Saturday, 27 April 2013

இறால் குடைமிளகாய் குழம்பு

பொதுவாக கடல் உணவுகளில் இறால் மிகவும் சுவையாக இருக்கும். இறாலுக்கு என்றே நிறைய பிரியர்கள் உள்ளனர். இத்தகைய இறாலை இதுவரை தனியாகத் தான் குழம்பு செய்திருப்போம். ஆனால் இப்போது அவற்றை ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் நிறைந்திருக்கும் குடைமிளகாயுடன் சேர்த்து குழம்பு செய்யப் போகிறோம். அதிலும் சற்று வித்தியாசமாக, கோடையில் அதிகம் கிடைக்கும் மாங்காயையும் சேர்த்து செய்யலாம்.
 
 சரி, அந்த சுவையான இறால் குடைமிளகாய் குழம்பை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

prawn capsicum curry summer
தேவையான பொருட்கள்: 
 
இறால் - 500 கிராம் (சுத்தம் செய்தது) 
வெங்காயம் - 1 (நறுக்கியது) 
பூண்டு - 8 பல் (நறுக்கியது) 
குடைமிளகாய் - 1 (நறுக்கியது) 
தக்காளி - 1 (நறுக்கியது) 
புளி சாறு - 1 டேபிள் ஸ்பூன் 
பச்சை மாங்காய் - 1 டேபிள் ஸ்பூன் (துருவியது) 
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன் 
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் 
மல்லி தூள் - 1 டீஸ்பூன் 
பச்சை மிளகாய் - 2 
எண்ணெய் - தேவையான அளவு 
உப்பு - தேவையான அளவு 
 
செய்முறை: 
 
முதலில் இறாலை நன்கு கழுவி, அதில் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். 
 
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சற்று அதிகமாக எண்ணெய் ஊற்றி, இறாலைப் போட்டு பொன்னிறமாக பொரித்து, தனியாக ஒரு தட்டில் எடுத்து வைக்க வேண்டும். 
 
 பின்பு அதில் பச்சை மிளகாய், வெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு 5 நிமிடம் வதக்க வேண்டும். அடுத்து நறுக்கி வைத்துள்ள குடைமிளகாயை சேர்த்து, 3 நிமிடம் வதக்கிக் கொள்ளவும்.
 
 பிறகு தக்காளி, மிளகாய் தூள், மல்லி தூள் மற்றும் உப்பு சேர்த்து, 3-4 நிமிடம் கலவை ஒன்று சேரும் வரை வதக்கவும். பின் புளி சாறு மற்றும் துருவிய மாங்காய் சேர்த்து, 3-4 நிமிடம் கிளறி, 2 கப் தண்ணீர் ஊற்றி, நன்கு குழம்பை கொதிக்க வைக்க வேண்டும். 
 
 இறுதியில் குழம்பானது நன்கு கொதித்ததும், அதில் பொரித்து வைத்துள்ள இறாலை சேர்த்து 8-10 நிமிடம் கொதிக்க வைத்து, இறக்கி விட வேண்டும். 
 
இப்போது சுவையான இறால் குடைமிளகாய் குழம்பு ரெடி!!! 
 
இதனை சூடான சாதத்துடன் சாப்பிட்டால், சூப்பராக இருக்கும்.

Labels:

கொங்கன் ஸ்டைல் இறால் குழம்பு ரெசிபி

இந்தியாவில் கொங்கன் ஸ்டைல் உணவுகள் மிகவும் பிரபலமானது. அத்தகையவற்றில் கடல் உணவுகளில் ஒன்றான இறாலை வைத்து செய்யப்படும் கொங்கன் ஸ்டைல் இறால் குழம்பு மிகவும் சுவையானது. அந்த கொங்கன் ஸ்டைல் இறால் குழம்பை வீட்டிலேயே ஈஸியான முறையில் சமைக்கலாம். 
 
இப்போது அந்த கொங்கன் ஸ்டைல் இறால் குழம்பின் செய்முறையைப் பார்ப்போமா!!!
konkan style prawns recipe
தேவையான பொருட்கள்: 
 
 இறால் - 1 கிலோ (சுத்தம் செய்து கழுவியது) 
வெங்காயம் - 3 (பெரியது, நறுக்கியது) 
தக்காளி - 3 (பெரியது, நறுக்கியது) 
கொத்தமல்லி - 1 கட்டு (நறுக்கியது) 
பூண்டு - 3 டீஸ்பூன் (நறுக்கியது) 
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் 
புளி சாறு - 1 டீஸ்பூன் 
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் 
கிராம்பு - 2 
பட்டை - 1/2 இன்ச் 
உப்பு - தேவையான அளவு 
எண்ணெய் - தேவையான அளவு 
 
செய்முறை: 
 
 ஒரு சிறு பாத்திரத்தில் சுத்தமாக கழுவிய இறால், பூண்டு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், புளி சாறு மற்றும் 1 டீஸ்பூன் உப்பு சேர்த்து, 15-30 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கிராம்பு மற்றும் பட்டை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். 
 
பின்பு நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும். அடுத்து ஊற வைத்துள்ள இறாலை சேர்த்து நிறம் மாறும் வரை வதக்க வேண்டும். 
 
பிறகு நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்து 5 நிமிடமோ அல்லது இறால் சுருங்கி, எண்ணெய் தனியாக பிரியும் வரை நன்கு வதக்கி விட வேண்டும்.
 
 பின் நறுக்கி வைத்திருக்கும் கொத்தமல்லி சேர்த்து, வேண்டுமெனில் உப்பு சேர்த்து, 2 நிமிடம் கொதிக்க விட்டு, அடுப்பிலிருந்து இறக்கி, சாதம் அல்லது சப்பாத்தியுடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.

Labels:

ஆந்திரா ஸ்டைல் மட்டன் குழம்பு

ஆந்திரா ஸ்டைல உணவுகள் என்றாலே மிகவும் காரமாக இருக்கும். அதிலும் அசைவ உணவுகள் என்றால் சொல்லவே வேண்டாம், கண்களில் இருந்து தண்ணீர் வரும் அளவு காரமானது இருக்கும். ஆனால் அதற்கேற்றாற் போல் ஆந்திரா ஸ்டைல் உணவுகளின் சுவைக்கு நிகர் எதுவும் இருக்காது. இப்போது அத்தகைய ஆந்திரா ஸ்டைல் அசைவ குழம்புகளுள் ஒன்றான மட்டன் குழம்பை எப்படி எளிதில் வீட்டில் செய்வது என்று கொடுத்துள்ளோம். 
 
அதைப் படித்து தெரிந்து கொண்டு, வீட்டில் செய்து அசத்துங்கள்....

hot n spicy andhra style mutton cur
தேவையான பொருட்கள்: 
 
மட்டன் - 700 கிராம் 
வெங்காயம் - 2 (நறுக்கியது) 
தக்காளி - 2 (நறுக்கியது) 
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன் 
மிளகு - 10 
பச்சை ஏலக்காய் - 5 
சோம்பு - 1/2 டீஸ்பூன் 
கசகசா - 1 டீஸ்பூன் 
மல்லி - 1 டீஸ்பூன் 
சீரகம் - 1 டீஸ்பூன் 
பட்டை - 1 இன்ச் 
கிராம்பு - 5 
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் 
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் 
மிளகு தூள் - 1 டீஸ்பூன் 
கறிவேப்பிலை - சிறிது 
உப்பு - தேவையான அளவு 
எண்ணெய் - தேவையான அளவு 
 
 செய்முறை:  
 
முதலில் மட்டன் துண்டுகளை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். பின் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் கழுவிய மட்டனை போட்டு, உப்பு, மஞ்சள் தூள் மற்றும் 3 கப் தண்ணீர் ஊற்றி, 4 விசில் விட்டு இறக்க வேண்டும். 
 
 பின்னர் மற்றொரு அடுப்பில் வாணலியை வைத்து, அதில் சீரகம், கசகசா, மல்லி, மிளகு, கிராம்பு, ஏலக்காய், பட்டை மற்றும் சோம்பு சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும்.
 
 பின்பு அதனை குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு நைஸாக அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும். அடுத்து ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கறிவேப்பிலை போட்டு தாளித்து, நறுக்கிய வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கி, பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும். 
 
 பிறகு அதில் நறுக்கிய தக்காளி மற்றும் உப்பு சேர்த்து, தக்காளி நன்கு வதங்கும் வரை கிளறி விட வேண்டும். 
 
பின் வேக வைத்துள்ள மட்டன் கலவையை ஊற்றி, அரைத்து வைத்துள்ள பொடி, மிளகு தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து, நன்கு கிளறி, 2 கப் தண்ணீர் ஊற்றி, பச்சை வாசனை போகும் வரை மூடி வைத்து கொதிக்க விட்டு இறக்க வேண்டும். 
 
 இப்போது சுவையான ஆந்திரா ஸ்டைல் மட்டன் குழம்பு ரெடி!!! 
 
இதனை சாதம் அல்லது சப்பாத்தியுடன் சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.

Labels:

சூரை மீன் கிரேவி

மீன்களில் சால்மன் மற்றும் டூனா என்னும் சூரை மீன் மிகவும் ஆரோக்கியமானவை. இத்தகைய மீன்களில் அதிக சத்துக்கள் நிறைந்திருப்பதோடு, மிகுந்த சுவையும் உள்ளது. மேலும் இந்த மீன்களுள் சூரை மீனில் அதிகப்படியான ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் நிறைந்திருப்பதால், இது கண்களுக்கும், மார்பக புற்றுநோயை தடுப்பது மற்றும் பலவற்றிற்கும் பெரும் உதவியாக இருக்கும்.
 
 இத்தகைய சூரை மீனை வைத்து கிரேவி செய்து வாரத்திற்கு இரண்டு முறை சமைத்து சாப்பிட்டால், உடல் நன்கு வலுவோடும், ஆரோக்கியத்துடனும் இருக்கும். இப்போது இந்த சூரை மீனை வைத்து எப்படி கிரேவி செய்வதென்று பார்ப்போமா!!!
tuna fish gravy recipe
தேவையான பொருட்கள்: 
 
 சூரை மீன் - 2 டின் 
வெங்காயம் - 1 (நறுக்கியது) 
தக்காளி - 1 (நறுக்கியது) 
பூண்டு - 4-5 பல் (நறுக்கியது) 
இஞ்சி - 1 இன்ச் (நறுக்கியது) 
பச்சை மிளகாய் - 3 (நறுக்கியது) 
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் 
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் 
மல்லி தூள் - 1 டீஸ்பூன் 
சீரகப் பொடி - 1 டீஸ்பூன் 
தந்தூரி மசாலா - 1/2 டீஸ்பூன் 
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு 
எண்ணெய் - தேவையான அளவு 
 
 செய்முறை:  
 
சூரை மீன்களை நன்கு சுத்தம் செய்து, நீரில் கழுவி, நீரை வடித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். 
 
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தை போட்டு, பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும். 
 
 பின்பு இஞ்சி, பூண்டு, மஞ்சள் தூள் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து, 2 நிமிடம் நன்கு வதக்க வேண்டும். பிறகு உப்பு, மிளகாய் தூள், மல்லி தூள், தந்தூரி மசாலா, சீரகப் பொடி சேர்த்து, நன்கு கிளறி விட வேண்டும். 
 
 அடுத்து நறுக்கிய தக்காளியை போட்டு, 2-3 நிமிடம் தக்காளி நன்கு வதங்கும் வரை வதக்கி விட வேண்டும். 
 
பின் அதில் சூரை மீன்களை சேர்த்து ஒரு முறை கிளறி, தட்டு வைத்து 5-6 நிமிடம் மூடி வைத்து, பிறகு திறந்து அதில் தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து, நன்கு கொதிக்க விட வேண்டும். 
 
கிரேவியானது நன்கு கொதித்ததும், அதில் எலுமிச்சை சாறு சேர்த்து கிளறி இறக்கி விட வேண்டும். இப்போது சுவையான சூரை மீன் கிரேவி ரெடி!!! 
 
இதனை சாதம் அல்லது சப்பாத்தியுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.

Labels:

புதினா இறால் குழம்பு

தினமும் சைவ உணவுகளை சாப்பிட்டு போர் அடித்தவர்கள், அவ்வப்போது அசைவ உணவுகளையும் சமைத்து சாப்பிட வேண்டும். அதிலும் இறைச்சிக்கு பதிலாக கடல் உணவுகளில் ஒன்றான இறாலை சமைத்து சாப்பிட்டால் உடலும் ஆரோக்கியமாக இருக்கும். குறிப்பாக இது கோடைகாலம் என்பதால், உடலுக்கு புத்துணர்ச்சியையும், குளிர்ச்சியையும் தரும் புதினா மற்றும் கொத்தமல்லியை சேர்த்துக் கொண்டால் மிகவும் நல்லது. 
 
 எனவே இவைகள் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து, ஒரு புதுவிதமான ரெசிபியான புதினா இறால் குழம்பை செய்யலாம். இவை மிகவும் சுவையுடன் இருப்பதோடு, விருந்தினர்கள் வீட்டிற்கு வந்தால், அவர்கள் விரும்பி சாப்பிடும் வகையிலும் இருக்கும். சரி, இப்போது அந்த புதினா இறால் குழம்பின் செய்முறையைப் பார்ப்போமா!!!prawn curry with mint

தேவையான பொருட்கள்: 
 
இறால் - 200 கிராம் 
புதினா - 1 சிறிய கட்டு (சுத்தம் செய்தது) 
கொத்தமல்லி - 1/2 கட்டு (சுத்தம் செய்தது) 
இஞ்சி - 1 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது) 
வெங்காயம் - 2 (நறுக்கியது) 
பூண்டு - 5 பற்கள்
 பச்சை மிளகாய் - 1-2 
சீரகப் பொடி - 1/2 டீஸ்பூன் 
மல்லி தூள் - 1/2 டீஸ்பூன் 
தேங்காய் பால் - 100 மி.லி 
எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு 
எண்ணெய் - தேவையான அளவு 
தண்ணீர் - 1 1/2 கப் 
 
செய்முறை: 
 
இறாலை நன்கு கழுவி, அதில் உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து பிரட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். 
 
 பின்னர் புதினா, கொத்தமல்லி, பச்சை மிளகாய், சீரகப் பொடி, மல்லி பொடி, இஞ்சி, பூண்டு மற்றும் 1 வெங்காயம் ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு நன்கு நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும். 
 
 பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும். 
 
பின் அரைத்து வைத்துள்ள கலவையை ஊற்றி சிறிது நேரம் கொதிக்க விட்டு, தேங்காய் பாலை சேர்த்து, தீயை குறைவில் வைத்து, 5 நிமிடம் கொதிக்க விட வேண்டும். பின்பு ஊற வைத்துள்ள இறாலை சேர்த்து, 5 நிமிடம் வேக வைத்து, உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து, மீண்டும் 5 நிமிடம் நன்கு கொதிக்க விட்டு, இறால் வெந்ததும், தீயை அணைத்து இறக்கி விட வேண்டும். 
 
இப்போது சுவையான புதினா இறால் குழம்பு ரெடி!!! இதனை சாதத்துடன் சாப்பிட்டால், சூப்பராக இருக்கும்.

Labels:

நீலகிரி சிக்கன் குருமா

எப்போதும் ஒரே மாதிரியான சிக்கன் குழம்பை சாப்பிட்டு போர் அடித்திருக்கும். அவ்வாறு ஒரே மாதிரியை செய்து சாப்பிடுவதை விட்டு, தமிழ்நாட்டில் உள்ள வித்தியாசமான சில ஸ்டைல்களிலும் சிக்கனை செய்து சாப்பிடலாம். அவற்றில் ஒன்று தான் நீலகிரி ஸ்டைல். இதுமிகவும் குளிர்ச்சியான மலைப் பிரதேசம் என்பதால், இங்கு சற்று காரமாக சாப்பிட்டால் தான் நன்றாக இருக்கும். சரி இப்போது அங்கு செய்யப்படும் சிக்கன் குருமாவின் செய்முறையைப் பார்ப்போமா!!! 
 
தேவையான பொருட்கள்: 
 
 சிக்கன் - 1 கிலோ 
வெங்காயம் - 2 (நறுக்கியது) 
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 1/2 டேபிள் ஸ்பூன் 
தக்காளி - 1 (நறுக்கியது) 
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் 
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் 
எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன் 
கறிவேப்பிலை - சிறிது 
உப்பு - தேவையான அளவு 
எண்ணெய் - தேவையான அளவு

nilgiri chicken korma
அரைப்பதற்கு... 
 
 சீரகம் - 1 டீஸ்பூன் 
சோம்பு - 1 டீஸ்பூன் 
கசகசா - 1 டீஸ்பூன் 
பட்டை - 1 இன்ச் 
ஏலக்காய் - 2 
துருவிய தேங்காய் - 5 டேபிள் ஸ்பூன் 
முந்திரி - 8 
பச்சை மிளகாய் - 4 
கொத்தமல்லி - 3 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது) 
புதினா - 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது) 
தண்ணீர் - 3 1/2 கப் 
 
செய்முறை:  
 
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சீரகம், சோம்பு, கசகசா, ஏலக்காய் மற்றும் பட்டை சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும். 
 
பின் அதனை குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு, அத்துடன் முந்திரி, தேங்காய், புதினா, கொத்தமல்லி, பச்சை மிளகாய் மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போன்று அரைத்துக் கொள்ள வேண்டும். 
 
பின்னர் மற்றொரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, நறுக்கிய வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும். 
 
 பின்பு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 3 நிமிடம் வதக்கி, தக்காளி, மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேத்துஇ 4-5 நிமிடம் வதக்க வேண்டும். 
 
அடுத்து அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, 7-8 நிமிடம் கிளறி விட வேண்டும். 
 
பிறகு எலுமிச்சை சாறு மற்றும் சிக்கன் துண்டுகளை போட்டு, 2 நிமிடம் பிரட்டி, 3 கப் தண்ணீரை ஊற்றி, 20-30 நிமிடம் மூடி வேக வைத்து இறக்க வேண்டும் இப்போது சுவையாக நீலகிரி சிக்கன் குருமா ரெடி!!! 
 
இதனை சாதத்துடன் சாப்பிட்டால், சூப்பராக இருக்கும்.

Labels:

மாங்காய் புலாவ்

கோடைகாலத்தில் அதிகம் கிடைக்கும் மாங்காயை பலவாறு சாப்பிடலாம். மேலும் மாங்காய் என்றாலே அதை சாப்பிட நா ஊறும். ஆகவே அத்தகைய மாங்காயை அப்படியே சாப்பிடுவதற்கு பதிலாக, அதனை சற்று வித்தியாசமாக சாதம் அல்லது புலாவ் போன்று சாப்பிடலாம். பொதுவாக மாங்காய் புலாவ் வட இந்தியாவில் தான் பிரபலமானது. 
 
அத்தகைய மாங்காய் புலாவ் செய்வது மிகவும் எளிது. மேலும் இது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்ததாகவும் இருக்கும். இப்போது அதனை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

mango pulao tangy summer recipe
தேவையான பொருட்கள்:  
 
பாஸ்மதி அரிசி - 2 கப் (நீரில் ஊற வைத்தது) 
மாங்காய் - 1 (நறுக்கியது) 
பச்சை மிளகாய் - 2 (நீளமாக கீறியது) 
இஞ்சி - 1 இன்ச் (துருவியது) 
பட்டை - 1 இன்ச் 
ஏலக்காய் - 4 
கிராம்பு - 4 
மிளகு - 6 
சீரகம் - 1/2 டீஸ்பூன் 
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் 
சீரகத் தூள் - 1 டீஸ்பூன் 
நெய் - 1 டேபிள் ஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு 
 
செய்முறை:  
 
முதலில் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், பச்சை மிளகாய், பட்டை, ஏலக்காய், கிராம்பு மற்றும் மிளகு போட்டு தாளித்துக் கொள்ள வேண்டும். 
 
பின் துருவிய இஞ்சியைப் போட்டு சிறிது நேரம் வதக்க வேண்டும். அடுத்து மாங்காயை சேர்த்து, தீயை குறைவில் வைத்து 3-4 நிமிடம் மாங்காய் வேகும் வரை வைக்க வேண்டும். 
 
பின்னர் மஞ்சள் தூள், சீரகத் தூள் தூவி, 2 நிமிடம் வதக்க வதக்கவும். 
 
பிறகு அரிசியை போட்டு 5 நிமிடம் கிளறி, அத்துடன் 3 கப் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து, குக்கரை மூடி தீயை குறைவில் வைத்து, 2 விசில் விட்டு இறக்க வேண்டும். இப்போது சுவையான மாங்காய் புலாவ் ரெடி!!!

Labels:

புடலங்காய் பொரியல்

தமிழர்கள் அடிக்கடி சமைக்கும் உணவுப் பொருட்களில் புடலங்காய் முக்கியமானது. அதிலும் ஏதேனும் விஷேசம் என்றால் உடனே புடலங்காயை வாங்கி வந்து, கூட்டு, பொரியல், குழம்பு என்று பல வகையில் சமைத்து சாப்பிடுவார்கள். அத்தகைய புடலங்காயில் சுவை மட்டுமின்றி, உடலுக்கு ஏற்ற பல நன்மைகளும் நிறைந்துள்ளன. எனவே இந்த காயை வாரத்திற்கு ஒரு முறையாவது சாப்பிட்டு வருவது நல்லது. 
 
 சரி, இப்போது புடலங்காயை வைத்து எப்படி சுவையான பொரியல் செய்வது என்று பார்ப்போமா!!!

snake gourd poriyal
தேவையான பொருட்கள்: 
 
புடலங்காய் - 1 
கடலைப் பருப்பு - 3 டேபிள் ஸ்பூன் 
தேங்காய் - 1/2 மூடி (துருவியது) 
வர மிளகாய் - 3 
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை 
கடுகு - 1/2 டீஸ்பூன் 
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன் 
கறிவேப்பிலை - சிறிது 
எண்ணெய் - தேவையான அளவு 
உப்பு - தேவையான அளவு 
 
செய்முறை:  
 
முதலில் புடலங்காயை உப்பு வைத்து நன்கு தேய்த்து, நீரில் அலசிக் கொள்ள வேண்டும். பின் அதில் உள்ள விதைகளை நீக்கிவிட்டு, பொடியாகவோ அல்லது நீளமாகவோ நறுக்கிக் கொள்ள வேண்டும்.
 
 பிறகு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து, அதில் கடலைப் பருப்பைக் கழுவிப் போட்டு, மஞ்சள் தூள் சேர்த்து வேக வைத்து எடுத்து, நீரை வடித்து தனியாக வைத்துக் கொள்ளவும். 
 
பின்னர் வாணலியை மற்றொரு அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, வர மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்துக் கொள்ள வேண்டும். அடுத்து வேக வைத்துள்ள புடலங்காயை சேர்த்து உப்பு போட்டு, லேசாக தண்ணீர் தெளித்து, காயை வேக வைக்கவும். 
 
காயானது வெந்ததும், அதில் வேக வைத்துள்ள கடலைப் பருப்பை சேர்த்து, 5 நிமிடம் வதக்கி விட வேண்டும். 
 
காயில் உள்ள நீர் முழுவதும் வற்றியதும், அத்துடன் துருவிய தேங்காயை சேர்த்து 2 நிமிடம் கிளறி இறக்க வேண்டும். இப்போது சுவையான புடலங்காய் பொரியல் ரெடி!!!

Labels:

மசாலா தோசைக்கு தேவையான உருளைக்கிழங்கு மசாலா

தென்னிந்தியாவில் தோசை மிகவும் பிரபலமான ரெசிபிக்களுள் ஒன்று. இந்த தோசை மிகவும் ஆரோக்கியமான உணவுகளுள் ஒன்று. அத்தகைய தோசையில் பல வகைகள் உள்ளன. அதில் மசாலா தோசை தான் மிகவும் பிரபலமானது. அந்த மசாலா தோசைக்கு தேவையான மசாலாவை எளிமையான முறையில் எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். 
 
அதைப் படித்து தெரிந்து கொண்டு, வீட்டில் அருமையான சுவையில் மசாலா தோசை செய்து செய்து சாப்பிடுங்கள்.

masala dosa recipe
தேவையான பொருட்கள்: 
 
 உருளைக்கிழங்கு - 6 
வெங்காயம் - 2 (நறுக்கியது) 
தக்காளி - 1 (நறுக்கியது) 
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் 
கடுகு - 1/2 டீஸ்பூன் 
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன் 
எண்ணெய் - தேவையான அளவு 
உப்பு - தேவையான அளவு 
 
செய்முறை: 
 
முதலில் உருளைக்கிழங்கை இரண்டாக நறுக்கிக் கொள்ள வேண்டும். 
 
பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நறுக்கிய உருளைக்கிழங்கு போட்டு, 2 கப் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி 5 விசில் விட்டு இறக்க வேண்டும். 
 
பின்பு விசில் போனதும், உருளைக்கிழங்கை வெளியே எடுத்து, தோலை உரித்துவிட்டு, நன்கு மசித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். 
 
பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். 
 
பிறகு நறுக்கிய வெங்காயம் மற்றும் உப்பு சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும். 
 
அடுத்து மஞ்சள் தூள் மற்றும் மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கு சேர்த்து, லேசாக தண்ணீர் தெளித்து, 2 நிமிடம் வதக்கி இறக்க வேண்டும். 
 
 இப்போது நொடியில் மசாலா தோசைக்கு தேவையான சுவையான உருளைக்கிழங்கு மசாலா ரெடி!!! 
 
 குறிப்பு: வேண்டுமெனில் இந்த மசாலாவை சாதாரண தோசைக்கும் தொட்டுக் கொள்ளலாம்.

Labels:

காளான் சீஸ் பரோட்டா

இந்தியாவில் பரோட்டா மிகவும் சிறப்பான ஒரு ரெசிபி. அதிலும் பரோட்டாவை மட்டன் அல்லது சிக்கன் குருமாவுடன் சாப்பிட்டால், அதன் சுவைக்கு அளவே இல்லை. ஆனால் இதனை காலை வேளையில் சாப்பிட முடியாது அல்லவா. ஆகவே அனைவரும் காலையில் செய்யக்கூடிய வகையிலும், குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையிலும், ஒரு ஆரோக்கியமான முறையில் பரோட்டா செய்ய வேண்டுமெனில், அதற்கு காளான் சீஸ் பரோட்டா சரியாக இருக்கும். 
 
 சரி, இப்போது அந்த காளான் சீஸ் பரோட்டாவை எப்படி எளிமையான முறையில் செய்வதென்று பார்ப்போமா!!!

mushroom cheese paratha breakfast
தேவையான பொருட்கள்: 
 
 காளான் - 6 (பொடியாக நறுக்கியது) 
வெங்காயம் - 1 (சிறியது, நறுக்கியது) 
சீஸ் - 10 கிராம் (துருவியது) 
மிளகு தூள் - 1/2 டீஸ்பூன் 
மைதா மாவு - 2 கப் 
எண்ணெய் - தேவையான அளவு 
உப்பு - தேவையான அளவு 
 
செய்முறை:  
 
முதலில் ஒரு பாத்திரத்தில் மைதா மாவு மற்றும் உப்பு போட்டு, நீர் ஊற்றி சப்பாத்தி மாவு போல் பிசைந்து, ஈரமான துணியால் சுற்றி தனியாக சிறிது நேரம் வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு சிறிய வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தை சேர்த்து 5 நிமிடம் வதக்க வேண்டும்.
 
 பின் காளான் மற்றும் உப்பு சேர்த்து, 5-6 நிமிடம் தீயை குறைவில் வைத்து வதக்கிக் கொள்ள வேண்டும். இறுதியில் துருவிய சீஸ் மற்றும் மிளகு தூள் சேர்த்து, 2 நிமிடம் கிளறி இறக்கி, குளிர வைக்க வேண்டும். 
 
 பின்பு பிசைந்து வைத்துள்ள மாவை, சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு உருண்டையை எடுத்து, அதன் நடுவே பெருவிரலை வைத்து ஓட்டை போட்டு, செய்து வைத்துள்ள காளான் கலவையை சிறிது வைத்து, மீண்டும் உருண்டையாக்கி, பின் சப்பாத்தி போல் தேய்த்து, தட்டில் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். 
 
இதேப் போன்று அனைத்து மாவையும் செய்து கொள்ள வேண்டும். பின்னர் ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும், தேய்த்து வைத்து பரோட்டாக்களை ஒவ்வொன்றாக போட்டு, முன்னும் பின்னும் எண்ணெய் ஊற்றி, வேக வைத்து எடுக்க வேண்டும். 
 
இப்போது சுவையான காளான் சீஸ் பரோட்டா ரெடி!!!

Labels:

உருளைக்கிழங்கு பாசிப்பருப்பு போண்டா

மாலை வேளையில் பசிக்கும் போது, ஏதாவது காரமாகவும், சூடாகவும் சாப்பிட வேண்டும் என்று தோன்றும். மேலும் இந்த நேரத்தில் தான் வீட்டில் உள்ளோருடன் ஒன்றாக அமர்ந்து சந்தோஷமாக பேசி விளையாட முடியும், அப்போது சற்று ஸ்பெஷலாகவும், ஈஸியானதாகவும் ஒரு சூப்பரான சுவையில் போண்டா செய்து சாப்பிட்டால், அசத்தலாக இருக்கும். 
 
இந்த நேரத்தில் வித்தியாசமாக செய்ய அனைவருக்கும் பிடித்த உருளைக்கிழங்கு மற்றும் பாசிப்பருப்பை வைத்து போண்டா செய்து சாப்பிட நன்றாக இருக்கும். இப்போது அந்த உருளைக்கிழங்கு பாசிப்பருப்பு போண்டா செய்வது எப்படியென்று பார்ப்போமா!!!

aloo moong dal bonda
தேவையான பொருட்கள்: 
 
 பாசிப்பருப்பு - 1 கப் 
உருளைக்கிழங்கு - 2 (வேக வைத்தது) 
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது) 
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது) 
இஞ்சி - 1 டேபிள் ஸ்பூன் (துருவியது) 
கொத்தமல்லி - 1 டீஸ்பூன் (நறுக்கியது) 
சீரகம் - 1 டீஸ்பூன் 
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை 
பேக்கிங் சோடா - 1 சிட்டிகை 
உப்பு - தேவையான அளவு 
எண்ணெய் - தேவையான அளவு 
 
செய்முறை:  
 
முதலில் பாசிப்பருப்பை 5-6 மணிநேரம் ஊற வைத்துக் கொண்டு, நன்கு கழுவி, பின் அதனை நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும். 
 
பின்னர் வேக வைத்துள்ள உருளைக்கிழங்கை மசித்து, அத்துடன் அரைத்த பாசிப்பருப்பு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி, சீரகம், பெருங்காயத் தூள், பேக்கிங் சோடா மற்றும் உப்பு சேர்த்து போண்டா மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும். 
 
 பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கலந்து வைத்துள்ள மாவை சிறு சிறு உருண்டைகளாக போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். 
 
இப்போது சுவையான பாசிப்பருப்பு உருளைக்கிழங்கு போண்டா ரெடி!!! இதனை புதினா சட்னியுடன் சாப்பிட்டால், அருமையாக இருக்கும்.

Labels:

துவரம் பருப்பு பசலைக் கீரை சப்ஜி

கீரை உடலுக்கு மிகவும் இன்றியமையாத உணவுப் பொருட்களுள் ஒன்றாகும். ஏனெனில் கீரையில் உடலுக்கு வேண்டிய நிறைய சத்துக்கள் நிறைந்துள்ளது. எனவே வாரத்தற்கு இரண்டு முதல் மூன்று நாட்களாவது கீரையை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதிலும் கீரையில் பசலை கீரையின் நன்மைகளைப் பற்றி நிறைய படித்திருப்போம். 
 
அத்தகைய கீரையை துவரம் பருப்புடன் சேர்த்து, ஒரு சப்ஜி செய்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும். இப்போது அந்த துவரம் பருப்பு பசலைக் கீரை சப்ஜியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

toor dal sabji with palak
தேவையான பொருட்கள்: 
 
பசலைக் கீரை - 1 கட்டு 
துவரம் பருப்பு - 2 கப் 
வேர்க்கடலை - 3 டீஸ்பூன் 
கறிவேப்பிலை - சிறிது 
வெங்காயம் - 1 (நறுக்கியது) 
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன் 
தக்காளி - 2 (நறுக்கியது) 
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது) 
கடுகு - 1/2 டீஸ்பூன் 
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை 
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன் 
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் 
சீரகப் பொடி - 1 டீஸ்பூன் 
மல்லி தூள் - 1/2 டீஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு 
எண்ணெய் - தேவையான அளவு 
 
செய்முறை: 
 
 முதலில் பசலைக் கீரையை நன்கு சுத்தமாக கழுவி நறுக்கிக் கொள்ள வேண்டும். பின் துவரம் பருப்பை நீரில் 15 நிமிடம் ஊற வைத்து, கழுவிக் கொள்ள வேண்டும். 
 
அடுத்து ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் பசலைக் கீரை, துவரம் பருப்பு மற்றும் வேர்க்கடலை போட்டு, 1 கப் தண்ணீர் ஊற்றி, 3 விசில் விட்டு இறக்கி, 10 நிமிடம் குளிர வைத்து, கடைந்து கொள்ள வேண்டும். 
 
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து, பச்சை மிளகாய், நறுக்கிய வெங்காயம் மற்றும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து, வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும். 
 
பிறகு மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் மல்லித் தூள் சேர்த்து, நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்து, நன்கு வதக்க வேண்டும். 
 
பின்பு வேக வைத்துள்ள பசலைக் கீரை கலவையை சேர்த்து, உப்பு போட்டு, தீயை குறைவில் வைத்து 2 நிமிடம் கொதிக்க விட்டு இறக்க வேண்டும். இப்போது சுவையான துவரம் பருப்பு பசலைக் கீரை சப்ஜி ரெடி!!! 
 
இதனை சாதம் அல்லது சப்பாத்தியுடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.

Labels:

பேபிகார்ன் காளான் சில்லி

மாலை வேளையில் பஜ்ஜி, போண்டா போன்றவற்றை செய்து சாப்பிட்டு போர் அடித்தவர்களுக்கு, உடலுக்கு ஆரோக்கியமாகவும், சைனீஸ் ஸ்டைல் சுவையிலும் இருக்கும் வகையில் பேபிகார்ன் மற்றும் காளானை வைத்து சில்லி செய்து சாப்பிடலாம். பொதுவாக இதனை சாதத்துடனோ அல்லது நூடுல்ஸ் உடனோ தான் சாப்பிடுவார்கள். 
 
ஆனால் இதனை மாலை வேளையில் ஸ்நாக்ஸ் ஆக கூட சாப்பிடலாம். இப்போது அந்த பேபிகார்ன காளான் சில்லியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

chilly mushroom with babycorn
தேவையான பொருட்கள்: 
 
 பட்டன் காளான் - 1 கப் (நறுக்கியது) 
பேபிகார்ன் - 1 கப் (நறுக்கியது) 
வெங்காயம் - 1 (நறுக்கியது) 
பூண்டு - 3 பற்கள் (நறுக்கியது) 
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன் 
பச்சை மிளகாய் - 4 (நீளமாக கீறியது) 
மிளகு தூள் - 1 டீஸ்பூன் 
சோயா சாஸ் - 2 டேபிள் ஸ்பூன் 
தக்காளி சாஸ் - 1 டேபிள் ஸ்பூன் 
சோள மாவு - 1 டீஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு 
எண்ணெய் - தேவையான அளவு 
தண்ணீர் - 1/2 கப் 
 
செய்முறை: 
 
முதலில் காளானை நன்கு சுத்தம் செய்து நறுக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் பேபிகார்னையும் நீரில் கழுவி, நறுக்கிக் கொள்ளவும். 
 
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பூண்டு மற்றும் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும். 
 
பின் பேபிகார்னை போட்டு 2 நிமிடம் வதக்கி, காளான், இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து, 5-7 நிமிடம் நன்கு வதக்க வேண்டும். பின்னர் அத்துடன் சோயா சாஸ், தக்காளி சாஸ், மிளகு தூள் மற்றும் உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி, தட்டை வைத்து 2 நிமிடம் மூடி வைத்து வேக வைக்க வேண்டும். 
 
 பிறகு மூடியை திறந்து, அதில் சோள மாவு மற்றும் மீதமுள்ள தண்ணீரை ஊற்றி, நன்கு தண்ணீர் சுண்டும் வரை கிளறி விட்டு, இறக்கி விட வேண்டும். இப்போது சுவையான பேபிகார்ன் காளான் சில்லி ரெடி!!!

Labels:

பசலைக் கீரை புலாவ்

பசலைக் கீரையின் எண்ணற்ற நன்மைகளை பார்த்திருப்போம். இதுவரை அத்தகைய பசலைக் கீரையை பொரியல், கடைசல் என்று தான் செய்திருப்போம். ஆனால் இத்தகைய பசலைக் கீரையை வைத்து, ஈஸியான முறையில் புலாவ் கூட செய்யலாம். 
 
 இந்த பசலைக் கீரை புலாவ் எப்படி எளிமையான முறையில் செய்வதென்று, அதன் செய்முறையைக் கொடுத்துள்ளோம். அதைப் படித்து தெரிந்து, சமைத்து ருசித்து மகிழுங்கள்.

spinach or palak pulao recipe
தேவையான பொருட்கள்:  
 
அரிசி - 1 கப் 
பசலைக் கீரை - 1/2 கப் (நறுக்கியது) 
வெங்காயம் - 1 (நறுக்கியது) 
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது) 
பட்டை - 1 இன்ச் 
கிராம்பு - 2 
சீரகம் - 1/2 டீஸ்பூன் 
பிரியாணி இலை - 1 
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் 
மிளகு தூள் - 1 டீஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு 
எண்ணெய் - தேவையான அளவு 
 
செய்முறை: 
 
 முதலில் அரிசியை நீரில் 30 நிமிடம் ஊற வைத்து, கழுவி தனியாக வைத்துக்க் கொள்ள வேண்டும். 
 
பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, சீரகம் பிரியாணி இலை, கிராம்பு சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். பிறகு நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும். 
 
அடுத்து அதில் நறுக்கி வைத்துள்ள பசலைக் கீரையை போட்டு, 3 நிமிடம் வதக்கி விடவும். 
 
பின்பு உப்பு, மிளகாய் தூள் மற்றும் மிளகு தூள் சேர்த்து கிளறி, கழுவி வைத்துள்ள அரிசியை போட்டு, 2 கப் தண்ணீர் ஊற்றி, 3 விசில் விட்டு இறக்க வேண்டும். இப்போது சுவையான பசலைக் கீரை புலாவ் ரெடி!!!

Labels:

கேரளா ஸ்டைல்: மரவள்ளிக்கிழங்கு ரெசிபி

பொதுவாக கிழங்குகளில் நிறைய சத்துக்கள் இருக்கும். அத்தகைய கிழங்குகளை அக்காலத்தில் உள்ள மக்கள் அதிகம் சாப்பிடுவார்கள். அதனால் தான் அவர்கள் மிகவும் வலுவோடும், ஆரோக்கியமானவர்களாகவும் இருக்கின்றனர். எனவே தான் வீட்டில் உள்ள பெரியோர்கள் அடிக்கடி ஏதேனும் ஒரு கிழங்கை வாங்கி வந்து சமைக்க சொல்வார்கள். ஏனெனில் கிழங்குகளில் நார்ச்சத்து அதிகம் இருக்கும்.
 
 ஆனால் அவற்றில் ஒன்றான மரவள்ளிக்கிழங்கில் நார்ச்சத்துடன், கார்போஹைட்ரேட்டும் அதிகம் நிறைந்துள்ளது. இந்த கிழங்கு கேரளாவில் மிகவும் பிரபலமான ஒரு உணவுப் பொருள். இதுவரை இந்த கிழங்கை வேக வைத்து மட்டும் தான் சாப்பிடுவோம். ஆனால் அத்தகைய கிழங்கை வேக வைத்து சாப்பிடுவதற்கு பதிலாக, அதனை கேரளா ஸ்டைலில் செய்து சாப்பிட்டால், மரவள்ளிக்கிழங்கு பிடிக்காதவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள். 
 
மேலும் இந்த முறையில் செய்யும் மரவள்ளிக்கிழங்கை எந்நேரமும் சாப்பிடலாம். சரி, இப்போது அந்த மரவள்ளிக்கிழங்கை கேரளா ஸ்டைலில் எப்படி செய்வதென்று படிப்படியாக கொடுத்துள்ளோம். அதை பார்ப்போமா!!!
 
தேவையான பொருட்கள்: 
 
 மரவள்ளிக்கிழங்கு - 1 கிலோ 
 தேங்காய் - 1/2 மூடி (துருவியது) 
பச்சை மிளகாய் - 2-3 
பூண்டு - 5 பல் 
சீரகம் - 1 1/2 டீஸ்பூன் 
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை 
கடுகு - 1/2 டீஸ்பூன் 
வெங்காயம் - 1 (நறுக்கியது) 
உப்பு - தேவையான அளவு 
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

முதலில் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் மரவள்ளிக்கிழங்கை போட்டு தண்ணீர் ஊற்றி, சிறிது உப்பு சேர்த்து, 3-4 விசில் விட்டு இறக்க வேண்டும்.

வேக வைத்த மரவள்ளிக்கிழங்கை நன்கு மசித்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் பூண்டு, தேங்காய் துருவல், பச்சை மிளகாய், சீரகம் மற்றும் மஞ்சள் தூளை மட்டும் தனியாக அரைப்பதற்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு அதனை மிக்ஸியில் போட்டு, நன்கு நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு போட்டு தாளிக்க வேண்டும்.

அத்துடன் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும்.

பின் மசித்து வைத்துள்ள மரவள்ளிக்கிழங்கை சேர்த்து 2 நிமிடம் கிளறி விட வேண்டும்.

அனைத்தையும் சேர்த்த பின், அதனை 5 நிமிடம் நன்கு கிளறி விட்டு இறக்க வேண்டும்.

இப்போது சுவையான கேரளா ஸ்டைல் மரவள்ளிக்கிழங்கு ரெசிபி ரெடி!!!

Labels:

தர்பூசணி ஜூஸ்

கோடையில் தாகத்தை தணிப்பதற்கு தர்பூசணி ஒரு சிறந்த பழம். இத்தகைய பழத்தை அப்படியே சாப்பிட பிடிக்காதவர்கள், அதனை ஜூஸ் போன்று செய்து குடிக்கலாம். மேலும் அதிக பசியுடன் இருப்பவர்களோ அல்லது டயட்டில் இருப்பவர்களோ, தர்பூசணி ஜூஸை குடித்தால், பசி அடங்கிவிடும். மேலும் உடல் எடையை குறைக்க நினைப்போருக்கும், கர்ப்பிணிகளுக்கும் இந்த ஜூஸ் சிறந்தது. அதிலும் தர்பூசணி ஜூஸ் பலவாறு செய்யப்படுகிறது. 
 
இப்போது அவற்றில் ஒருமுறையான தர்பூசணி ஜூஸை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

watermelon juice
தேவையான பொருட்கள்: 
 
தர்பூசணி துண்டுகள் - 3 
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன் 
சர்க்கரை - தேவையான அளவு 
ஐஸ் கட்டிகள் - தேவையான அளவு 
 
செய்முறை:  
 
முதலில் தர்பூசணித் துண்டுகளின் தோலை சீவி, விதைகளை நீக்கிவிட வேண்டும்.
 
 பின் அதனை சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும். பின்னர் மிக்ஸியில் தர்பூசணித் துண்டுகள், சர்க்கரை, எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும். 
 
பிறகு அதனை பாத்திரத்தில் ஊற்றி, ஐஸ் கட்டிகளைப் போட்டு, சிறிது நேரம் கழித்து பரிமாறினால், சூப்பரான தர்பூசணி ஜூஸ் ரெடி!!! 
 
குறிப்பு: இந்த ஜூஸில் எலுமிச்சை சாற்றிற்கு பதிலாக, 1 கப் காய்ச்சி குளிர வைத்த பாலை சேர்த்தால், சுவை இன்னும் அருமையாக இருக்கும்.

Labels:

வாழைப்பழ தேங்காய் பிரட்

குழந்தைகளுக்கு பிரட் என்றால் மிகவும் பிடிக்கும். அதிலும் இனிப்பு பிரட் என்றால் விரும்பி சாப்பிடுவார்கள். காலை வேளையில் குழந்தைகளுக்கு தோசை, இட்லி போன்றவை சாப்பிட்டு போர் அடித்திருந்தால், அப்போது அவர்களுக்கு வாழைப்பழத்தையும், தேங்காய் துருவலையும் வைத்து, ஒரு அருமையான சுவையில் பிரட் செய்யலாம். இந்த பிரட்டை மாலை வேளையில் ஸ்நாக்ஸ் போன்றும் செய்து கொடுக்கலாம். 
 
சரி, இப்போது அந்த வாழைப்பழ தேங்காய் பிரட்டை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

banana n coconut bread recipe
தேவையான பொருட்கள்:  
 
மைதா மாவு - 2 கப் 
பேக்கிங் சோடா - 3/4 டீஸ்பூன் 
உப்பு - 1/2 டீஸ்பூன் 
சர்க்கரை - 1 கப் 
எண்ணெய் - 1/2 கப் 
முட்டை - 3 
தயிர் - 1 கப் 
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன் 
வாழைப்பழம் - 2 (மசித்தது) 
தேங்காய் துருவல் - 1/2 கப் (வறுத்தது) 
தேங்காய் துருவல் - 1/2 கப் 
வென்னிலா எசன்ஸ் - 1/2 டீஸ்பூன் 
 
செய்முறை: 
 
முதலில் மைக்ரோவேவ் ஓவனை 350 டிகிரியில் சூடேற்றிக் கொள்ள வேண்டும். 
 
பின் பிரட் பேனை எடுத்துக் கொண்டு, அதில் எண்ணெய் தடவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். 
 
பின்னர் ஒரு பௌலில் மைதா, பேக்கிங் சோடா மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். 
 
 பின்பு மற்றொரு பௌலில் சர்க்கரை, முட்டை, வென்னிலா எசன்ஸ், எண்ணெய், தயிர் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து, ஒரு ஸ்பூனை வைத்து நன்கு கிளறி விட வேண்டும். 
 
அடுத்து மசித்து வைத்துள்ள வாழைப்பழம் மற்றும் வறுத்த தேங்காய் துருவலை, முட்டை கலவையுடன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பிறகு அதே கலவையில் மாவை மெதுவாக போட்டு கிளறி விட்டு, அதனை பிரட் பேனில் ஊற்றி, பின் அதன்மேல் தேங்காய் துருவலை தூவி, பிறகு ஒரு அலுமினிய பேப்பரினால் அதனை சுற்றி, ஓவனில் 30 நிமிடம் வைத்து எடுக்க வேண்டும். 
 
 அவ்வாறு எடுக்கும் போது, அதனை ஒரு கத்தியினால் வெட்டும் போது, கத்தியில் மாவானது ஒட்டிக் கொண்டால், மீண்டும் அதனை 30 நிமிடம் ஓவனில் வைத்து எடுக்க வேண்டும். 
 
இப்போது பிரட்டானது ரெடியாகியிருக்கும். அதனை குளிர வைத்து பரிமாறலாம். குறிப்பு: இந்த பிரட்டை சரியாக பராமரித்து வந்தால், 2-3 நாட்களுக்கு நன்றாக இருக்கும்.

Labels:

ஸ்ட்ராபெர்ரி மில்க் ஷேக்

ஸ்ட்ராபெர்ரியில் வைட்டமின் சி அதிகம் நிறைந்துள்ளது. அதிலும் தற்போது ஸ்ட்ராபெர்ரி மிகவும் அதிகமாகவும், விலை குறைவுடனும் கிடைப்பதால், முடிந்த வரையில் அதனை வாங்கி சாப்பிடுவது உடலுக்கும், சருமத்திற்கு மிகவும் நல்லது. அத்தகைய ஸ்ட்ராபெர்ரியை அப்படியே சாப்பிடுவதற்கு பதிலாக, அதனை மில்க் ஷேக் செய்து சாப்பிட்டால், சுவையாக இருக்கும். மேலும் குழந்தைகளுக்கு ஸ்ட்ராபெர்ரி மில்க் ஷேக் மிகவும் பிடித்தாகவும் இருக்கும். 
அதிலும் அவர்கள் பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் போது, மாலை வேளையில் செய்து கொடுத்தால், அது ஒரு எனர்ஜி ஜூஸ் போன்றும் இருக்கும். இப்போது அந்த ஸ்ட்ராபெர்ரி மில்க் ஷேக்கை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, குழந்தைகளுக்கு செய்து கொடுத்து அசத்துங்கள்.

strawberry milkshake recipe
தேவையான பொருட்கள்: 
 ஸ்ட்ராபெர்ரி - 7 
பால் - 1 கப் 
ஐஸ் க்ரீம் - 1 ஸ்கூப் (வென்னிலா/ஸ்ட்ராபெர்ரி) 
சர்க்கரை - தேவையான அளவு 
ஐஸ் கட்டிகள் - தேவையான அளவு 
செய்முறை: 
முதலில் ஸ்ட்ராபெர்ரியில் உள்ள இலைகளை நீக்கி, அதனை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும். 
பின்னர் மிக்ஸியில் ஸ்ட்ராபெர்ரி, பால், ஐஸ் க்ரீம், சர்க்கரை மற்றும் ஐஸ் கட்டிகளை சேர்த்து நன்கு நைஸாக அடித்துக் கொள்ள வேண்டும். 
பின் அதனை டம்ளரில் ஊற்றி பரிமாறினால், அருமையான ஸ்ட்ராபெர்ரி மில்க் ஷேக் ரெடி!!!

Labels:

ஈஸியான... வென்னிலா ஐஸ் க்ரீம்

பொதுவாக அனைவருக்குமே ஐஸ் க்ரீம் என்றால் மிகவும் பிடிக்கும். அதிலும் வென்னிலா தான் பலருக்கு பிடித்தமானது. இத்தகைய வென்னிலா ஐஸ் க்ரீமை இதுவரை கடைகளில் தான் வாங்கி சாப்பிட்டிருப்போம். இப்போது அதனை வீட்டிலேயே எளிமையான முறையில் செய்து சாப்பிடலாம். இவ்வாறு வீட்டில் செய்வதால், பணம் மிச்சமாவதோடு, பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு மாலையில் கொடுத்தால், அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். 
இப்பொழுது அந்த வென்னிலா ஐஸ் க்ரீமை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

homemade vanilla ice cream recipe
தேவையான பொருட்கள்: 
பால் - 2 கப் 
பால் பவுடர் - 1 கப் (இனிப்பில்லாதது) 
ப்ரஷ் க்ரீம் - 1/2 கப் 
சர்க்கரை - 1/2 கப் ( அரைத்து பொடி செய்தது) 
வென்னிலா எசன்ஸ் - 1 டீஸ்பூன் 
செய்முறை:  
முதலில் பாலை நன்கு கொதிக்க வைத்து, குளிர வைத்துக் கொள்ள வேண்டும். பின் பாலுடன், மேலே குறிப்பிட்டுள்ள அனைத்துப் பொருட்களையும் ஒரு பௌலில் போட்டு நன்கு அடித்துக் கொள்ள வேண்டும். 
 பின்னர் அதனை காற்று புகாத ஒரு டப்பாவில் போட்டு, ப்ரீசரில் நன்கு கெட்டியாகும் வரை வைக்க வேண்டும். 
பிறகு அது கெட்டியானதும், அதனை வெளியே எடுத்து, வேறொரு பௌலில் போட்டு, லேசாக உருகிய நிலையில் அதனை பரிமாறினால், எளிமையான வென்னிலா ஐஸ் க்ரீம் ரெடி!!!

Labels:

வேர்க்கடலை வெண்ணெய் ஸ்மூத்தி

இதுவரை எத்தனையோ விதவிதமான ஸ்மூத்தி ரெசிபிக்களை பார்த்திருப்போம். ஆனால் வேர்க்கடலை வெண்ணெய் வைத்து செய்யப்படும் ரெசிபியை பார்த்ததில்லை. ஆம், வேர்க்கடலை வெண்ணெய் ஸ்மூத்தி என்றதும், பலருக்கும் இதில் என்ன சுவை இருக்கும் என்று முகத்தை சுளிப்பார்கள். ஆனால் இதனை வைத்து மட்டும் ஸ்மூத்தி செய்யப் போவதில்லை. அத்துடன் வாழைப்பழம் மற்றும் பால் சேர்த்து செய்யப்போவதால், இது சற்று வித்தியசாமான சுவையிலேயே இருக்கும். 
 
மேலும் இந்த பானம் கோடையில் குடிப்பதற்கு ஏற்ற ஒன்றாகும். சரி, இப்போது அந்த வேர்க்கடலை வெண்ணெய் ஸ்மூத்தியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
peanut butter smoothie
தேவையான பொருட்கள்: 
 
 வேர்க்கடலை வெண்ணெய் - 1/2 கப் 
வாழைப்பழம் - 1 
பால் - 1/2 கப் 
சர்க்கரை - தேவையான அளவு 
ஐஸ் கட்டிகள் - தேவையான அளவு 
 
செய்முறை: 
 
முதலில் வாழைப்பழத்தை பாலுடன் சேர்த்து மசித்துக் கொள்ள வேண்டும்.
 
 பின்னர் அதனை மிக்ஸியில் போட்டு, அத்துடன் வேர்க்கடலை வெண்ணெய், சர்க்கரை மற்றும் ஐஸ் கட்டிகளை சேர்த்து நன்கு, நைஸாக அடித்துக் கொள்ள வேண்டும்.
 
 பின்பு அதனை டம்ளரில் ஊற்றி பரிமாறினால், வேர்க்கடலை வெண்ணெய் ஸ்மூத்தி ரெடி!!!

Labels:

முலாம் பழ ஜூஸ்

உடலில் உள்ள வெப்பத்தை தணிப்பதில் முலாம் பழம் மிகவும் சிறந்த ஒன்று. இந்த பழத்தை அப்படியே சாப்பிட நன்றாக இருக்காது. அதனை சர்க்கரையில் தொட்டு தான் சாப்பிட முடியும். இல்லையெனில் அதன் கனிந்த பகுதியை எடுத்து, சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து கலந்து குடிக்கலாம். 
 
ஆனால் இப்போது சற்று வித்தியாசமான சுவையில் இருக்க, அதோடு சிறிது எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து ஜூஸ் செய்து சாப்பிடலாம். அதன் செய்முறையைப் பார்ப்போமா!!! 
musk melon juice recipe
தேவையான பொருட்கள்: 
 
முலாம் பழம் - 1 
எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன் 
சர்க்கரை - 3 டேபிள் ஸ்பூன் 
தேன் - 1 டீஸ்பூன் (விருப்பப்பட்டால்) 
 
 செய்முறை: 
 
முலாம் பழத்தை இரண்டாக நறுக்கி, அதனுள் இருக்கும் விதைகளை நீக்கிவிட வேண்டும். 
 
பின்னர் ஒரு ஸ்பூனை வைத்து, அதனுள் உள்ள கனிந்த பகுதியை எடுக்க வேண்டும். 
 
அடுத்து மிக்ஸியில் எடுத்து வைத்துள்ள கனிந்த பகுதியை போட்டு, சர்க்கரை, தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு நைஸாக அரைத்து, டம்ளரில் ஊற்றி பரிமாறினால், குளிர்ச்சியைத் தரும் முலாம் பழ ஜுஸ் ரெடி!!!


Labels:

Thursday, 25 April 2013

Baby Shower Cakes

Labels:

Children’s Cakes - 3

Labels: