Monday, 10 November 2014

ஆரோக்கியத்தைத் தரும் சத்து மாவு உருண்டை

சத்து மாவு நிறைய தானியங்களைக் கொண்டு செய்யப்படுவதால், இதனை அன்றாடம் உட்கொண்டு வருவது உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. வேண்டுமானால் இதனை காலை வேளையில் கூட சாப்பிடலாம். அதிலும் டயட்டில் இருப்போர் இதனை காலை உணவாக உட்கொள்வது நல்லது. 

குறிப்பாக குழந்தைகளுக்கு அன்றாடம் கொடுப்பது மிகவும் சிறந்தது. இங்கு அந்த சத்து மாவு உருண்டையை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து அவற்றை அன்றாடம் செய்து சாப்பிட்டு ஆரோக்கியமாக இருங்கள்.

ஆரோக்கியத்தைத் தரும் சத்து மாவு உருண்டை
தேவையான பொருட்கள்: 

சத்து மாவு - 1 கப் 
வெல்லம்/கருப்பட்டி - 1/3 கப் 
நெய் - 2 டேபிள் ஸ்பூன் 
ஏலக்காய் பொடி - 1 சிட்டிகை 

செய்முறை: 

முதலில் சத்து மாவை ஒரு வாணலியில் போட்டு அடுப்பில் வைத்து, 8-10 நிமிடம் நன்கு மணம் வெளிவரும் வரை வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். 

பின்னர் வெல்லம்/கருப்பட்டியை தட்டி/துருவிக் கொண்டு, ஒரு வாணலியில் போட்டு, அதில் 2 டேபிள் ஸ்பூன் தண்ணீர் ஊற்றி, வெல்லம் நன்கு கரைந்து, சற்று கெட்டியாக தேன் போன்ற பதத்திற்கு வரும் போது அதனை இறக்கி, குளிர வைக்க வேண்டும். 

பின்பு அதனை வறுத்து வைத்துள்ள சத்து மாவில் சேர்த்து, அத்துடன் ஏலக்காய் பொடியையும் சேர்த்து கிளறி விட வேண்டும். பிறகு நெய்யை சூடேற்றி, அதனையும் சத்து மாவுடன் சேர்த்து நன்கு கிளறி உருண்டைகளாகப் பிடித்தால், சத்து மாவு உருண்டை ரெடி!!!

Labels:

வேர்க்கடலை லட்டு: தீபாவளி ரெசிபி

இந்த வருட தீபாவளிக்கு வித்தியாசமான பலகாரங்கள் செய்ய நினைத்தால், வேர்க்கடலை லட்டு செய்யுங்கள். இந்த லட்டு செய்வது மிகவும் ஈஸி மட்டுமின்றி, வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடுமாறு இருக்கும். 

இங்கு வேர்க்கடலை லட்டு ரெசிபியின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து இந்த தீபாவளி ஸ்பெஷலாக செய்து சுவைத்து மகிழுங்கள்.

வேர்க்கடலை லட்டு: தீபாவளி ரெசிபி

தேவையான பொருட்கள்: 

பச்சை வேர்க்கடலை - 1 கப் 
வெல்லம் - 1/2 கப் 

செய்முறை: 

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வேர்க்கடலையை சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும். 

எப்போது வேர்க்கடலையில் உள்ள தோல் தானாக வெளிவர ஆரம்பிக்கிறதோ, அப்போது அதனை இறக்கி, அதில் உள்ள தோலை நீக்கி விட வேண்டும். 

பின்னர் அதனை சிறிது நேரம் குளிர வைத்து, பின் மிக்ஸியில் போட்டு கொரகொரவென்று பொடி செய்து, அத்துடன் வெல்லத்தையும் சேர்த்து நன்கு 5 நிமிடம் நன்கு அடிக்க வேண்டும். 

பின்பு அதனை ஒரு தட்டில் போட்டுக் கொண்டு, அதனை உருண்டைகளாக பிடிக்க வேண்டும். இதில் நெய் எதுவும் சேர்க்கத் தேவையில்லை. வேர்க்கடலையிலேயே ஏற்கனவே எண்ணெய் இருப்பதால், சாதாரணமாக உருண்டைகளாகப் பிடிக்கலாம். 

இறுதியில் அதனை காற்றுப் புகாத டப்பாவில் போட்டு வைத்தால், நீண்ட நாட்கள் இதனை வைத்து சாப்பிடலாம்.

Labels:

பாதாம் பால் பூரி

மாலை வேளையில் பசியுடன் இருக்கும் குழந்தைகளின் பசியைப் போக்க வேண்டுமெனில், பாதாம் பால் பூரியை செய்து கொடுங்கள். இந்த பாதாம் பால் பூரியானது மிகவும் ஆரோக்கியமானது. குறிப்பாக இதில் பால், பாதாம் சேர்த்திருப்பதால், இதனை குழந்தைகளுக்கு கொடுத்தால் அவர்களின் எலும்பு மற்றும் கற்கள் வலிமையடையும். 

மேலும் இதில் உள்ள பாதாம் நரம்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும். எனவே அவ்வப்போது குழந்தைகளுக்கு பாதாம் பால் பூரியை செய்து கொடுங்கள். 

இதனை பால் போளி என்றும் சொல்வார்கள். சரி, இப்போது அந்த பாதாம் பால் பூரியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! 

பாதாம் பால் பூரி

தேவையான பொருட்கள்: 

பால் - 1 லிட்டர் 
கோதுமை மாவு - 2 கப் 
சர்க்கரை - 2 கப் 
நெய் - 1 டேபிள் ஸ்பூன் 
பாதாம் - 10 
மஞ்சள் நிற கேசரி பவுடர் - 1 சிட்டிகை 
பாதாம் எசன்ஸ் - 4 துளிகள் 
குங்குமப்பூ - 2 சிட்டிகை 

செய்முறை: 

முதலில் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை சேர்த்து, அதில் நெய், 1 டீஸ்பூன் சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு மென்மையாக பிசைந்து, 15 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அதனை சிறு உருண்டைகளாக உருட்டி, பூரிகளாக தேய்த்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தேய்த்து வைத்துள்ள பூரிகளை போட்டு பொரித்து எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின் பாதாமை சுடுநீரில் 1 மணிநேரம் ஊற வைத்து, அதில் உள்ள தோலை நீக்கிவிட்டு, பின் அதனை மிக்ஸியில் போட்டு பால் சிறிது சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி, அதில் அந்த பேஸ்ட்டை சேர்த்து குறைவான தீயில் நன்கு கொதிக்க விட்டு, அத்துடன் கேசரி பவுடர் மற்றும் எசன்ஸ் சேர்த்து கொதிக்க விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.

இறுதியில் பாலானது வெதுவெதுப்பாக இருக்கும் போது, அதில் குங்குமப்பூ சேர்த்து கலந்து, பின் பூரிகளை அதனுள் சேர்த்து ஊற வைத்து பரிமாறினால், சுவையான பாதாம் பால் பூரி ரெடி!!!

Labels:

மலாய் குலாப் ஜாமூன்

ரக்சா பந்தன் வரப்போகிறது. அனைவரும் தங்கள் அண்ணன்களுக்கு ஏதேனும் ஸ்பெஷல் ரெசிபியை செய்து அசத்த ஆசைப்பட்டால், அத்தகையவர்களுக்காக ஒரு எளிமையான முறையில் மலாய் குலாப் ஜாமூன் ரெசிபியைக் கொடுத்துள்ளோம். 

இந்த ரெசிபியை ரக்சா பந்தன் அன்று அண்ணன்கள் கையில் ராக்கி கட்டும் போது, செய்து கொடுத்தால், அண்ணனின் பாராட்டை நிச்சயம் பெறலாம். இப்போது அந்த மலாய் குலாப் ஜாமூன் ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

மலாய் குலாப் ஜாமூன்

தேவையான பொருட்கள்: 

பால் பவுடர் - 1 கப் 
வை - 4 டேபிள் ஸ்பூன் 
மைதா - 4 டேபிள் ஸ்பூன் 
பால் - 1 கப் 
பேக்கிங் பவுடர் - 1/2 டீஸ்பூன் 
நெய் - தேவையான அளவு 

உள்ளே நிரப்புவதற்கு... 

மலாய் - 1 கப் 
தேங்காய் - 1/2 கப் (துருவியது) 

சர்க்கரை பாகுவிற்கு... 

சர்க்கரை - 2 கப் 
தண்ணீர் - 2 கப் 

செய்முறை:


முதலில் ஒரு பாத்திரத்தில் மைதா, ரவை, பால் பவுடர், பால், பேக்கிங் பவுடர் மற்றும் நெய் ஊற்றி நன்கு மென்மையாக பிசைந்து, 3 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். 

ஒரு மணிநேரம் கழித்தப் பின்னர், அதில் மீண்டும் சிறிது பால் ஊற்றி, மென்மையாக பிசைந்து, 3 மணிநேரம் ஊற வைத்து, பின் சிறு உருண்டைகளாக்கி, தட்டில் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். 

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான நெய் ஊற்றி சூடேற்ற வேண்டும். அதே நேரத்தில், மற்றொரு அடுப்பில் ஒரு அகன்ற பாத்திரத்தை வைத்து, அதில் தண்ணீர் மற்றும் சர்க்கரை போட்டு, தீயை குறைவில் வைத்து சர்க்கரை கரையும் வரை கிளறி, அதனை இறக்கி வடிகட்டி, குளிர வைக்க வேண்டும்.

 இப்போது நெய்யானது காய்ந்திருக்கும். இந்நிலையில் தீயை குறைவில் வைத்து, உருண்டைகளை போட்டு பொன்னிறமாக பொரித்து, சர்க்கரை பாகுவில் போட்டு, 3-4 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.

Labels:

Tuesday, 25 June 2013

சீஸ் வாழைப்பழ போண்டா

மாலையில் போண்டா சாப்பிட்டால் நன்றாக இருக்கும். அதிலும் பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் குழந்தைகளுக்கு பிடித்தவாறு இனிப்பான சுவையில் போண்டா செய்து கொடுத்தால், குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். அந்த வகையில் ஆரோக்கியத்தை தரும் வாழைப்பழத்தைக் கொண்டு, அருமையான முறையில் ஒரு போண்டா செய்து கொடுக்கலாம். 
 
 இப்போது அந்த சீஸ் வாழைப்பழ போண்டாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

cheesy banana bonda  
தேவையான பொருட்கள்: 
 
சீஸ் - 1 கப் (துருவியது) 
கனிந்த வாழைப்பழம் - 4 (மசித்தது) 
கோதுமை மாவு - 1 கப் 
மைதா - 1/2 கப் 
சீரகப் பொடி - 1/2 டீஸ்பூன் 
மிளகு தூள் - தேவையான அளவு 
தயிர் - 2 டேபிள் ஸ்பூன் 
சர்க்கரை - 5 டேபிள் ஸ்பூன் 
 எண்ணெய் - தேவையான அளவு 
 
செய்முறை:  
 
முதலில் ஒரு பௌலில் வாழைப்பழம், துருவிய சீஸ், கோதுமை மாவு, மைதா மாவு, மிளகு தூள், சீரகப் பொடி, தயிர், சர்க்கரை சேர்த்து, வேண்டுமெனில் தண்ணீர் ஊற்றி, போண்டா பதத்திற்கு பிசைந்து, 2-3 மணிநேரம் மூடி ஊற வைக்க வேண்டும். 
 
 பின்பு ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிசைந்து வைத்துள்ள போண்டா மாவை உருண்டை பிடித்து, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். 
 
இப்போது சுவையான சீஸ் வாழைப்பழ போண்டா ரெடி!!!

Labels:

ஈஸியான... கேரட் அல்வா

அல்வா என்றாலே திருநெல்வேலி அல்வா மட்டும் தான் அனைவரது நினைவுக்கும் வரும். ஏனெனில் அங்கு தான் அல்வா நன்கு சுவையோடு, சூப்பராக இருக்கும். ஆனால் அத்தகைய அல்வாவில் ஒன்றான கேரட் அல்வாவை எளிதாக வீட்டிலேயே செய்யலாம். அதிலும் 30 நிமிடங்களிலேயே அருமையான சுவையில் கேரட் அல்வா செய்யலாம்.
 
பொதுவாக நிறைய பேர் கேரட் அல்வாவை ட்ரை செய்திருப்பார்கள். ஆனால் அல்வாவை செய்ய போய், அல்வாவைத் தவிர பசையை செய்தவர்கள் தான் அதிகம். இங்கு கேரட் அல்வாவை எப்படி எளிதில் செய்வதென்று கொடுத்துள்ளோம். அதை ட்ரை செய்து பார்த்து, எப்படியிருந்தது என்று சொல்லுங்கள்.

ஈஸியான... கேரட் அல்வா
தேவையான பொருட்கள்:

துருவிய கேரட் - 4 கப்
பால் - 2 கப்
தண்ணீர் - 1.5 கப்
கண்டென்ஸ்ட் மில்க் - 1/3 கப்
நெய் - 1 டேபிள் ஸ்பூன்
முந்திரி - 12
உலர் திராட்சை - 10
ஏலக்காய் பொடி - 1 சிட்டிகை

செய்முறை:

முதலில் பிரஷர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் கேரட், பால் மற்றும் தண்ணீர் ஊற்றி, 2 விசில் விட்டு இறக்க வேண்டும்.

அதே சமயம், ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், முந்திரி, உலர் திராட்சை ஆகியவற்றை நன்கு பொன்னிறமாக வறுத்துத் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு பிரஷர் குக்கரை திறந்து, அதனை அப்படியே அடுப்பில் வைத்து, 10-15 நிமிடம் தீயை குறைவில் வைத்து கொதிக்க விட வேண்டும். (அதுவும் கலவையானது சற்று கெட்டியாகும் வரை கொதிக்க விட வேண்டும்.)

அடுத்து அதில் கண்டென்ஸ்ட் மில்க் சேர்த்து நன்கு 2-3 நிமிடம் கிளறி விட வேண்டும். (சர்க்கரை சேர்க்காததால், தேவையான அளவு கண்டென்ஸ்ட் மில்க் சேர்த்துக் கொள்ளலாம்.)

பின்னர் வறுத்து வைத்துள்ள முந்திரி மற்றும் உலர் திராட்சை சேர்த்து கிளறி, அத்துடன் அந்த நெய்யையும் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

இறுதியில் அதன் மேல் ஏலக்காய் பொடியைத் தூவி, பிரட்டி விட வேண்டும். கலவையானது நன்கு அல்வா பதத்திற்கு வந்த பின்னரே, அதனை அடுப்பில் இருந்து இறக்க வேண்டும்.
இப்போது சுவையான கேரட் அல்வா ரெடி!!!

குறிப்பு:

வேண்டுமெனில் கேரட் அல்வா செய்த பின்னர், பாதாம் மற்றும் பிஸ்தாவை துருவி, அதன் மேல் தூவி பரிமாறலாம்.

Labels:

Wednesday, 29 May 2013

போஹா செய்து அம்மாக்களை அசத்தலாமா!!!

போஹா என்பது ஒரு இனிப்பு பலகாரம். இது வட இந்தியாவில், குறிப்பாக உத்தர பிரதேசத்தில் மிகவும் பிரபலமானது. இதனை பண்டிகைக் காலங்களில் செய்வார்கள். இதுவரை அம்மாக்கள் தான் சமையல் செய்து கொடுப்பார்கள். ஆனால் அன்னையர் தினத்தன்று, அம்மாக்களை உட்கார வைத்து, அவர்கள் மகிழும் வகையில், அவர்களுக்கு ஏதேனும் ஒரு இனிப்பு பலகாரம் செய்து கொடுக்கலாம். 
 
அதில் செய்வதற்கு எளிமையாகவும், சுவையுடனும் இருக்கும், இந்த போஹா ரெசிபி சரியானதாக இருக்கும். சரி, அதன் செய்முறையைப் பார்ப்போமா!!!

poha recipe your sweet mom  
தேவையான பொருட்கள்: 
 
கோதுமை மாவு - 2 கப் 
சர்க்கரை - 1 கப் 
பால் - 1 1/2 கப் 
துருவிய தேங்காய் - 1 கப் 
எண்ணெய் - 1 கப் 
 
செய்முறை: 
 
முதலில் ஒரு பௌலில் கோதுமை மாவு, சர்க்கரை, தேங்காய் சேர்த்து கிளற வேண்டும். 
 
பின்னர் அக்கலவையில் பாலை பொறுமையாக கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி, போண்டா மாவு பதத்திற்கு பிரட்டிக் கொள்ள வேண்டும். 
 
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தீயை குறைவில் வைத்து, பின் அந்த மாவுக் கலவையை சிறு உருண்டைகளாக எண்ணெயில் போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். 
 
இப்போது சுவையான போஹா ரெசிபி ரெடி!!!

Labels:

Saturday, 27 April 2013

வாழைப்பழ தேங்காய் பிரட்

குழந்தைகளுக்கு பிரட் என்றால் மிகவும் பிடிக்கும். அதிலும் இனிப்பு பிரட் என்றால் விரும்பி சாப்பிடுவார்கள். காலை வேளையில் குழந்தைகளுக்கு தோசை, இட்லி போன்றவை சாப்பிட்டு போர் அடித்திருந்தால், அப்போது அவர்களுக்கு வாழைப்பழத்தையும், தேங்காய் துருவலையும் வைத்து, ஒரு அருமையான சுவையில் பிரட் செய்யலாம். இந்த பிரட்டை மாலை வேளையில் ஸ்நாக்ஸ் போன்றும் செய்து கொடுக்கலாம். 
 
சரி, இப்போது அந்த வாழைப்பழ தேங்காய் பிரட்டை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

banana n coconut bread recipe
தேவையான பொருட்கள்:  
 
மைதா மாவு - 2 கப் 
பேக்கிங் சோடா - 3/4 டீஸ்பூன் 
உப்பு - 1/2 டீஸ்பூன் 
சர்க்கரை - 1 கப் 
எண்ணெய் - 1/2 கப் 
முட்டை - 3 
தயிர் - 1 கப் 
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன் 
வாழைப்பழம் - 2 (மசித்தது) 
தேங்காய் துருவல் - 1/2 கப் (வறுத்தது) 
தேங்காய் துருவல் - 1/2 கப் 
வென்னிலா எசன்ஸ் - 1/2 டீஸ்பூன் 
 
செய்முறை: 
 
முதலில் மைக்ரோவேவ் ஓவனை 350 டிகிரியில் சூடேற்றிக் கொள்ள வேண்டும். 
 
பின் பிரட் பேனை எடுத்துக் கொண்டு, அதில் எண்ணெய் தடவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். 
 
பின்னர் ஒரு பௌலில் மைதா, பேக்கிங் சோடா மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். 
 
 பின்பு மற்றொரு பௌலில் சர்க்கரை, முட்டை, வென்னிலா எசன்ஸ், எண்ணெய், தயிர் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து, ஒரு ஸ்பூனை வைத்து நன்கு கிளறி விட வேண்டும். 
 
அடுத்து மசித்து வைத்துள்ள வாழைப்பழம் மற்றும் வறுத்த தேங்காய் துருவலை, முட்டை கலவையுடன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பிறகு அதே கலவையில் மாவை மெதுவாக போட்டு கிளறி விட்டு, அதனை பிரட் பேனில் ஊற்றி, பின் அதன்மேல் தேங்காய் துருவலை தூவி, பிறகு ஒரு அலுமினிய பேப்பரினால் அதனை சுற்றி, ஓவனில் 30 நிமிடம் வைத்து எடுக்க வேண்டும். 
 
 அவ்வாறு எடுக்கும் போது, அதனை ஒரு கத்தியினால் வெட்டும் போது, கத்தியில் மாவானது ஒட்டிக் கொண்டால், மீண்டும் அதனை 30 நிமிடம் ஓவனில் வைத்து எடுக்க வேண்டும். 
 
இப்போது பிரட்டானது ரெடியாகியிருக்கும். அதனை குளிர வைத்து பரிமாறலாம். குறிப்பு: இந்த பிரட்டை சரியாக பராமரித்து வந்தால், 2-3 நாட்களுக்கு நன்றாக இருக்கும்.

Labels:

Tuesday, 16 April 2013

கும்மாயம்

தேவையான பொருட்கள்:
 
பச்சரிசி - கால் ஆழாக்கு 
உளுத்தம் பருப்பு- அரை ஆழாக்கு 
பாசிப்பருப்பு- 2 ஆழாக்கு 
வெல்லம் - அரை கிலோ 
நெய் - 200 கிராம் 
 
செய்முறை: 
 
 பாசிப்பருப்பு, உளுத்தம் பருப்பு, பச்சரிசி மூன்றையும் தனித் தனியாக நன்கு வறுத்துக் கொள்ளவும். 
 
வறுத்தவற்றை ஒன்றாகச் சேர்த்து மிஷினில் கொடுத்து அரைத்துக் கொள்ளவும். அரைத்த மாவை சல்லடையால் சலித்துக் கொள்ளவும். 
 
ஒரு பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைக்கவும். வெல்லம் நன்கு கரைந்ததும், வடிகட்டிக் கொள்ளவும். சலித்த மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு, வெல்லத்தை ஊற்றவும். 
 
நன்றாக தோசை பதத்தில் கரைத்து, அடுப்பில் வைக்கவும். நெய்யைக் கொஞ்சம், கொஞ்சமாக ஊற்றிக் கிளறவும். மாவு வெந்ததும் பளபளவென்று வரும். வந்தவுடன் இறக்கி விடவும். சூப்பரான கும்மாயம் ரெடி!

Labels:

மலாய் பேடா

தேவையான பொருட்கள்:
பால் - 1 லிட்டர். 
சர்க்கரை - அரை கப் 
கார்பிளவர் - 3 ஸ்பூன் 
குங்கும பூ - 5 ஸ்பூன் 
ஏலக்காய், சோம்பு - சிறிதளவு 
சிட்ரிக் அமிலம் - சிறிதளவு 
பிஸ்தா 
 செய்முறை 
முதலில் பாலை ஒரு வாணலியில் ஊற்றி நன்றாக பாதியாக வரும் வரை காய்ச்ச வேண்டும். குங்குமப் பூவை மற்றொரு பாத்திரத்தில் போட்டு சூடு செய்து அத்துடன் சிறிது பாலை ஊற்றி, குங்குமபூ கரையும் வரை கலக்க வேண்டும். 
 இத்துடன் காய்ச்சிய பாலை ஊற்றி சர்க்கரையை சேர்த்து கிளறிவிடவும். பின்னர் சிட்ரிக் அமிலத்தை சிறிது தண்ணீரில் கலக்கி இத்துடன் சிறிது சிறிதாக கட்டி சேராமல் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும். 
கார்ன் பிளவர் மாவுடன் சிறிது பாலை சேர்த்து கலக்கி, இந்த கலவையுடன் சேர்க்கவும். தொடர்ந்து கிளறிவிட்டுக் கொண்டிருக்கவும். 
ஏலக்காய் மற்றும் சோம்புவை பொடி செய்து இத்துடன் சேர்க்கவும். சிறிது நேரம் ஆறவிட்ட பின், இந்த கலவையை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி சிறிய பேப்பர் கப்களில் வைத்து அதன் மீது பாதாம் பருப்பை தூவி அலங்காரம் செய்யவேண்டும். 
சுவையான மலாய் பேடா ரெடி.

Labels:

பாசிப்பருப்பு நெய் உருண்டை!

Moong Dal Laddu Aid0174பாசிப் பருப்பு புரதச் சத்து நிறைந்தது. இதில் எளிதான ஏராளமான பலகாரங்களை செய்யலாம். பாயசம், நெய் உருண்டை போன்றவைகள் பாரம்பரியம் மிக்கவை. பாசிபருப்பு நெய் உருண்டையானது சத்து மிக்கது. இதனை குழந்தைகளுக்கு கொடுத்து வர அபார வளர்ச்சி தெரியும்.
 
தேவையான பொருட்கள் 
 
பாசிப் பருப்பு – 2 கப் 
சர்க்கரை - 2 கப் 
நெய் 200 கிராம் 
ஏலக்காய் – 6 
முந்திரி உடைத்தது 50 கிராம் 
 
 
நெய் உருண்டை செய்முறை 
 
பாசிப் பருப்பை வாணலியில் சூடாகும் வரை வறுக்கவேண்டும். வாசனை வரும் வரை வறுத்தால் போதுமானது. 
 
வறுத்த பருப்பை மிக்சியில் அரைக்கவும். அதனை சலித்து எடுத்து நைசான மாவை லட்டுக்கு வைத்துக் கொள்ளவும். 
 
அதேபோல் சர்க்கரையையும் மிக்சியில் அரைத்து கலக்கவும். இதோடு மூன்று ஏலக்காய் சேர்க்கவும். ஏலக்காயை லேசாக நெய்யில் வறுத்து, தோலோடு சேர்த்து மிக்சியில் பொடி செய்து கொள்ளவும்.
 
முந்திரிப் பருப்பை சிறிது நெய்யில் வறுத்து வைத்துக் கொள்ளவும். எல்லாவற்றையும் கலந்து ஒரு பேசினில் போட்டு வைக்கவும். வாணலியில் 200 கிராம் நெய் ஊற்றி உருக்கவும். நெய் கருகாமல் சூடான உடன் அதை மாவின் மேல் ஊற்றவும். 
 
அதை மாவை கலந்து வெது வெதுப்பான சூட்டிலேயே கையால் லட்டு பிடிக்கவும். ஒரு தட்டில் இட்டு ஆற வைக்கலாம். பின்னர் டப்பாவில் போட்டு மூடிவைத்து சாப்பிடும் போது எடுத்துக்கொள்ளலாம். 
 
10 நாட்கள் வரை கெடாமல் இருக்கும். சுவையான சத்தான இனிப்பு இது. செட்டிநாட்டுப் பக்கம் மிகவும் பிரபலமானது. திருவிழாக்காலங்களில் இதனை செய்து விருந்தினர்களை உபசரிப்பது வழக்கம்

Labels:

செட்டிநாடு வெல்ல அதிரசம்

Athirasam South Indian Sweet Recipe Aid0174அதிரசம் என்பது தமிழ்நாட்டில் தென்மாவட்டங்களில் செய்யப்படும் சுவையான, சத்தான இனிப்பு பலகாரம். திருவிழா காலங்களில் விருந்தினர்களை உபசரிக்க இந்த இனிப்பு செய்வது வழக்கம். ஒருவாரம் வரை கெட்டுப்போகாது வைத்திருந்து சாப்பிடலாம். அரிசி மாவு, வெல்லம் சேர்த்து செய்வதால் சத்தான பலகாரம் செய்து கொடுத்த திருப்தியும் கிடைக்கும். 
 
தேவையான பொருட்கள் 
 
அரிசி – அரை கிலோ 
வெல்லம் – 300 கிராம் 
ஏலக்காய் சிறிதளவு 
நெய் – 1 டேபிள் ஸ்பூன் 
எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு 
 
அதிரசம் செய்முறை 
 
 பச்சரிசியை 4 மணி நேரம் ஊற வைத்து நீரை நன்கு வடிகட்டி ஒரு வெள்ளைத் துணியில் பரப்பி விடவும். அதிக நேரம் காயக் கூடாது. சற்று ஈரமாக உள்ளபோதே பச்சரிசியை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். மாவினை நைசாக சலித்துக் கொள்ளவும். 
 
வெல்லத்தை தூளாக்கி அடிகனமான பாத்திரத்தில் போட்டு வெல்லம் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். வெல்லப்பாகினை பதம் வரும் வரை கொதிக்க விடவும். (கையில் எடுத்து தொட்டால் பிசுபிசுப்பாக இருக்கும்) பதம் வந்தவுடன் அதில் ஏலக்காயை பொடித்து போடவும்.
 
 பின்னர் அரிசி மாவை சிறிது சிறிதாக தூவி கட்டிகள் இல்லாமல் கிளறவும். மாவு நன்கு வெந்து குமிழ் குமிழாக வரும் போது நெய் ஊற்றி இறக்கவும். ஆறிய பின் காற்றுப் புகாத, ஈரமில்லாத டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளவும். இந்த மாவு 10 முதல் 15 நாட்கள் வரை கெடாது. 
 
தேவைப்படும் போது அதிசரங்களாகத் தட்டி எண்ணெயில் பொரித்தெடுத்து, எண்ணெய்யை ஒரு பேப்பரில் உறிஞ்சி எடுக்கவும். குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் ஏற்ற சத்தான சுவையான இனிப்பு அதிரசம் தயார். மாவு கிளறியவுடன் அதிரசம் சுடுவதை விட இரண்டு நாட்கள் கழித்து அதிரசம் செய்தால் ருசி கூடுதலாக இருக்கும்.

Labels:

Saturday, 13 April 2013

ஃபுரூட் பேஸ்ட்

சில நேரங்களில் குழந்தைகளை பழம் சாப்பிட வைப்பது மிகவும் கடினமாக உள்ளது. ஆகவே அவர்களுக்கு பழங்களை பேஸ்ட் செய்து கொடுத்தால், சற்று வித்தியாசமான சுவையில் இருக்கும். மேலும் இதனை அப்படியே வேண்டுமானாலும் சாப்பிடலாம் அல்லது ரொட்டி மீது தடவியோ அல்லது பாலுடன் சேர்த்தும் உபயோகிக்கலாம். அதிலும் இங்கே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் அளவானது ஒரு பெரிய பாட்டில் முழுவதும் வரும்.

ஆகவே அதனை சேகரித்து வைத்து, வசதிக்கேற்ப பயன்படுத்திக் கொள்ளலாம்

how make toddler fruit paste
தேவையான பொருட்கள்:

வாழைபழம் - 3
ஆப்பிள்/பேரிக்காய் - 2
ஆரஞ்ச் ஜுஸ் - 100 மி.லி
ஸ்ட்ராபெர்ரி - 3 கையளவு
சர்க்கரை - 5 டீஸ்பூன் (குறிப்பாக எளிதில் திருப்திப்படுத்த முடியாத குழந்தைகளுக்காக)

செய்முறை:

ஆப்பிளின் தோலுரித்த பிறகு, அதன் மையப்பகுதியை நீக்கிக் கொள்ளவும்.
வாழைப்பழங்களின் தோலை உரித்து, சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்.
பின் எல்லாவற்றையும் ப்ளெண்டரில் போட்டு, நன்றாக பேஸ்டாக வரும் வரை கலக்கவும்.

பின்பு ஸ்ட்ராபெர்ரியில் உள்ள பச்சை நிற காம்பு பகுதியை நீக்கி ப்ளெண்டரில் போட்டு, சர்க்கரை சேர்த்து, 5-8 விநாடிகள் மெதுவாக கலவையை கலக்கவும்.
பின்பு ஆரஞ்சு சாற்றை சேர்த்து 2 விநாடி கலக்கவும்.

இப்போது வெளிர் இளஞ்சிவப்பு நிறத்தில் பழ பேஸ்ட்டானது தயாராகியிருக்கும்.

பிறகு ஒரு கண்ணாடி ஜாடியில் அதனை ஊற்றி, குளிர்சாதன பெட்டியில் வைத்து, இரண்டு வாரங்களுக்கு பயன்படுத்தலாம்.

குறிப்புகள்:

சிறிது பெரிய குழந்தைகளுக்கு, இக்கலவையுடன் சர்க்கரைக்கு பதிலாக தேன் சேர்த்து கொடுப்பது மிகவும் ஆரோக்கியமானது.


எச்சரிக்கைகள்:

* 1 வயதிற்குள் இருக்கும் குழந்தைகளுக்கு தேன் சேர்க்கக் கூடாது. அது அவர்களுக்கு கெடுதலை செய்யும்.
* அதிக சர்க்கரை சேர்க்க கூடாது, அது புதிதாக வளரும் பற்களுக்கு கெடுதலை செய்யும்.

Labels:

Sunday, 7 April 2013

காரடையான் நோன்பு அடை

பெண்கள் காரடையான் நோன்புக்கு படைக்கவும், விரதம் முடிந்த பின்பு சாப்பிடவும் இந்த அடை செய்வார்கள். நோன்பின்போது மட்டுமல்ல சாதாரண நாட்களிலும் சமைத்து சாப்பிட சத்தான சிற்றுண்டி இது. 
 
தேவையான பொருட்கள் 
 
 வறுத்த பச்சரிசி மாவு 1 கப் 
காராமணி 1/4 கப் 
Karadaiyan Nonbu Adai Recipe Aid0174தேங்காய் சிறிய பற்களாக கீரியது - அரை கப் 
வெல்லம் (பொடித்தது) 1 கப் 
ஏலக்காய் தூள் 1 டீ ஸ்பூன்
தண்ணீர் 2 கப்

அடை செய்முறை: 
 
காராமணியை வேகவிட்டு வடித்து வைத்துக் கொள்ளவும். 
 
ஒரு அகலமான பாத்திரத்தை எடுத்துக்கொண்டு இரண்டு கப் தண்ணீர் விட்டு வெல்லத்தைப்போட்டு கொதிக்கவிடவும். 
 
வெல்லம் நன்றாக கரைந்து தண்ணீர் "தள தள' என்று கொதிக்கும்போது காராமணி,தேங்காய் துண்டுகள்,ஏலப்பொடி சேர்க்கவும். வறுத்துவைத்துள்ள மாவை ஒரு கையால் கொட்டிக்கொண்டே மறுகையால் கிளறவும். 
 
மாவு நன்றாக வெந்ததும் கையில் லேசாக எண்ணைய் தடவி அதில் இந்த மாவை உருட்டி வைத்து அடைபோல் தட்டி வாழை இலையில் வைக்கவும். இதனை இட்லி பாத்திரத்தில் வைத்து பத்து நிமிடம் வேகவைத்து எடுக்கவும். காரடையான் நோன்பு அடை ரெடி.

Labels:

கடலைப் பருப்பு இனிப்பு போளி

Ugathi Special Sweet Poli Recipe Aid0174உகாதி பண்டிகையின் போது ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் செய்யப்படும் இனிப்பு பருப்பு போளி. இது சுவையானதோடு சத்தானதும் கூட. தென்தமிழ்நாட்டிலும், கொங்கு மண்டலத்திலும் இனிப்பு போளி செய்யப்படுகிறது.
 
தேவையானப் பொருட்கள் 
 
கடலைப்பருப்பு - 4 கப் 
அச்சு வெல்லம் - 10 பெரியது 
ஏலக்காய்த்தூள் - சிறிது 
மைதா மாவு - 2 1/2 கப் 
 சர்க்கரை – 2 டீ ஸ்பூன் 
நல்லெண்ணெய் - 200 மிலி

பூரணம் செய்முறை  
 
கடலைப்பருப்புடன் தண்ணீர் சேர்த்து குழைந்து போகாமல் வேகவைத்து எடுக்கவேண்டும். 
 
தண்ணீரை வடித்து சிறிது நேரம் உலர விட வேண்டும். பிறகு மிக்ஸியில் கடலைப்பருப்பையும் வெல்லத்தையும் கெட்டியாக சேர்த்து அரைக்க வேண்டும். 
 
அதில் ஏலக்காய்த்தூள் சேர்த்து கலக்க வேண்டும். இதை உருண்டைகளாக உருட்டி வைக்க வேண்டும்.


போளி செய்முறை 
 
மைதா மாவில் சிறிது சர்க்கரை மற்றும் தேவையான அளவு நீர சேர்த்து சப்பாத்தி மாவும் பதத்திற்கு பிசைந்து, கடைசியாக சிறிது நல்லெண்ணெய் சேர்த்து பிசைந்து வைக்க வேண்டும். 
 
5 மணிநேரம் ஊறவைக்க வேண்டும். ஒரு பிளாஸ்டிக் தாளில் சிறிதளவு மைதா மாவு கலவையை எடுத்து வைத்து கைகளால் அழுத்தி பரப்பி விடவும். அதன் மேல் கடலைபருப்பு உருண்டையை வைத்து மூடவும். 
 
பிறகு அதை ரொட்டி போல் தட்டவும். நல்லெண்ணை தொட்டு செய்தால் கைகளில் ஒட்டாமல் செய்யலாம்.
 
 தோசைக்கல்லில் வைத்து, சிறிது நல்லெண்ணை விட்டு சப்பாத்தி போல் சுட்டு எடுக்கவும். சூடான சுவையான பருப்பு போளி ரெடி. 
 
இதில் கடலைப்பருப்புடன் தேங்காய்த்துருவலை வறுத்தும் பூரணமாக சேர்த்து செய்யலாம். நல்லெண்ணெய்க்கு பதிலாக சுடும் போது நெய்யும் ஊற்றலாம்.

Labels:

பாசிப்பருப்பு பாயாசம்

உகாதி பண்டிகை விருந்தில் பாசிப்பருப்பு பாயாசம் முக்கியமாக இடம்பெரும். பாசிப்பருப்பு புரதச் சத்து நிறைந்தது. இதனுடன் வெல்லம், நெய், முந்திரி, திராட்சை சேர்த்து செய்யப்படும் பாயாசம் சுவையானதாக இருப்பதோடு கூடுதல் சத்துக்களையும் கொடுக்கும். இது குழந்தைகளுக்கும் விருப்பமானது. 
 
தேவையான பொருட்கள் 
 
பாசிப்பருப்பு - 200 கிராம் 
அச்சு வெல்லம் - 150 கிராம் 
பால் – 200 மிலி 
Pasi Parupu Payasam Moong Dhal Payasam Aid0174முந்திரி - 10 
உலர் திராட்சை - 10 
ஏலக்காய் - 2 
தேங்காய் துருவல் – 1 கப் 
நெய் – 4 ஸ்பூன் 
 
 பாயாசம் செய்முறை 
 
வாணலியில் சிறிதளவு நெய் ஊற்றி பாசிப்பருப்பை பொன்நிறமாக வறுத்து எடுத்து குக்கரில் குழைய வேக விடவும். 
 
வெல்லத்தை தூள் செய்து, ஒரு கப் தண்ணீரில் கரைத்து, வடிகட்டி, வேகவைத்த பாசிப்பருப்புடன் சேர்க்கவும். 
 
பால் சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விடவும். நெய்யில் முந்திரி, உலர் திராட்சை எல்லாவற்றையும் வறுத்து நெய்யோடு சேர்த்து, கொதிக்கும் பாயசத்தில் கொட்டவும். 
 
ஏலக்காயை தூளாக்கி சேர்க்கவும். கடைசியில் தேங்காய் பூவை லேசாக நெய்யில் வறுத்து சேர்த்த பின்னர் பாயசத்தை இறக்கவும். சுவையான சத்தான பாசிப்பருப்பு பாயாசம் தயார்.

Labels:

ரவா லட்டு ரெஸிபி

பள்ளி விடுமுறை விட்டாலே குழந்தைகளுக்கு சாப்பிட ஏதாவது செய்து கொடுத்துக்கொண்டே இருக்கவேண்டும். அதிக செலவில்லாத இனிப்பு, காரம் என்றால் பட்ஜெட்டிற்கும் பிரச்சினை இருக்காது நமது பட்ஜெட்டிற்கு ஏற்ற பலகாரங்களில் ரவா லட்டு முக்கியமானது. செலவும் குறைவாகவும், மிகவும் எளிய முறையிலும் வீட்டில் தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்

ரவை - ஒரு கப்
நெய் – 4 டீ ஸ்பூன்
சர்க்கரை - அரை கப்
தேங்காய் துருவல் - அரை கப்
ஏலக்காய் பொடி செய்தது - கால் ஸ்பூன்
நெய்யில் வறுத்த திராட்சை, முந்திரி - 10
சூடான பசும்பால் - அரை கப்

செய்முறை

அகலமான வாணலியில் நெய்யை ஊற்றி அதில் முந்திரி திராட்சையை போட்டு வறுத்து தனியே எடுத்து வைக்கவும்.

அதே நெய்யில் ரவையை போட்டு நன்றாக வறுத்து அகலமான பாத்திரத்தில் கொட்டவும்.

ரவையில் வறுத்த முந்திரி திராட்சை, ஏலக்காய் பொடி, தேங்காய் துருவல், பொடித்த சர்க்கரை சேர்த்து கலக்கவும்.

இதில் பசும்பாலை சிறிது சிறிதாக ஊற்றி கலக்கவும். உருண்டை பிடிக்கும் அளவுக்கு பால் ஊற்றினால் போதும். பின்னர் நமக்கு தேவையான அளவில் உருண்டை பிடித்து வைக்கலாம்.

சாப்பிட சுவையாக இருக்கும். செய்வதற்கும் எளிதான இனிப்பு இது. விடுமுறை நாட்களில் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

Labels:

நாவில் நீர் ஊற வைக்கும் ரசமலாய்!

தேவையான பொருட்கள்
Mouth Watering Rasmalai Aid0174 
பால் – 1 லிட்டர்
சீனி - 200 கிராம்
ஏலக்காய் - 4
குங்குமப் பூ - அரை கிராம்
வினிகர் - அரை மேசைக்கரண்டி

ரசமலாய் செய்முறை

பாத்திரத்தில் முக்கால் லிட்டர் பாலை ஊற்றி சுண்ட காய்ச்சவும். அதில் வினிகரை ஊற்றி பாலை திரிய விடவும். பால் திரிந்ததும் இறக்கி வைத்து ஒரு துணியில் போட்டு தண்ணீரை முழுவதுமாக வடித்து விடவும்.

10 நிமிடம் கழித்து தண்ணீர் வடிந்த பின்னர் தயாராக எடுத்துக் கொள்ளவும். ரசமலாய் செய்ய பனீர் தயார். இந்த பனீரை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எடுத்து வேண்டிய வடிவங்களில் தட்டி வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் கால் லிட்டர் பாலை ஊற்றி காய்ச்சவும். அதில் ஏலக்காய் பொடி, குங்குமப் பூ, சீனி சேர்த்து கலக்கவும். மிதமான தீயில் காய்ச்சவும். பால் நன்கு காய்ந்ததும் அதில் தயார் செய்து வைத்திருக்கும் பனீர் உருண்டைகளை போட்டு மூடி விடவும்.

5 நிமிடம் கழித்து திறந்து மெதுவாக உடைந்து போகாமல் கிளறவும். இப்போது சுவையான ரசமலாய் ரெடி. பாத்திரத்தை அடுப்பில் இருந்து இறக்கி வைக்கவும்.

ரசமலாயை தனியாக கிண்ணத்தில் போட்டு ஃப்ரிட்ஜ்சில் வைத்து ஜில் என்றும் சாப்பிடலாம் சுவை கூடுதலாக இருக்கும்.

Labels:

ஈசியா செய்யலாம் அவல் லட்டு!

Aval Laddoo Recipe Aid0174குழந்தைகளுக்கு இனிப்பு என்றால் விருப்பம் அதிகம். அவர்களுக்கு எளிமையான முறையில் சத்தான இனிப்பு செய்துதரலாம். அவல் லட்டு பத்து நிமிடத்தில் தயாரிக்கலாம். எளிமையான சத்தான இனிப்பு இது. 
 
தேவையான பொருட்கள் 
 
அவல் – 1 கப் 
சர்க்கரை – 1 கப் 
தேங்காய் துருவல் வறுத்தது – ஒரு கப் 
முந்திரி, வறுத்த நிலக்கடலை - 1/2 கப் 
 
லட்டு செய்முறை 
 
உமி, தூசி இன்றி அவலை சுத்தம் செய்து வைக்கவும். 
 
அகலமான பாத்திரத்தில் சர்க்கரையைக் கொட்டி பதமாக பாகு காய்ச்சவும். இந்த பாகில் அவலைச் சேர்த்து நன்றாக கிளறவும். 
 
இத்துடன் முந்திரி, பிஸ்தா, வறுத்த நிலக்கடலை, தேங்காய் துருவல் ஆகியவைகளை சேர்த்து கிளற வேண்டும். 
 
அடுப்பிலிருந்து இறக்கிவைத்து மிதமான சூட்டில் லட்டு பிடிக்க வேண்டும். ஆறினால் இறுகலாகிவிடும் எனவே சூடு ஆறும் முன் லட்டு பிடிக்கவேண்டும்.

Labels:

பால் கேசர் பேடா

Kesar Peda Milk Sweet Recipe Aid0174தேவையான பொருட்கள்
பால் - 1லிட்டர்
சர்க்கரை - 2கப்
குங்குமப்பூ - சிறிதளவு
சோளமாவு - 2 டேபிள் ஸ்பூன்
பிஸ்தா, முந்திரி - 20

கேசர் பேடா செய்முறை

பாலை நன்றாகக் கொதிக்க வைத்து, அரை லிட்டர் ஆகும் வரை சுண்ட விடவும். இதில் சர்க்கரையைப் போட்டு நன்கு கிளறவும்.

 சர்க்கரை நன்கு கரைந்து பால் தோசை மாவு பதத்தில் திக்காக வந்ததும் அதில் 2 சிட்டிகை குங்குமப்பூவைப் போட்டுக் கலக்கவும்.

இதனுடன் தண்ணீரில் கரைத்த சோளமாவை சேர்த்துக் கிளறவும். கை விடாமல் கிளறவேண்டும். பால் நன்கு சுருண்டு வரும்.

அதைத் தட்டில் கொட்டி, ஆறியவுடன் நறுக்கிய பிஸ்தா, முந்திரி போட்டு வேண்டிய டிசைனில் கட் செய்து அலங்கரிக்கவும்.

Labels: