Friday, 25 January 2013

பாரதியார் கவிதைகள் 2


மனப்பெண்

மனமெனும் பெண்ணே! வாழிநீ கேளாய்
ஒன்றையே பற்றி யூச லாடுவாய்
அடுத்ததை நோக்கி யடுத்தடுத் துலவுவாய்
நன்றையே கொள்ளெனிற் சோர்ந்துகை நழுவுவாய்
விட்டுவி டென்றதை விடாதுபோய் விழுவாய்
தொட்டதை மீள மீளவுந் தொடுவாய்
புதியது காணிற் புலனழிந் திடுவாய்
புதியது விரும்புவாய் புதியதை யஞ்சுவாய்
அடிக்கடி மதுவினை யணுகிடும் வண்டுபோல்
பழமையாம் பொருளிற் பரிந்துபோய் வீழ்வாய்
பழமையே யன்றிப் பார்மிசை யேதும்
புதுமைகா ணோமெனப் பொருமுவாய், சிச்சி!
பிணத்தினை விரும்புங் காக்கையே போல
அழுகுதல், சாதல், அஞ்சுதல் முதலிய
இழிபொருள் காணில் விரைந்ததி லிசைவாய்.
அங்ஙனே
என்னிடத் தென்று மாறுத லில்லா
அன்புகொண் டிருப்பாய், ஆவிகாத் திடுவாய்
கண்ணினோர் கண்ணாய்க் காதின் காதாய்ப்
புலன்புலப் படுத்தும் புலனா யென்னை
உலக வுருளையில் ஒட்டுற வகுப்பாய்,
இன்பெலாந் தருவாய், இன்பத்து மயங்குவாய்,
இன்பமே நாடியெண் ணிலாப்பிழை செய்வாய்,
இன்பங் காத்துத் துன்பமே யழிப்பாய்,
இன்பமென் றெண்ணித் துன்பத்து வீழ்வாய்,
தன்னை யறியாய், சகத்தெலாந் தொலைப்பாய்,
தன்பின் னிற்குத் தனிப்பரம் பொருளைக்
காணவே வருந்துவாய், காணெனிற் காணாய்,
சதத்தின் விதிகளைத் தனித்தனி யறிவாய்,
பொதுநிலை யறியாய், பொருளையுங் காணாய்,
மனமெனும் பெண்ணே! வாழிநீ கேளாய்!
நின்னொடு வாழு நெறியுநன் கறிந்திடேன்;
இத்தனை நாட்போல் இனியுநின் னின்பமே
விரும்புவன்; நின்னை மேம்படுத் திடவே
முயற்சிகள் புரிவேன்; முத்தியுத் தேடுவேன்;
உன்விழிப் படாமல் என்விழிப் பட்ட
சிவமெனும் பொருளைத் தினமும் போற்றி
உன்றனக் கின்ப மோங்கிடச் செய்வேன். 

விடுதலை - சிட்டுக் குருவி


விட்டுவிடுதலை யாகிநிற்பா யிந்தச்
சிட்டுக் குருவியைப் போலே.

சரணங்கள்

எட்டுத் திசையும் பறந்து திரிகுவை
ஏறியக் காற்றில் விரைவோடு நீந்துவை
மட்டுப் படாதெங்கும் கொட்டிக் கிடக்குமிவ்
வானொளி யென்னு மதுவின் சுவையுண்டு (விட்டு)

பெட்டையி னோடின்பம் பேசிக் களிப்புற்றுப்
பீடையி லாததொர் கூடுகட் டிக்கொண்டு
முட்டை தருங்குஞ்சைக் காத்து மகிழ்வெய்தி
முந்த உணவு கொடுத்தன்பு செய்திங்கு (விட்டு)

முற்றத்தி லேயுங் கழனி வெளியிலும்
முண்கண்ட தானியம் தன்னைக் கொணர்ந்துண்டு
மற்றப் பொழுது கதைசொல்லித் தூங்கிப்பின்
வைகறை யாகுமுன் பாடி விழிப்புற்று (விட்டு) 

ஒளியும் இருளும்

வான மெங்கும் பரிதியின் சோதி;
மலைகள் மீதும் பரிதியின் சோதி;
தானை நீர்க்கடல் மீதிலு மாங்கே
தரையின் மீதுந் தருக்களின் மீதும்
கான கத்திலும் பற்பல ஆற்றின்
கரைகள்மீதும் பரிதியின் சோதி;
மான வன்ற னுளத்தினில் மட்டும்
வந்து நிற்கும் இருளிது வென்னே!

சோதி யென்னுங் கரையற்ற வெள்ளம்,
தோன்றி யெங்குந் திரைகொண்டு பாய,
சோதி யென்னும் பெருங்கடல், சோதிச்
சூறை, மாசறு சோதி யனந்தம்,
சோதி, யென்னு நிறைவிஃ துலகைச்
சூழ்ந்து நிற்ப, ஒருதனி நெஞ்சம்
சோதி யன்றதொர் சிற்றிருள் சேரக்
குமைந்து சோரும் கொடுமையி தென்னே

தேம லர்க்கொ ரமுதன்ன சோதி,
சேர்ந்து புள்ளினம் வாழ்த்திடும் சோதி,
காம முற்று நிலத்தோடு நீருங்
காற்று நன்கு தழுவி நகைத்தே
தாம யங்கிநல் லின்புறுஞ் சோதி,
தரணி முற்றுந் ததும்பி யிருப்ப,
தீமை கொண்ட புலையிருள் சேர்ந்தோர்
சிறிய நெஞ்சந் தியங்குவ தென்னே!

நீர்சு னைக்கணம் மின்னுற் றிலக,
நெடிய குன்றம் நகைத்தொழில் கொள்ள,
கார்ச்ச டைக்கரு மேகங்க ளெல்லாம்
கனக மொத்துச் சுடர்கொண் டுலாவ,
தேர்ச்சி கொண்டுபல் சாத்திரங் கற்றுந்
தெவிட்டொ ணாதநல் லின்பக் கருவாம்
வேர்ச்சு டர்பர மாண்பொருள் கேட்கும்
மெலிவொர் நெஞ்சிடை மேவுத லென்னே! 

சொல்

தேவர் வருகவென்று சொல்வதோ? - ஒரு
செம்மைத் தமிழ்மொழியை நாட்டினால்
ஆவலறிந்து வருவீர்கொலோ? - உம்மை
யன்றி யொருபுகலு மில்லையே

"ஓம்" என்றுரைத்து விடிற்போதுமோ? - அதில்
உண்மைப் பொரு ளறிய லாகுமோ?
தீமையனைத்து மிறந்தேகுமோ? - என்றன்
சித்தந் தெளிவு நிலை கூடுமோ?

"உண்மை யொளிர்க" வென்று பாடவோ? - அதில்
உங்களருள் பொருந்தக் கூடுமோ?
வண்மை யுடையதொரு சொல்லினால் - உங்கள்
வாழ்வு பெற விரும்பி நிற்கிறோம்.

"தீயை யகத்தினிடை மூட்டுவோம்" - என்று
செப்பு மொழிவலிய தாகுமோ?
ஈயைக் கருடநிலை யேற்றுவீர் - எம்மை
என்றுந் துயர மின்றி வாழ்த்துவீர்.

வான மழை பொழிதல் போலவே - நித்தம்
வந்து பொழியு மின்பங் கூட்டுவீர்
கானை யழித்து மனை கட்டுவீர் - துன்பக்
கட்டுச் சிதறிவிழ வெட்டுவீர்.

விரியு மறிவு நிலை காட்டுவீர் - அங்கு
வீழுஞ் சிறுமைகளை யோட்டுவீர்
தெரியு மொளிவிழியை நாட்டுவீர் - நல்ல
தீரப் பெருந் தொழிலிற் பூட்டுவீர்.

மின்ன லனைய திற லோங்குமே - உயிர்
வெள்ளங் கரையடங்கிப் பாயுமே
தின்னும் பொரு ளமுத மாகுமே - இங்கு
செய்கை யதனில் வெற்றி யேறுமே.

தெய்வக் கனல் விளைத்து காக்குமே - நம்மைச்
சேரு மிரு ளழியத் தாக்குமே.
கை வைத்தது பசும்பொன் னாகுமே - பின்பு
காலன் பய மொழிந்து போகுமே.

"வலிமை, வலிமை" யென்று பாடுவோம் - என்றும்
வாழுஞ் சுடர்க் குலத்தை நாடுவோம்
கலியைப் பிளந்திடக் கை யோங்கினோம் - நெஞ்சிற்
கவலை யிருள னைத்து நீங்கினோம்.

"அமிழ்தம் அமிழ்தம்" என்று கூவுவோம் - நித்தம்
அனலைப் பணிந்துமலர் தூவுவோம்
தமிழிற் பழமறையைப் பாடுவோம் - என்றுந்
தலைமை பெருமைபுகழ் கூடுவோம். 

நந்தலாலா

காக்கைச் சிறகினிலே நந்தலாலா - நின்றன்
கரியநிறந் தோன்றுதையே நந்தலாலா;

பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா - நின்றன்
பச்சைநிறந் தோன்றுதையே நந்தலாலா;

கேட்கு மொலியிலெல்லாம் நந்தலாலா - நின்றன்
கீத மிசைக்குதடா நந்தலாலா;

தீக்குள் விரலைவைத்தால் நந்தலாலா - நின்னைத்
தீண்டுமின்பந் தோன்றுதடா நந்தலாலா.

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home