Tuesday, 5 March 2013

நிஜமான வெகுமதி எது.........?True Prize.......?

True Prize.......? - Child Care Tips and Informations in Tamil

என் பையன் "ஸ்டோரி டெல்லிங்"ல முதல் பரிசு வாங்கியிருக்கான். மாலை அவனை கடைக்கு அழைச்சிட்டுப் போய் பரிசு வாங்கித் தர்றேன்னு சொல்லியிருக்கேன் என்று பெருமையாக சொல்லும் அம்மா.

சாதனை படைத்த மகனுக்கு வெகுமதி தருவதில் ஒரு தாயாக அவர் காட்டிய ஆர்வம் பாராட்டத்தக்கதுதான். ஆனால் தாய்மார்கள் எதற்கெல்லாம் தங்கள் குழந்தைகளை தட்டிக் கொடுக்கிறார்கள்? பள்ளியில் நல்ல ரேங்க் வாங்கினால்... விளையாட்டுப் போட்டிகளில் கோப்பை வாங்கினால்... இப்படி இந்த உலகம் எதையெல்லாம் அங்கீகரித்து அடையாளம் காட்டுகிறதோ... அதற்கெல்லாம்தான் தங்கள் பங்குக்கும் வெகுமதி கொடுத்து தட்டிக் கொடுக்கிறார்கள். போதுமா இது?

வெகுமதி என்பதே ஒரு நல்ல காரியத்தை மீண்டும் மீண்டும் செய்யத் தூண்டுகிற ஊக்க மருந்துதானே? அது, பத்திருபது பேருடன் நடக்கிற போட்டிகளில் ஜெயிப்பதற்கு மட்டும் ஊக்க மருந்தாக இருந்தால் போதுமானதா என்ன? இந்த சமூகத்தை மகிழ்ச்சிகரமாக, நிம்மதியாக, மனநிறைவாக, வைத்துக் கொள்வற்கு ஒவ்வொரு மனிதனும் தன்னளவில் கடைப்பிடிக்க வேண்டிய பல நல்ல குணங்களை ஊக்குவிப்பதற்கும் இதை பயன்படுத்த வேண்டாமா?

உதாரணமாக, குழந்தை ஒரு நாள் வந்து, "அம்மா... இன்னிக்கு நான் கிளாஸ்ல ஒரு பையன் சட்டையில இங்க் தெளிச்சுட்டேன். மிஸ் என்னைத் திட்டினாங்க தப்புதாம்மா.. இனிமே அப்படி பண்ணமாட்டேன்" என்று தழுதழுத்து சொன்னால்... தவறுக்கு வருந்துகிற அந்த மனோபாவமும், தன்னிடம் உள்ள குறையை வெளிப்படையாக பகிர்ந்துகொள்கிற தன்னம்பிக்கையும் மேலும் மேலும் உற்சாகப்படுத்தவேண்டிய ஒரு சாதனைதானே! அந்தக் குழந்தைக்குப் பரிசாகவோ, பாராட்டாகவோ ஒரு சிறிய வெகுமதி கொடுப்பதுதானே முறை?
அதே போல், மனிதர்களை அவர்களுடைய மனங்களுக்காக மதிக்க வேண்டுமே தவிர, வெளியில் தெரியும் அவர்களின் பகட்டு வசதிகளுக்காக அல்ல என்பதையும் குழந்தைகள் மனதில் பதிய வைக்கவேண்டிய கட்டாயம் இருக்கிறது. காரில் வந்து இறங்குகிறவர்களுக்கு ஒரு மரியாதையும், ஸ்கூட்டரிலும், சைக்கிளிலும் வருபவர்களுக்கு இன்னொருவித வரவேற்பும் தருகிற சில பெற்றோரைப் பார்த்து, "காசும் பணமும்தான் முக்கியம்" என்கிற தவறான பாடத்தை குழந்தைகள் கற்றுக் கொள்கிற அபாயம் இருக்கிறதே!

பாசமும் பண்பும் நேர்மையும் உள்ள நல்ல மனிதர்கள் யாராக இருந்தாலும் அவர்களிடம் குழந்தைகள் கள்ளங்கபடமின்றி போய் ஒட்டிக் கொண்டால், அதை தட்டிக் கொடுத்து பாராட்டியே ஆக வேண்டும்! வெகுமதிக்குரிய நல்ல குணம் இதுவும் தான். சொல்லப்போனால் இதில் ஒரு சுயநல சிந்தனையும் இருக்கிறது. காரும் பங்களாவுமாக நம் குழந்தைகள் கண்ணெதிரில் மளமளவென்று வளரும்போது கூட, "பெற்றவர்களை அவர்கள் பொழியும் பாசத்துக்காகவும், தன்னலமற்ற தியாகத்துக்காகவும் எந்நாளும் மதிக்க வேண்டும்" என்ற உணர்வுபூர்வமான ஒட்டுதல் பிள்ளைகளிடம் நீடித்திருக்கும்.

"அறம் செய விரும்பு", "ஆறுவது சினம்" என்பதை ஏட்டுக் கல்வியாக மட்டுமே எழுதி ஒப்பிக்கும்போது தருகிற வெகுமதி முக்கியமல்ல... அதை நடைமுறையில் குழந்தைகள் காட்டும் போது தட்டிக் கொடுத்து, தழுவிக் கொள்வதுதான் நிஜமான வெகுமதி, சரிதானே...!

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home