முதல் ஸ்பரிசம்

இருபது வரை எண்ணிக்கொண்டு
இருள்பாரித்த சாலையை
நண்பன் போட்ட பந்தையத்தில்
கண்ணை மூடி கடக்கையில்
உன்னை மோதி அதிர்ந்தே போனேன்
கூச்சமும் அச்சமும் சினமும்
வழியும் விழிகளால் தான்
என்னை முதல்முறை நீ காண்பாயென
எண்ணியதே இல்லை
மகிழ்ச்சி தயக்கம் பயம் தவிப்பு என
எல்லாம் புரள
மொழியறியாத ஊரில்
ஊமையை போல அலையும் ஒருவனை
போல உன் முன்னிலையில் நிற்பேனென
கருதியதே இல்லை
ஒரு அழகான மயிலிறகாய் நாளும்
என் கனவின்
காற்று திசையில் பறந்தவளே
உன்னுடனான சந்திப்பு நிகழ்ந்த
இத்தருணத்தின் மலர்வில்
சாயமிழக்கிறது
செறிந்த தனிமை
இன்னும் தெரிவிக்காத
அல்லது நீ அறியாத
எனது பேரன்பின் வெளியில்
உனக்காகவே
துளிர்ப்பதற்கு காத்திருக்கிறது
எண்ணற்ற மழைகாலங்கள்
காய்தலற்ற பசுமையோடும்
வண்ணத்துப் பூச்சிகளின் பறத்தலோடும்
பனி படர்ந்த
குளிர்ந்த புல்வெளியை
உனக்காகவே
விரித்து வைத்திருக்கிறது மனது
மூச்சுக்காற்றுக்குள்
உன் நறுமணம் கமழ்கையில்
என் கைகளுக்குள்ளான
உன் இருப்பின் தருணத்தில்
உன்னுடன் பகிர்ந்து கொள்வதற்காகவே
வைத்திருக்கிறேன்
யுகயுகங்களாய் தகித்துக் கொண்டிருக்கும்
என் தீராக்காதலை
Labels: ஆதி

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home