Thursday, 24 January 2013

கவிஞர் காசி ஆனந்தன் கவிதை தொகுப்பு 11

கவிஞர் காசி ஆனந்தன் கவிதை தொகுப்பு  11


குயிலுக்கு வாழ்வு கொடு

இறைவா! எனக்கின்னும்
பல்லாண்டுயிர் ஈந்தளிப்பாய்! - என்னை
மறையா திங்கு வைத்துத்
தமிழுக்கு வாழ்வளிப்பாய்! - கொடுஞ்
சிறையால் தமிழ்மாந்தர்
படுந்துயர் அறியாயோ? - அட
இறைவா! எனக்குயிர்
தந்தால் சிறை உடையாதோ?
நோயால் எனையுருக்கி
எலும்பாக மாற்றிவிட்டாய்! - இந்த
வாயால் ஓய்விலாது
குருதி வரவும் செய்தாய்! - உன்றன்
சேயாம் தமிழ்க்குலத்தின்
துயர் களைந்திட்ட பிள்ளை - இன்று
காயாய் இருக்கையிலே
வீழ்ந்து கருகவைப்பாயோ?
உன்னை வணங்கி நின்ற
பாரதியின் பின்னொருவன்- நின்தாள்
தன்னை வணங்குகின்றேன்
அவனைப்போல் பாதியிலே - பாவி
என்னையும் நீ பறித்தால்
தமிழ்ச்சாதி ஏங்கிப்போகும்!- என்றன்
அன்னை வீழ்ந்து துடிப்பாள்
நீ என்னை அழைக்கலாமோ?
உயிரை நீட்டி என்னை
முன்போல் உலவ விடுவாய்!- சூழும்
துயிலை நீக்கி வைப்பாய்!
புதிதோர் துணிவளிப்பாய்! - அஞ்சா
வயிரநெஞ்சில் ஒன்றும்
மலைத்தோளும் ஈந்தருள்வாய்! - இந்தக்
குயிலை வாழ வைப்பாய்!
தமிழ் கூவவேண்டும் ஐயா!


தமிழ்க் கன்னி தோற்றம்

எத்தனை எத்தனை இன்பக் கனவுகள்...
என்ன புதுமையடா! - அட
புத்தம் புதுக்கிளி சோலைப் புறத்திலே
போடும் ஒலியிவளோ? - வந்து
கத்துங் குயிலின் இசையோ? கலைமயில்
காட்டும் புதுக்கூத்தோ? - அட
முத்தமிழ்க் கன்னியின் பேரெழிலை ஒரு
மொழியில் உரைப்பதோடா?

மன்னர் வளர்த்த புகழுடையாள்! இவள்
மக்கள் உறவுடையாள்! - நல்ல
செந்நெல் வளர்க்கும் உழவ ரிசையில்
சிரிக்கும் அழகுடையாள்! - சிறு
கன்னி வயதின் நடையுடையாள்! - உயர்
காதல் வடிவுடையாள்! - தமிழ்
என்னு மினிய பெயருடையாள்! - இவள்
என்றும் உயிருடையாள்!

முந்திப் பிறந்தவள் செந்தமி ழாயினும்
மூப்பு வரவில்லையே! - மணச்
சந்தனக் காட்டுப் பொதிகை மகளுக்குச்
சாயல் கெடவில்லையோ! - அட
விந்தை மகளிவள் சிந்தும் எழில்தனில்
விழிகள் சுழலுதடா! - கவி
தந்து சிரிக்கும் அழகன் எனக்கிவள்
தன்னைத் தரவந்ததோ?

தொள்ளு தமிழ்மகள் வண்ண முகத்திலே
செம்மை கொலுவிருக்கும்! - ஒளி
கொள்ளும் இதழில் மலர்நகை யொன்று
குழைந்து குழைந்திருக்கும்! - உயிர்
அள்ளும் விழிகள் இரண்டிலு மாயிரம்
ஆற்றல் நிறைந்திருக்கும்! - இவள்
உள்ள மிருக்கும் இடத்திலே காதலும்
ஒளிந்து மறைந்திருக்கும்!

தேனுங் கனியும் மதுவுங் கலந்தொன்று
சேர்ந்த உடலுடையாள்! - கன்னி
மானமெனு மெழில் ஆடையணிந்து
மயக்கப் பிறந்தவளோ? - அட
நானு மிவளும் இருக்கு முலகிலே
நாணம் இருக்குமோடா? - நாங்கள்
வான மளவு பறந்துவிட் டோமிந்த
வையம் தெரியவில்லை!

காலின் சிலம்பும் வளையும் இசையொலி
காட்டப் பறந்து வந்தாள்! - அந்த
நூலின் இடையிலே கை கொடுத்தும் விழி
நோக்கில் உயிர் கொடுத்தும் - ஒரு
வேலின் விரைவில் பறந்து வந்தேன்! - அவள்
வெள்ளை மனந் திறந்து... - புதுப்
பாலின் சுவையும் வெறியுங் கலந்தொரு
பாடம் நடத்துகின்றாள்.... 
 
 

களம் புகுவாய்!

மானம் எனுமொரு பானையில் வாழ்வெனும்
தீனி சமைத்தவனே! - தமிழ்
போனதடா சிறை போனதடா! அட
பொங்கி எழுந்திடடா!

காட்டு தமிழ்மறம்! ஓட்டு வரும்பகை!
பூட்டு நொறுக்கிடுவாய்! - நிலை
நாட்டு குலப்புகழ்! தீட்டு புதுக்கவி!
ஏற்று தமிழ்க் கொடியே!

முந்து தமிழ்மொழி நொந்து வதைபட
இந்தி வலம் வரவோ? - இது
நிந்தை! உடனுயிர் தந்து புகழ்பெறு!
வந்து களம் புகுவாய்!

நாறு பிணக்களம் நூறு படித்தநம்
வீறு மிகுந்த குலம் - பெறும்
ஊறு துடைத்திடு மாறு புறப்படு!
ஏறு நிகர்த்தவனே!

நாலு திசைகளும் ஆள நடுங்கிய
கோழை எனக்கிடந்தாய்! - மலைத்
தோளும் குனிந்தது போலும்! விழித்தெழு!
காலம் அழைக்குதடா! 
 
 

இனமானப் புலி எங்கே?

இன்றிருந்த பகல்தனிலே
ஞாயிறில்லை!
இரவினிலும் நிலவில்லை!
விண்மீன் இல்லை!
இன்றெரிந்த விளக்கினிலே
வெளிச்சம் இல்லை!
எண்டிசையும் செடிகொடியில்
பூக்கள் இல்லை!
இன்றிதழ்கள் ஒன்றிலுமே
முறுவல் இல்லை!
இன்றெமது நாட்டினிலே
பெரியார் இல்லை!
எவர்தருவார் ஆறுதல்? இங்
கெவரும் இல்லை!

கோல்தரித்து நேற்றுலகைத்
தமிழன் ஆண்டான்!
கொற்றவனை அவனை இழி
வாக்கி மார்பில்
நூல்தரித்து மேய்ப்போராய்
நுழைந்த கூட்டம்
நூறு கதை உருவாக்கி
"பிரம்ம தேவன்
கால்தரித்த கருவினிலே
தமிழன் வந்தான்
காணீர் என்றுரைத்தமொழி
கேட்டுக் கண்ணீர்
வேல்தரித்து நெஞ்சில் வெந்
தழல் தரித்து
வெகுண்டெழுந்த பெரியாரை
இழந்து விட்டோம்!

அஞ்சுதலும் கெஞ்சுதலும்
அறியா வீரர்
அறவலியும் மறவலியும்
நிறைந்த செம்மல்
நெஞ்சுரமும் நிமிர்நடையும்
படைத்த வல்லான்
நிறைமதியும் போர்க்குணமும்
இணைந்த ஆற்றல்
துஞ்சுதலும் உடற்சோர்வும்
இலாப் போராளி
தொடுபகையும் சூழ்ச்சிகளும்
உடைத்த சூறை
நஞ்சரையும் வஞ்சரையும்
மிதித்த வேழம்
நடுவழியில் எமைநிறுத்தி
நடந்ததெங்கே? 
 
 

எக்களிப்பு

குளித்து வந்தான் எழுபரிதி!

தங்கத் தழல் ஒளியில்
பூத்ததடா தமிழ் ஈழம்!

பொங்குபோர் ஆடிவர
இளம்புலிகள் புறப்பட்டார்....

சங்கொலியும் முழவொலியும்
கேளீரோ தமிழ்மக்காள்!

எங்கள் அருந் தமிழ்மண்ணில்
இராவணனார் பொன் மண்ணில்

அங்குலமும் இனி நாங்கள்
அயல் வெறியர் ஆளவிடோம்!

கங்குல் விலகின காண்!
எங்கள் தமிழ் மேல் ஆணை!

தங்கத் தமிழ் ஈழம்
தமிழனுக்கே! தமிழனுக்கே!

மூச்சுடையீர்! தமிழரே!
முன்வாரீர்! இனியும் வாய்

வீச்சினிலே நாள் கடத்தி
விளையாடல் வேண்டாங்காண்!

மேய்ச்சலிலே போன துகள்
ஆள்வோரின் தொழுவத்தில்

பூச்சி புழு வைக்கோலும்
பிண்ணாக்கும் விழுங்கட்டும்!

கூச்சமுடையோம் நாங்கள்
குலமானம் ஒன்றுடையோம்!

சீச்சீ.. அட தமிழா!
சிறப்பிழந்து வாழ்வோமா?

ஆச்சி! உன் பிள்ளையை
ஆடவிடு போர்க் களத்தே!

போச்சுதடி பழங் காலம்!
பூத்தது பார் தமிழ் ஈழம்!

நாம் பிறந்த நம் மண்ணில்
நாமே இனி அரசர்!

கூம்புகரம் இங்கில்லை!
குனிந்த தலை இன்றில்லை!

பாம்புக்கும் முதலைக்கும்
பணிந்து தலைவணங்கித்

தேம்பி இனித் தமிழன்
திரிவதில்லை...! போர்க்களத்தில்...

மாம்பழம் போல் குண்டுவரும்
மார்பினிக்க நாம் உண்போம்!

சாம் பொழுதும் தமிழரசு
தனைநிறுவி உயிர்விடுவோம்!

ஆம் தமிழா! அதோ பாராய்...
அரும்பியது தமிழீழம்!

மேம்பட்டான் தமிழ்மறவன்!
வீரன் தோள் வாழியவே!

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home