Sunday, 3 March 2013

பால் குடிக்காதீங்க...- Do not drink milk

Do not drink milk - Child Care Tips and Informations in Tamil
நீங்க ரொம்ப வீக்காக இருக்கீங்க. பால், முட்டை, காய்கறிகளை தினசரி உணவில் சேர்த்துக்குங்க. பால் ஒரு கம்ப்ளீட் ஃபுட். பாலில் எல்லாச் சத்துக்களும் இருக்கு. சீக்கிரம் குணமாயிடுவீங்க.
உங்க குழந்தை சாப்பிடமாட்டேன் என்கிறானா. நைட்லகூட சாப்பிட மாட்டேன் என்கிறானா? ராத்திரியில குழந்தை வெறும் வயித்துல படுப்பது சரியில்ல. சாப்பாடு சாப்பிடாட்டியும் சரி, ஒரு க்ளாஸ் பால் குடிச்சிட்டாவது படுக்க வைங்க.

உங்களுக்கு தாய்ப்பால் கம்மியா இருக்கா. பரவா இல்ல. பசும்பால் குடுங்க. இல்லாட்டி, இப்பதான் கடைல விதவிதமான பால்பவுடர் டின்கள் கிடைக்குதே. அவனுக்கு எந்தச் சுவை புடிச்சிருக்கோ, அந்தப் பால் பவுடரை வாங்கிக் குடுங்க.

மேற்சொன்ன அறிவுரைகளை பல டாக்டர்களும் தங்களிடம் வரும் நோயாளிகளுக்கு சொல்லி வருவதை நீங்கள் கவனித்திருக்கலாம். ஆனால், ஜெகதீசன் என்ற ஒரு டாக்டர் 3 வயசுக்கு மேல யாரும் பால் குடிக்காதீங்க. குடிச்சா அது விஷம் என்று ஒரு வித்தியாசமான, ஆனால் ஆதாரபூர்வமான ஓர் அறிவுரையைத் தன்னிடம் வரும் நோயாளிகளுக்கு வழங்கி வருகிறார்.
உலகம் முழுக்க, அதுவும் மேற்கு நாடுகளிலுள்ள பல மருத்துவர்கள் பாலுக்கு எதிராகப் பல போராட்டங்களையும், அறிக்கைகளையும் விட்டுக் கொண்டிருக்க, நாம் மாத்திரம் அன்றாடம் பால் பொருட்களை சகட்டுமேனிக்கு உபயோகித்துக் கொண்டிருக்கும் பட்சத்தில், பாலின் விஷத்தன்மை பற்றி அவரிடம் கேட்டோம்.

பால் ஒரு முழுமையான முதல்தர உணவு என்று இதுநாள் வரை நம்பி வருகிறோம். இந்தக் கருத்து தாய்ப்பாலுக்கு மட்டுமே பொருந்தும். பிற விலங்குகளின் பால் ஒரு ஆபத்தான உணவு என்றும், அவற்றை அருந்துவது பலவிதமான நோய்களை உருவாக்கும் என்றும் சமீபகால மருத்துவ ஆராய்ச்சி முடிவுகள் நிரூபித்துள்ளன.

தாய்ப்பாலில் புரதம், கொழுப்பு, லாக்டோஸ் என்னும் சர்க்கரைச் சத்து மற்றும் வைட்டமின்கள், கால்சியம் ஆகியவை ஆறுமாத வயதுவரை உள்ள குழந்தைகளுக்குத் தேவையான அளவு உள்ளது. விலங்குகளின் பாலின் தரம் அதன் குட்டிகளின் உடல் மற்றும் மூளை வளர்ச்சிக்கேற்ப மாறுபடும். மனித மூளை அதிக வளர்ச்சியடைய வேண்டியிருப்பதால், தாய்ப்பாலில் லாக்டோஸ் என்னும் சர்க்கரைச் சத்து மிக அதிகமாக உள்ளது.

இந்த லாக்டோஸ் குழந்தையின் சிறுகுடலில் உள்ள லேக்டோஸ் என்னும் வேதிப்பொருளால் குளுக்கோஸ் மற்றும் கேலக்டோஸ் என்று இரண்டாகப் பிரிகிறது. இவற்றில் கேலக்டோஸ் மூளை வளர்ச்சிக்கு மிகவும் தேவையான ஒரு கட்டுமானப் பொருளாகும். மனித மூளை மூன்று வயதுக்குள் முழு வளர்ச்சியடைந்து விடும். எனவே, மூன்று வயதுக்குப் பின் கேலக்டோஸ் உடலுக்கும், மூளைக்கும் தேவையில்லாது போய்விடுகிறது. இதனால்தான் உலகிலுள்ள அனைத்து மனித இனங்களிலும் 99 சதவீத குழந்தைகளுக்கு மூன்று வயது முடிந்தவுடன் லேக்டேஸ் என்னும் வேதிப்பொருளை உருவாக்கும் மரபணு செயலிழந்து போகிறது. ஆகவே, மூன்று வயதுக்கு மேல் பால் அருந்துவதால் பாலில் உள்ள லாக்டோஸ் என்னும் சர்க்கரையின் பெரும் பகுதி எந்தவிதப் பயன்பாடுமில்லாமல் பெருங்குடலை அடைந்து, அங்குள்ள நுண்கிருமிகளுக்கு உணவாக அமையும். இதனால் பெருங்குடலில் கரியமில வாயு உற்பத்தியாகி, வயிறு பெருத்து பலவித உபாதைகளை உருவாக்குகிறது. மூன்று வயதுக்குப் பிறகும் நம் உடலில் சிறிதளவு லாக்டோஸ், கேலக்டோஸாக மாற்றம் அடையும். இந்த கேலக்டோஸ் மூளை வளர்ச்சி முடிந்தபின் உடலுக்குத் தேவையற்ற ஒரு விஷப் பொருள். இது எப்படியெனில், ஒரு வீடு கட்டி முடிக்கும் வரை செங்கல் மிகவும் தேவைப்படும். கட்டிட வேலை முழுமையடைந்த பின்னும் செங்கற்கள் தொடர்ந்து வந்து குவிந்து கொண்டிருந்தால், அவற்றைத் தேவையின்றி வீட்டின் எல்லா அறைகளுக்குள்ளும் அடுக்கி வைக்க நேரிடும். இதனால் வீடு பயன்படுத்த முடியாமல் போய் விடும். இது போலவே நமது உடலில் தேவையின்றி சேரும் கேலக்டோஸ், கண்களின் லென்ஸ், இரத்தக் குழாய்களின் உட்புறம், மற்றும் பெண்களின் சினைப்பை ஆகியவற்றில் அளவுக்கதிகமாகப் படிந்து கேடராக்ட் என்னும் கண்புரை நோய், இரத்தக் குழாய் அடைப்பு, சினைப்பை புற்று நோய் ஆகிய நோய்கள் உருவாகக் காரணமாக அமைகிறது. பால் அருந்தாத பெண்களைவிட, பால் அதிகமாகக் குடிக்கும் பெண்களுக்கு சினைப்பை புற்று நோய் மூன்று பங்கு அதிகமாக வருவது நிரூபிக்கப்பட்ட உண்மை.

சிறு வயது முதலே பசும்பால் குடித்து வளரும் குழந்தைகளுக்குப் பால் புரத ஒவ்வாமை நோய் ஏற்பட்டு, அதனால் ஆஸ்துமா, எக்சிமா என்னும் தோல் நோய் மற்றும் இளவயது சர்க்கரை நோய் போன்றவை வருவதற்கு பல மடங்கு அதிக வாய்ப்பு இருப்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதற்குக் காரணம், பாலில் உள்ள லாக்டால்புமின், லாக்ட்குளோபுலின் என்ற இரண்டு புரதப்பொருட்களே. ஒவ்வொரு விலங்கின் பாலிலும் இவை வேறுபட்டுக் காணப்படும். ஒரு விலங்கின் பாலை மற்றொரு விலங்கு குடிக்கும்போது, இந்தப் புரதங்களுக்கு எதிர்வினைப் பொருட்கள் உருவாகும். இந்த எதிர்வினைப் பொருட்கள் கணையத்திலுள்ள இன்சுலின் சுரக்கும் செல்களைப் பாதித்து, அதனால் குழந்தைப் பருவ சர்க்கரை நோய் உருவாகிறது.

பிற விலங்குகளின் பால் அருந்தும் அனைவருக்கும் இதுபோன்ற நோய்கள் வரும் என்று பயப்பட வேண்டாம். பால்புரத ஒவ்வாமை என்பது மரபணுக்களால் நிர்ணயிக்கப்படும் ஒரு பரம்பரை நோய். ஆகவே, இத்தகைய பெரிய பாதிப்புகள் ஒரு சிலருக்குத்தான் வரும். பசும்பால் குடிக்கும் குழந்தைகள் ஒவ்வாமை நோயால் அவதிப்பட்டால், அடிக்கடி பலவித உடல்நோய்களால் பாதிக்கப்படும். உடல்மெலிந்து, என்ன நோயினால் அவதிப்படுகிறது என்று கண்டுபிடிப்பதே மிகக் கடினமாகும். இதற்கு எதிர்மாறாக பால்புரத ஒவ்வாமை இல்லாத குழந்தைகள் அதிக அளவு பாலை உட்கொண்டு உடல் பருமன் நோய் உண்டாகி, அதனால் இதய நோய், மூட்டுவலி போன்றவற்றால் சிரமப்படுவார்கள். மேலும் பசும்பால் குடிக்கும் அனைவருக்கும் சிறுகுடலிலிருந்து தினந்தோறும் சிறிதளவு இரத்தக் கசிவு ஏற்படுவது நிரூபிக்கப்பட்டுள்ளது. இரவில் குழந்தைகள் பசும்பால் குடிப்பதால் படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பழக்கமும் அதிகமாகிறது.

பாலில் கால்சியம் அதிகம் இருப்பதாகவும், ஆகவே எலும்பு வளர்ச்சிக்குப் பால் மிகவும் தேவை என்பதும் ஓர் அப்பட்டமான மூட நம்பிக்கையாகும். பாலில் இருந்து கிடைக்கும் கால்சியம் உடலுக்குச் சரியாகப் பயன்படாத மட்டரகக் கால்சியம் என்பதே உண்மை. பாலில் உள்ள புரதச்சத்தில் மெதியோனின் என்ற அமினோ அமிலம் அதிகமாக உள்ளது. இந்த மெதியோனின், எலும்புகளில் கால்சியம் சென்று படிவதைத் தடுக்கிறது.

ஆகவே, பால் குடிப்பதால் எலும்புகளில் கால்சியச்சத்து அதிகமாகிறது என்று எண்ணுவது தவறு. பால் அதிகமாகப் பயன்படுத்தப்படும் டென்மார்க், பின்லாந்து ஆகிய நாடுகளில்தான் கால்சியம் குறைவினால் ஏற்படும் எலும்புத் தேய்வு நோய் உலகிலேயே மிக அதிகமாகக் காணப்படுகிறது.

பாலில் இருந்து மட்டுமே கால்சியம் மனிதர்களுக்குக் கிடைப்பது உண்மை என்றால், பசுவுக்குக் கால்சியம் எங்கிருந்து கிடைக்கிறது என்பதையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். நம்மைவிட பலமடங்கு பெரிய யானையின் எலும்புகளுக்குக் கால்சியம் எப்படிக் கிடைக்கிறது. இயற்கையின் படைப்பில் எல்லா தாவரங்களிலும் முதல் தரமான கால்சியம் இருக்கிறது என்றும், அதனால் கீரை வகைகளை உண்போருக்குக் கால்சியப் பற்றாக்குறை ஏற்படுவதே இல்லை என்றும் மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
விலங்குகளின் பாலில் இருந்து பலவகையான தொற்றுநோய்களும் பரவ வாய்ப்புள்ளது. மேலும் செயற்கையான தீவனங்களைக் கொடுத்து வளர்க்கப்படும் பசும்பாலில் இருக்கும் பூச்சிக்கொல்லி மருந்துகளின் அளவு மிக அதிகமாக இருப்பதும் அதிர்ச்சிகரமான உண்மை. இந்தப் பூச்சிக்கொல்லி மருந்துகளால் இரத்தசோகை நோய், பலவகையான புற்றுநோய்கள் ஏற்பட வாய்ப்பு அதிகமாகிறது.

ஆகவே, குழந்தைகளுக்குக் குறைந்தது இரண்டு அல்லது மூன்று வயது வரை தாய்ப்பால் கொடுக்கவேண்டும். அதன் பின் எந்த விலங்கின் பாலையும், பால் பொருட்களையும் உணவில் சேர்த்துக் கொள்ளாவிடில் பல வகையான நோய்கள் வராமல் தடுக்க முடியும். இயற்கையின் படைப்பில் மனிதனும் ஒரு விலங்கு என்பதையும் மனிதனைத் தவிர வேறு எந்த விலங்கும் பிற விலங்கின் பாலை உண்பதில்லை என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
சுமார் மூன்று லட்சம் ஆண்டுகளாக பூமியில் வாழும் மனித இனம் சென்ற பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்துதான் விலங்குகளின் பாலைக் குடிக்கும் தவறான உணவுப் பழக்கத்துக்குச் சென்று விட்டது. மிகச் சமீபகாலத்தில் ஏற்பட்டுள்ள வெண்மைப் புரட்சிக்குப் பின், மக்களிடம் இதயநோய்களும், புற்று நோய்களும் கண்புரை நோயும் பன்மடங்கு அதிகரித்திருப்பதே பால்குடிக்கும் பழக்கத்தின் கெடுதலுக்குத் தகுந்த சான்றாகும்.

பாலுக்குப் பதில் குழந்தைகளுக்குப் பழச்சாறுகளும், சுத்தமான குடிநீரும் கொடுப்பதே நல்லது. ஆரோக்கிய பானங்கள் என்று சந்தையில் விளம்பரப்படுத்தப்படும் பால் சார்ந்த பானங்கள் அனைத்தும், உண்மையில் ஆரோக்கியத்தின் எதிரிகளே. இனிமேல் கன்றுக்குட்டிகள் பசும்பால் குடிக்கட்டும். குழந்தைகள் தாய்ப்பால் குடித்து நோயற்ற மனிதர்களாக வளரட்டும்.

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home