Thursday, 24 January 2013

கவிஞர் காசி ஆனந்தன் கவிதை தொகுப்பு 13

கவிஞர் காசி ஆனந்தன் கவிதை தொகுப்பு 13


போர்

தெய்வ மாவீரர் தமிழ் வீரர்
திரண்டு களத்தின் கண்ணே

செய்யும் அறப்போரை என்னென்று
தமிழில் செப்புவேனோ?

பெய்யும் மழைத் துளிகளென்னப்
பெருகிக் கொட்டும் மாற்றார்

கையின் குண்டுகளிடையிலே
தமிழர் களித்தாரம்மா!

குண்டின் அடிபட்டார் சில தோழர்
கூட்டஞ் சிறையாடிற்று!

தொண்டர் பலரங்கே தடியாலும்
தூள் தூளானார்! தமிழன்

மண்டையுடைந்ததே கதையெங்கும்!
எனினும் மாற்றார் தானை

கண்டக ‘ட்சியோ சிறிதேனும்
கலங்காத் தமிழர் படையே!

கொள்கை உயிரென நினைக்கின்ற
கூட்டம் உரிமைக் கோயில்

உள்ளே விடுதலை இறையோனை
அடைய ஓடுங் கூட்டம்

வெள்ளை நெஞ்சமும் அறநோக்கும்
அன்பும் கருவிகளாக்கித்

துள்ளுமொரு கூட்டம் பகைவர்க்கு
நடுங்கித் தூங்குமோடா? 

தமிழச்சி!

இலங்கை மலைதனிலே... தமிழச்சி!
என்ன துயரெலாம் காணுகின்றாயடி!
முழங்கை வலித்திடவே தேயிலை
முளைகள் பறித்து முகம் சிவப்பாயம்மா!
விலங்கும் உறங்கிநிற்கும் சாமத்தில்
விழித்து நெடுமலை ஏறி இறங்குவாய்!
பழங்கள் பழுத்திடாதோ உன் காலில்?
பச்சைக் குருதிநீர் பாயாதோ கண்மணி?

காலைப் பனிநனைவாய்! என்னம்மா...
காய்ந்து நடுவெயில் தனிலே கருகுவாய்;
பாலை நினைந்தழுவான் உன் பிள்ளை...
பாவி வெறும் முலை நினைந்தழுவாயடி!
ஏழை அடிமையடி தமிழச்சி!
இங்கோர் தமிழுடல் ஏனெடுத்தாயம்மா?
ஊழை நினைந்தழவோ? தமிழனின்
உரிமை இலாநிலை எண்ணி அழவோடி?

காட்டு மலைதனிலே... தமிழச்சி!
காலம் முழுவதும் நீ உழைத்தென்னடி?
ஓட்டைக் குடிசையொன்றும் வாழ்விலே
ஓயா வறுமையும் நோயும் இவையன்றி
தேட்டம் எதுபடைத்தாய்? அடி ஒரு
செம்புப் பணமேனும் தேறியதுண்டோடி?
நாட்டின் முதுகெலும்பே தமிழச்சி!
நானிலம் வாழநீ மாள்வதோ அம்மா? 

விடுதலைப் பொன்னாள்

காலங்கனிந்திடும் அழகுதானோ?
படைத்தவன் அருளோ? தமிழ்க்கன்னி
ஞாலம் மகிழ்ந்திட அரசுகொண்டு
வாழும் நாள் அடடா... மலர்ந்தாச்சோ?
கோலம் இதுபெருங் கோலமென்பேன்!
கொடுமைகள் பொடியாயின கண்டீர்!
நீல வான்மிசை தமிழ்நாட்டினர்தம்
கொடிகளும் எழுந்து நிறைந்தனவே!

கூனல் விதிக்கிழவியுடல் தேய்ந்தாள்
நிலைகாணீர்... குடுகுடென ஓடிப்
போன நரிபோலவே போகின்றாள்....
தமிழ் மண்ணின் மனைகள் தெருப்புறங்கள்
ஆன திசைக ளெங்கணுங் கொண்டாட்டம்!
ஒளிப் பந்தல்! அழகின் சிரிப்பம்மா!
மான விடுதலை மலர்ந்த கோலம்
உளங்கண்டு மகிழும் திருநாளோ?

முத்து வளைவுகள்! மணிகள்! பச்சை
மாவிலைப் பந்தல்! முகங்குனியும்
பத்தினிபோல் குலைசரித்த வாழை
தெருப்புறத்தே! கோலம் தரையெல்லாம்!
குத்து விளக்குகள்! மலர்கள்! காற்றில்
எழுந்தாடும் வண்ணக் கொடிக் கூட்டம்!
பத்துத் திசைகளும் அழகுக்காட்சி!
கவிஞன்கண் பார்த்துக் களிப்பதற்கே!

நீள நெடுநாள் அலைந்து களத்தே
போராடி நின்ற தமிழ்மறவர்
ஆள ஒரு நாள் கிடைத்த தென்றே
அணி சேர்ந்து பாடி அகமகிழ்வார்!
பாளையென எழில் முறுவல் விரிப்பர்
இளம் பெண்கள்! அவர் வாய்ப்பனிமுத்தம்
வேளைதொறும் அருந்தி விடுதலை நாள்
களிக்கின்றார் கொழுநர்! விழாவன்றோ? 

பெருமூச்சு

வலிபடைத்து முறமெடுத்துப்
புலியடித்த தமிழகம்
கிலிபிடித்த நிலைபடைத்து
வெலவெலத்து வாழ்வதோ?

பகையொ துங்கப் பறைமுழங்கிப்
புகழடைந்த தமிழகம்
கதிகலங்கி விழி பிதுங்கி
நடுநடுங்கி வாழ்வதோ?

படைநடத்தி மலைமுகத்தில்
கொடிபொறித்த தமிழகம்
துடிதுடித்து அடிபிடித்து
குடிகெடுத்து வாழ்வதோ?

கடல் கடந்த நிலமடைந்து
கதையளந்த தமிழகம்
உடல் வளைந்து நிலைதளர்ந்து
ஒளியிழந்து வாழ்வதோ?

மகனிறக்க முலையறுக்க
முடிவெடுத்த தமிழகம்
புகழிறக்க மொழியிறக்க
வெளிநகைக்க வாழ்வதோ? 

வீரத்தாய்!

தாலாட்டெனும் தமிழைத்
தவிர்ந்த பிற தமிழனைத்தும்
தமிழே அம்மா!

காலாட்டித் தமிழினத்தார்
கண்மூடி உறங்குதற்கோ
இஃது காலம்?

ஏன் பாட்டி பாடுகிறாய்?
இப்போதே போ! எனது
பிள்ளை கையில்

கூர்ஈட்டி ஒன்றெடுத்துக்
கொடு! களத்தே பாயட்டும்
குருதி வெள்ளம்!

தாயா நான்? யார் சொன்னார்?
தசை கொடுத்தேன்.... அவ்வளவே!
தமிழ்த்தாய் அன்றோ

சேயவனின் உடல் தாங்கும்
செங்குருதி மணி நீரின்
சொந்தக்காரி!

தீயோர் தம் கொடுஞ்சிறையில்
வாடுகிறாள் தமிழன்னை!
சிச்சி... இங்கே

வாய்மூடிக் கண்மூடி
உறங்குதற்கோ வளர்க்கின்றேன்
உதவாப்பிள்ளை!

ஓவென்று வீசுகின்ற
புயல்வெளியே மின்வெளியே
உடைந்து வீழ்ந்து

போமென்று வெடிக்கின்ற
வான்வெளியே இவ்வேளை
புதல்வன் உள்ளே

யாமின்று பாடுகின்ற
தாலாட்டில் உறங்குதற்கு
நீதி யாதோ?

சாவொன்று பாய்ந்து தமிழ்
தனையழிக்க வரும்போதோ
தமிழா தூக்கம்?

தேன்கட்டி தோற்றுப்போம்
இன்தமிழைப் பெற்றெடுத்த
தமிழ்த்தேன் நாடே!

ஏன் தொட்டில் ஆட்டுகிறாய்?
கயிறுகளை அறுத்துவிடு!
பிள்ளை தூங்கும்

பூந்தட்டைச் சிறு பாயை
தலைணையைத் தூக்கி எறி!
இப்போதே போ..

நீந்தட்டும் செந்நீரில்
உன்பிள்ளை! நிகழட்டும்
ஒருபோர் இன்றே!

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home