Friday, 1 March 2013

கூவுற சேவல்! - மருது அழகுராஜ்



ஊரு ஒறங்குன
நேரம் பாத்து
முத்தாத்தா வீட்டு கூரையில
அடைஞ்சு கிடந்த சேவலை
சத்தம் போட விடாம
சாகசமா அமுக்கியாந்து
அய்யனாரு கோவிலுக்கிட்ட
அறுத்து
மஞ்சப் பூசி
அனல்ல வாட்டி
அவசரமா கொழம்பு வெச்சு
முழு பாட்டில் சாராயத்தை
மொத்தமா குடிச்சிட்டு
கோழி மசிரையெல்லாம்
குழி தோண்டி
பொதைச்சுபுட்டு
சுவடு தெரியாம
சுத்தம் பண்ணி
வீடு வந்து படுத்துறங்கினா....
விடிஞ்சு எழுந்தபோது
இடி விழுந்த சத்தம்போல
என் ஆத்தாகாரி கத்துனா!
"நாகூர் ஆண்டவருக்கு
நேந்துவிட்ட சேவலை
எவன் கொண்டுபோனானோ
எடுபட்டவன்
அவன் தலையில் இடிவிழ
வறுத்து திண்ணவன்
வகுத்துல
புத்துவெச்சு போவான்னு"
ஒக்காந்து அழுது
பொலம்பனது கேட்டவுடன்
எனக்கு
மூச்சே நின்னுபோச்சு
திண்ண பயக நாலுபேரும்
திரண்டு மெரண்டு
பள்ளிவாசல்
கோயில்போனோம்
தாடிவெச்ச பெருசுகிட்ட
தவற சொல்லி....
அம்மாசி இருட்டுல
அடையாளம் தெரியாம
நேந்துவிட்ட சேவலை
நேத்து திண்ண
கதையைச் சொல்லி
பரிகாரம் கேட்டபோது....
"கோழிக்கு சொந்தக்காரனே
கூடியிருந்து திண்ணதால
விட்ட சாபம் பலிக்காது
வீண்பயம் தேவையில்லை
நாலணாவுக்கு
சக்கரை வாங்கி
பாத்தியா ஓதிப்போங்க"
பாவம் ஒன்னும் சேராது
பரிவா அவரு சொன்னாரு
அப்பாடான்னு அச்சம்போயி
அவரவர் வீடு போனோம்....
இருந்தாலும்,
அம்மாசி இருட்டா பாத்து
நம்ம வீட்டு
சேவல் ஏன்
நாலுவீடு தாண்டி
முத்தாத்தா
வீட்டுக் கூரைக்கு
முறைதவறி போகணும்?
'வெக்காளி'
வெடக்கோழிய மடக்க
வீடு தாண்டி போயிருக்காக!
மனுசனோ கோழியோ
'அதுக்கு'
அலையிறதுலதான்
ஆபத்தே வருதப்போய்!
கூவுற சேவல்
கோழிக்கு அலைஞ்சு
சீரழிஞ்ச கதை
நாலு பயலுக
எங்களுக்கு
நல்ல பாடமா போச்சு!

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home