Wednesday, 23 January 2013

கவிஞர் காசி ஆனந்தன் கவிதை தொகுப்பு 1

கவிஞர் காசி ஆனந்தன் கவிதை தொகுப்பு 1

 

 

பொங்கி வாடா!


தீயெழுந்து அடுப்பினிலே பாலைச் சுட்டால்
சினந்தெழுந்து பால்பொங்கித் தீயணைக்கும்!
நீ உவந்து செய்கின்ற பொங்கல் வெற்று
நிகழ்வன்று.... வீரத்தின் பாடம் கண்டாய்!
தாயிழந்த சேயர்போல் தமிழர் ஈழம்
தனையிழந்து சினங்கொண்டு பொங்குகின்றார்!
பாய்! சிவந்து களமாடு! பொங்கி வாடா!
பகைநொறுக்கித் தமிழீழ மண்ணை மீட்போம்!
திரைப்படத்தின் மார்புகளைத் தின்னும் கண்ணால்
தீந்தமிழ்த்தாய் ஈழத்தில் சாவின் வாயில்
இரைப்படப்போய் விழும்புலிகள் களத்தின் புண்கள்
இருந்த மலை மார்புகளைப் பார்ப்பாய்! ஆங்கே
நிரைப்பட நாளும் களத்தை நிறைத்தார் வீரர்!
நீ என்னடா இங்கே கிழித்தாய்? வீழ்ந்து
தரைப்பட நீ கிடக்கின்றாய்! பொங்கி வாடா!
தமிழீழம் மலர உடன் ஆணை ஏற்போம்!
நேற்றுவரை உனக்குதவி நின்ற மாட்டை
நேர்நின்று மோதுகிறாய்.... தமிழீழத்தில்
நாற்றிசையும் குண்டுகளால் உன்இனத்தை
நாளும் அழிக்கின்றார்.... நீ மோதினாயா?
போற்று தமிழ் இனமானம்! தமிழனாய் நீ
பொங்கல் செய்! விழித்தெழுவாய்! வீறுகொண்டு
காற்றெழுந்தால் புயலாகும்! பொங்கி வாடா!
களம் காண்போம்! தமிழீழம் காப்போம்! காப்போம்!


நெருப்பாய் எரிகிறதே நெஞ்சு!


செந்தமிழர் மாவீரர் வன்னியசிங் கத்தை நாம்
வெந்தழலில் வைத்தோம்... விடுதலையே
சிந்தனையாய்
நின்றார் அறவீரர்! அன்னார் உயிர் நீஏன்
கொன்றாய்? கொடுஞ்சாவே கூறு!
அஞ்சிப் பகைவர் அதிர்ந்து நிலைகுலைய
நெஞ்சில் கனல்தாங்கி நின்றானை
வெஞ்சிறையில்
பொன்னாய்ப் பழுத்த புகழுக்குரியானை
எந்நாள்யாம் காண்போம் இனி?
பாரில் தமிழர் படைவெல்லப் போராடி
போரில் கொடுமை பொழுதெல்லாம்
நேரில்
விருப்பாய் மகிழ்ந்தேற்ற வீரர் மறைந்தார்!
நெருப்பாய் எரிகிறதே நெஞ்சு!
ஆற்றல் மிகுபேச்சால் ஈழத்திலே சூறைக்
காற்றை எழுப்பியவன் கண்துயின்றான்!
நாற்றிசையும்
பொங்கு தமிழ்முழக்கம் செய்த களத்தின்போர்ச்
சங்கை நொறுக்கியதோ சாவு?
கண்ணின் மணித்தலைவர் செல்வா வழிகாட்ட
மண்ணில் அவர் கொள்கை மணிவிழியாய்
எண்ணி
இனம்வாழ வாழ்ந்தார் இலையே எவ்வண்ணம்
மனம்தோறும் எங்கள்தாய் மண்?


கியூபா முழக்கம்


ஆள்கின்றாய் கொடுஞ் சிங்கள லங்கா!
ஆணவம் சேட்டை அனைத்தும் நிறுத்து!
வாழ்தமிழ் ஈழம் தமிழர் தாயகம்!
வரலாற்றுண்மை நெஞ்சில் இருத்து!
பண்டைத் தமிழன் காலின் சுவடுகள்
பைந்தமிழ் மண்ணில் அழிந்திடவில்லை!
அன்றைத் தமிழன் ஆடியகுளத்தில்
அலைகள் இன்னும் கலைந்திடவில்லை!
ஆள்கின்றாய் கொடுஞ்சிங்கள லங்கா!
ஆணவம் சேட்டை அனைத்தும் நிறுத்து!
வாழ்தமிழ் ஈழம் தமிழர் தாயகம்!
வரலாற்றுண்மை நெஞ்சில் இருத்து!
கோல வானைக் குருவி விழுங்குமோ?
கொடுவாய் முதலை விழுங்குமோ ஆற்றை?
ஈழ மண்ணை லங்கா விழுங்குமோ?
எங்கே பார்க்கலாம்...! என்னடா சேட்டை!
ஆள்கின்றாய் கொடுஞ்சிங்கள லங்கா!
ஆணவம் சேட்டை அனைத்தும் நிறுத்து!
வாழ்தமிழ் ஈழம் தமிழர் தாயகம்!
வரலாற்றுண்மை! நெஞ்சில் இருத்து
பாவி! நீ எம் மண்மிசை இந்நாள்
பாய்ச்சும் துப்பாக்கியின் கொடும் ரவைகள்
நீ அவை ரவைகள் என நினைத்தாலும்
நிச்சயம் அவைகள் சுதந்திர விதைகள்!
ஆள்கின்றாய் கொடுஞ் சிங்கள லங்கா!
ஆணவம் சேட்டை அனைத்தும் நிறுத்து!
வாழ்தமிழ் ஈழம் தமிழர் தாயகம்!
வரலாற்றுண்மை! நெஞ்சில் இருத்து!
தமிழ் ஈழம் யாம் பெறுவது மெய்யே!
தகர்ந்து சிதறும் எதிரிகள் கையே!
தமிழர் நெஞ்சில் எரிவது நெருப்பே!
தமிழ் வீரம் தமிழர்கை இருப்பே!
ஆள்கின்றாய் கொடுஞ்சிங்கள லங்கா!
ஆணவம் சேட்டை அனைத்தும் நிறுத்து!
வாழ்தமிழ் ஈழம் தமிழர் தாயகம்!
வரலாற்றுண்மை! நெஞ்சில் இருத்து!


நெருப்புப் பழம்
 
 
நெருப்புப் பழம் ஒன்று
நெஞ்சில் கனிகிறது...!
அன்னைத் தமிழ் ஈழம்
என்றன் உயிர்த்தாயகம்
தன்னை வென் தொட்டான்?
தமிழா எழுக! என
மின்னை இடியைப்
புயலைத் தமிழ்செய்தேன்...
என்னைக் கொடுங்கவிஞன்
என்றார் நிறையிட்டார்...
நெருப்புப் பழம் ஒன்று
நெஞ்சில் கனிகிறது...!
ஓங்கு நெடுமதில்கள்
உள்ளே இருட்கோலம்
தாங்க முடியா நோய்
தாகம் பசிக்கொடுமை
தீங்கு படைக்கும்
கொடியர் சிறைக்கோட்டம்
ஏங்கி ஒரு தமிழன்
இங்கு மடிகின்றேன்...
நெருப்புப் பழம் ஒன்று
நெஞ்சில் கனிகிறது...!
என்னே இவ்வையம்!
எனைப்போல் ஒரு மனிதன்
மண்ணாள இங்கே
வளைந்துயான் அம்மனிதன்
சொன்னடி கைகள்
கட்டித் தொழும்பியிற்றும்
பொண்ணைப் பயலானேன்...
போதும்! இதுபோதும்!
நெருப்புப் பழம் ஒன்று
நெஞ்சில் கனிகிறது...!
வானில் கிளி பறக்கும்...
வண்ணக் கொடிமுல்லை
தான் நினைந்த பக்கம்
தழுவிப் படர்ந்திருக்கும்
மாநிலத்தே யான்
அட! இம் மதில் நடுவில்
ஏனிப்படி இருந்தேன்?
என்ன பிழை செய்தேன்?
நெருப்புப் பழம் ஒன்று
நெஞ்சில் கனிகிறது...!
பட்டு நிலா வான்
மிசை எழப் பாரெங்கும்
கொட்டு முழவிசையில்
கூத்தாட வையத்தின்
எட்டுத் திசையும்
மகிழத் தமிழன்யான்
மட்டும் துயர் தாங்கி
மாளப் பிறந்தேனா?
நெருப்புப் பழம் ஒன்று
நெஞ்சில் கனிகிறது...!
"நானோ அடிமை?"
என நா விளிக்கிறது!
கூனோ டிருக்கும்
உடலம் கொதிக்கிறது!
தேனோ மரணம்
என நெஞ் சொலிக்கிறது!
ஏனோ விழியில்
இரத்தம் பனிக்கிறது
நெருப்புப் பழம் ஒன்று
நெஞ்சில் கனிகிறது...!


முழக்கம்


தடித்த சிங்களத்தின் தறுக்கனே! மூடா!
தமிழன்யான் உனைக்கண்டு தலைதாழ்த்தவோடா?
துடிப்புள்ள தமிழ்வீரர் தோள்வீரம் அறியாய்...
துள்ளுகின்றாயடா! நில்! எங்கள் மண்ணில்
வெடிக்கின்ற குண்டுக்கும் அசையாத வீரர்
விளைந்துள்ள காலம் நீ வி€ளாயடுகின்றாய்!
இடிக்கின்றாயா? சரி... இடித்துப்பார் என்றன்
எலும்போடு தசைமோதித் தமிழென்றே கூறும்!
செந்தமிழ்க் கனலூறி வளர்ந்த இம்மேனி
சிறுத்தையின் எழில்மேனி வளையுமோ கூனி?
மந்திரமான செந்தமிழோடு வாழ்ந்தோம்!
மலைமோதினாலும் நிலைதாழுவோமா?
தந்தை இராவணன் ஆண்ட பொன்னாடு!
தமிழீழ நாடென்றன் தாய்நாடு கண்டாய்!
இந்தமண் மீட்பதே என் முதல்வேலை!
ஏன் மோதினாய்? என்முன் நீ எந்த மூலை!
வெறியாடும் சிங்களர் படைவீரா! இதுகேள்!
விடுதலை வீரரைத் தொடுதலை நிறுத்து!
பொறிகக்கும் விழியோடு புலிகள்யாம் நின்றோம்!
பொன்னீழம் உயிரென்றோம்... போராடுகின்றோம்!
சிறிதடா நின்பாய்ச்சல்! பெரி தெங்கள் மூச்சு!
செந்தமிழ் வீரரை என்செய வந்தாய்!
அறிக! இங்கோர் புயல் விரைவில் வெடிக்கும்!
அந்நாள் உன்சிங்களம் பாடம் படிக்கும்!
நில்லா இம்மண்மிசை அநீதிகள் நில்லா!
நிறைவெறி யாளனே! நின்படை வெல்லா!
செல்லாதடா நின்றன் செருக்கிந்த நாட்டில்!
செந்தமிழன் கதை படித்துப்பார் ஏட்டில்!
எல்லார்க்கும் இம்மண்ணில் இடமுண்டு கண்டாய்!
எதிரியின் உடல்மட்டும் விழும்துண்டு துண்டாய்!
பொல்லார்க்குப் பொல்லாத நாடெங்கள் நாடு!
புரிந்து கொண்டாயா நீ இப்போதே ஓடு!

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home