒருவன் - அவனை
தொடர்ந்து சென்றால் அவன் தான் இறைவன்
கற்றவர்க்குக் கண் கொடுப்பான்
அற்றவர்க்குக் கை கொடுப்பான்
பெற்றவரை பெற்றெடுத்த ஒருவன் - அவனைப்
பின் தொடர்ந்தால் அவன் தான் இறைவன்

பஞ்சு படும் பாடுபடும்
நெஞ்சு படும்பா டறிந்து
அஞ்சுதலைத் தீர்த்துவைப்பான் ஒருவன் ‍- அவன் தான்
ஆறுதலைத் தந்த ருளும் இறைவன்

கல்லிருக்கும் தேரை கண்டு
கருவியிருக்கும் பிள்ளை கண்டு
உள்ளிருந்து ஊட்டிவைப்பான் ஒருவன் - அதை
உண்டுகளிப் போர்க் கவனே இறைவன்

முதலினுக்கு மேலி ருப்பான்
முடிவினுக்கு கீழி ருப்பான்
உதவிக்கு ஓடிவரும் ஒருவன் - அவனை
உணர்ந்து கொண்டால் அவன் தான் இறைவன்

நெருப்பினில் சூடு வைத்தான்
நீரினிலே குளிர்ச்சி வைத்தான்
கறுப்பிலும் வெண்மை வைத்தான் ஒருவன் - உள்ளம்
கனிந்து கண்டால் அவன் தான் இறைவன்

உள்ளத் தின் உள் விளங்கி
உள்ளுக் குள்ளே அடங்கி
உண்டென்று காட்டிவிட்டான் ஒருவன் - ஓர்
உருவ மில்லா அவன் தான் இறைவன்

ஒன்பது ஓட்டைக் குள்ளே
ஒருதுளிக் காற்றை வைத்து
சந்தையிலே விற்றுவிட்டான் ஒருவன் - அவன்
தடம் தெரிந்தால் அவன் தான் இறைவன்

கோழிக்குள் முட்டை வைத்து முட்டைக்குள் கோழி வைத்து
வாழைக்கும் கன்று வைத்தான் ஒருவன் - அந்த
ஏழையின் பேர் உலகில் இறைவன்
சின்னஞ்சிறு சக்க ரத்தில்
ஜீவன்களைச் சுற்ற வைத்து
தன்னைமறந் தேஇருக்கும் ஒருவன் - அவனைத்
தழுவிக் கொண்டால் அவன் தான் இறைவன்

தான் பெரிய வீரனென்று
தலை நிமிர்ந்து வாழ்பவர்க்கும்
நாள்குறித்துக் கூட்டிச்செல்லும் ஒருவன் - அவன் தான்
நாடகத்தை ஆடவைத்த இறைவன்

-கவியரசு கண்ணதாசன்

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home