Monday, 28 January 2013

தேங்காய் போளி

9 7 Coconut Poli
தேங்காய் போளி ஒரு பாரம்பரிய இனிப்பு வகை. இது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இதை மாலை நேரத்தில் அவர்களுக்கு செய்து கொடுத்தால், அவர்கள் விரும்பி சாப்பிடுவர். சரி, அந்த தேங்காய் போளியை எப்படி செய்வதேன்று பார்ப்போமா!!! 
 
தேவையான பொருட்கள் : 
 
 மைதா மாவு - 1 1/2 கப் 
கடலைப் பருப்பு - 1 கப் 
வெல்லம் - 2 கப் 
தேங்காய் - ஒரு மூடி 
ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன் 
கேசரி பவுடர் - ஒரு சிட்டிகை 
நல்லெண்ணெய் - சிறிதளவு 
உப்பு - ஒரு சிட்டிகை 
நெய் - தேவையான அளவு 
தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை : 
 
 முதலில் ஒரு பாத்திரத்தில் மைதா மாவை போட்டு, அத்துடன் கேசரி பவுடர், உப்பு, நல்லெண்ணெய் மற்றும் தேவையான தண்ணீர் சேர்த்து கெட்டியாகப் பிசைந்து வைத்துக் கொள்ளவும். 
 
பிறகு தேங்காயை துருவிக் கொள்ளவும். கடலைப் பருப்பை நீரில் கால் மணிநேரம் ஊற வைக்கவும். 
 
பின் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் கடலைப் பருப்பை போட்டு 2-3 விசில் விட்டு இறக்கி வைக்கவும். 
 
 பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் வேக வைத்த கடலைப் பருப்பு, துருவிய தேங்காய் மற்றும் வெல்லம் சேர்த்து கிளறவும். 
 
வெல்லமானது நன்கு கரைந்து ஒன்று சேர்ந்ததும், அதனை இறக்கி ஆற வைத்து மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும். 
 
 பிறகு அரைத்த அந்த கலவையை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் ஏலக்காய் பொடியையும் போட்டு பிசைந்து, பூரணத்தை செய்து கொள்ளவும். 
 
பிசைந்து வைத்திருக்கும் மைதா மாவை சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். 
 
பிறகு பூரணத்தையும் சிறு உருண்டைகளாக உருட்டவும். 
 
 பின் ஒரு வாழை இலை அல்லது பிளாஸ்டிக் பேப்பரை எடுத்து அதில் நல்லெண்ணெயை தடவி, மைதா உருண்டையை வைத்து வட்டமாக கையால் செய்யவும். 
 
பிறகு அதன் மேல் பூரண உருண்டையை நடுவில் வைத்து, நான்கு புறமும் மைதா மாவைக் கொண்டு நன்கு மூடவும். பிறகு அதனை வட்டமாக போளி போல் தட்டவும். 
 
 பிறகு ஒரு தவாவை அடுப்பில் வைத்து நெய்யைத் தடவி தட்டி வைத்துள்ள போளியைப் போடவும். இவ்வாறு இரு பக்கமும் நெய்யைத் தடவி, கேஸை சிம்மில் வைத்து வேக விட்டு எடுத்து வைக்கவும். 
 
இப்போது சுவையான, இனிப்பான தேங்காய் போளி ரெடி!!!

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home