Wednesday, 17 April 2013

இந்தக் கனவுகளிடம்

எதைக் தரக்கூடும்
என் கனவுகள்?
காலாண்டரில் கிழிபட்ட காலத்தை
தன்னிடம் அறியாது அலைக்கழியும்
ஆன்மாவிற்கு ஓரிடத்தை
அச்சுறுத்தும் வேதனைகளில் இருண்ட
எனது முகத்திற்குச் சிறிது ஒளியை
தேர்வுகளை நிகழ்த்துவதற்குரிய
மன பலத்தை

முந்திய காலத்தின் கனவுகளையேனும்
அப்படியே திருப்பித்தர முடியுமென்கிற
உத்தரவாதத்தை
பயனற்ற வாழ்விற்கு ஒரு முடிவை
அல்லது இந்த வாழ்வின் பேரிலொரு
அனுதாபத்தை

மிச்சமிருக்கும் நாட்களைப்
பற்றிக்கொள்ள ஒரு சந்தர்ப்பத்தை
கொஞ்சம் அதிர்ஷ்டத்தை
இன்னும்கூட எழுதிமுடிக்கப்படாத
சித்திரத்திற்கு வேண்டிய
வண்ணங்களை

இல்லை இந்த வாழ்வோடு
இணங்கிப் போய்விடக்
கொஞ்சம் நம்பிக்கையை
அவகாசத்தை
இதில்
எதைத் தரக்கூடும்
என் கனவுகள்?

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home