Wednesday, 17 April 2013

இந்த உன் வீடு

உன் வீட்டிற்குள் பதுங்கிக்கிடக்கும்
என் காலடிச் சுவடுகள்
இங்கே நானிருப்பதன் தடயங்களேயன்றி

இந்த உன் வீடு தரும் சௌகரியங்கள்
என்னுள் உருவாக்குகின்ற
வெளி உலகின் மீதான பீதியை
பெரும் பதற்றத்தை
என்மீதே ஒரு அவநம்பிக்கையை
கடும் வெயிலிலோ
பெருகும் மழையிலோ
மற்றெப்போதைக் காட்டிலும் அதிகமாகவே

வீட்டிற்குள்ளிருப்பதைக் காட்டிலும்
வீட்டிற்கு வெளியே செல்லும் பயணங்களில்
கூடவே பயணித்து இம்சிக்கும்
அறிவுரைகளால் நோயுற்ற என் மனம்
உன்னைப் பற்றிய என் அபிப்ராயங்கள்
என்னுள்ளே வளர்த்தெடுக்கும்
உலகில் மிச்சமிருக்கும்
ஏனைய ஆண்களின்
மோசமான பிம்பங்களை.

உன் குறி கீறிப் பிறந்த
நம் குழந்தைகளின் எதிர்காலம் பின்னப்பட்டிருப்பது
எனது ஒழுக்கமான நடத்தையாலும்
பணிவாலும்
உன் காதில் விழாமலிருக்க
என்னுடையது குரலல்ல,
கேவல்

வெறுமனே குரல்களோடும்
உடல்களோடும் மட்டுமே
ஜீவித்து
தூசி படிந்த ஆன்மாவில்
குடியேறும் ஆந்தைகளின் கூட்டம்
துளையிடும் என் அன்றாட காரியங்களில்
பெரும் ஓட்டையை
வானில் எரியும் நட்சத்திரங்களுக்கு
மத்தியில்
வெகு
அமைதியாகவே இருக்கிறது
நான் மட்டுமேயிருக்கும்
இந்த உன் வீடு

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home