Friday, 1 March 2013

பாண்டி முனி! - மருது அழகுராஜ்



அஞ்சலைய
பாண்டி முனி புடிச்சிருக்காம்
பழந்தினாப்பட்டி
கோடாங்கிக்கும்
பணிய மாட்டேங்குதாம்
புருஷனை
போடாங்குதாம்
மாமியாள குடுமி
புடிச்சு அடிக்குதாம்
இன்னக்கி
உடுக்க அடிச்சி
ஓட்டப் போறாகளாம்
காளி கோயிலுகிட்ட
உள்ள ஆலமரத்துல
கொண்டு போயி
முடியப் புடிச்சு
ஆணி அடிச்சாதான்
முனி வெலகுமாம்
ஊரு சனத்துக்கு
ஒருநா பொழுது
நல்லாவே போகும்
பொடுசுக தொடங்கி
பெருசுக வரைக்கும்
உடுக்கச்
சத்தம் கேட்கும்
தெசபார்த்து
ஓடுதுக பாரு
வருசம் பூராவும்
குடிச்சுட்டு
அந்தப் புள்ளய
அவபுருஷன்
பாடாப் படுத்துவான்
பாண்டி வந்து
எறங்குனதுல இருந்து
பயலுக்கு மூத்திரம்
பறிஞ்சு போச்சாம்
மாமியாக்காரியும்
மகவீட்டுக்கு
ஓடிப்போயிட்டாளாம்
பாண்டி மலையேறும்வரை
ஊருபக்கம்
தலைவெச்சு படுக்க மாட்டேனுட்டாளாம்!
எப்படியோ.....
இன்னக்கி
கோடாங்கி
முனிய பிரிச்சி
ஆலமரத்துல
ஆணி அடிச்சுட்டா
நாளையில இருந்து
ஆத்தாளும் மகனும்
மறுபடியும்
ஆரம்பிச்சுடுவாங்க
கச்சேரிய.....
முழு வாழை எலவிரிச்சு
பொறிகடலை
பூவு, தேங்கா,
பொட்டு, புட்டாமா,
மஞ்சள், சந்தனம்,
கருகமணி, வளையல்,
பாசி, பவளம்
பட்டுத்துணி, சுருட்டு,
முறுக்கு வடை, அதிரசம்
அத்தனையும் பரப்பி
வெடக்கோழி அடிச்சு
பட்டச்சாராயம்
பாட்டில்ல வச்சி
கோடாங்கி உடுக்கைய அடிக்க....
தலையவிரிச்சி போட்டுக்கிட்டு
அஞ்சல ஆடிச்சு
புதுப்பொண்ண
விட்டு நீயும்
புறங்காட்டி
ஓட வேணும்
அடம்புடிச்சி
நின்னாக்கா
ஆலமரத்தூருல - நான்
ஆணியில அறஞ்சிடுவேன்
அப்படின்னு
வாயில வந்ததையெல்லாம்
உடுக்க ஒலியோடு
ஒரக்கப் பாடுனாரு
கோடாங்கி
நெழலுக்கு
ஒதுங்கல நான்
நீ வெரட்ட முடியாது
அஞ்சலைய விட்டு
ஒரு அடி கூட
வைக்கமாட்டேன்னு
எதிர்பாட்டை
பாண்டிமுனியும் எடுத்துவிட.....
கோடாங்கி சிவனாண்டி
குலைநடுங்கிப் போனாரு
உடுக்கடுச்சு உடுக்கடுச்சு
உடல் சொணங்கிப்போனாரு
தளர்ந்துபோன கோடாங்கி
தந்திரமா யோசிச்சாரு
புள்ளகிட்ட
நெரந்திரமா - நீ
இருக்கணும்னா
சின்னஞ்சிறுசுகள
சீரழிக்கமாட்டேன்னு,
புருஷன் பொண்டாட்டி
உறவுகள்ள இடையூறு
செய்யாம
இருக்கறேன்னு,
அடிச்சு சொல்லு
சத்தியத்த....
உடுக்கைய நான்
சுருட்டிக்கிட்டு
ஊருக்குபோறேன்னாரு
அப்படியே
சத்தியத்த
அடிச்சுச் சொல்லுச்சு
பாண்டிமுனி
அஞ்சலையை
விட்டு இனி
அகலாம இருக்கும்
பாண்டி
சஞ்சலங்கள் வராத
வீடிருந்து
காக்கும் முனி
ஆனா,
இனி எல்லோரும்
அஞ்சலைய
பாண்டியம்மான்னு
மரியாதையா
கூப்பிடுங்க
பொறக்கும் புள்ளைக்கி
பாண்டியம்மா,
பாண்டிச்சாமின்னு
பேரு வெச்சு
பக்தியா நடந்துக்குங்க
அஞ்சலையா
நெனைச்சி அதிகாரம்
பண்ணாம
பாண்டியா நெனைச்சு
பாசத்தோடு பழகுங்க
அக்கிரமம் பண்ணுனா
உக்கிரமா எறங்கிடுவா
அநியாயம் செஞ்சாக்கா
அழிச்சுடுவா சாக்கிரத
கோடாங்கி சொல்லிப்புட்டு
கூலிவாங்கிப் போனாரு
அன்னைலருந்து
மாமியாகாரி
தடுக்கு விரிப்பா
மகங்காரன்
கால்புடிப்பான்
எப்படியோ
பாண்டி முனி தயவுல
இப்பல்லாம்
நம்ம அஞ்சல
மாமியா, புருஷனக்
கண்டு
அஞ்சல!

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home