அவன்

தொடர்ந்து கற்பனை உலகத்திலேயே
வாழ்ந்துக் கொண்டிருக்கிறான் அவன்
தன்னுடைய அதிநவீன பொய்களால்
சாதுர்யமாய் என்னையும் அந்த கற்பனை உலகத்துக்கே
இட்டுச் சென்று
அதனை உண்மை என்று நம்பவைத்துவிடுகிறான்
பிறகொரு தருணத்தில்
மற்ற சிலரிடம்
புதிதாய் மெருகேற்றிய சாகசக் கதைகளை
அவன் கூறி கொண்டிருக்கும் போது
யாரும் அதை புளுகல் என்று சொல்லிவிட்டால்
அது உண்மையே என நிரூப்பிக்க
என்னை சாட்சிக்கு அழைக்கிறான்
அவனின் பொய்களை விடவும்
அவன் கற்பனையுலக வாழ்க்கை குறித்த விடயங்களே
எனக்கு கவலை கூட்டுவதாகவும்
அவன் மீது பரிதாபம் கொள்ள செய்வதாகவும் இருக்கிறது
அவன் கற்பனை உலகத்தில் கூட
யாரையும்
சந்தேகத்தோடும்
அவநம்பிக்கையோடும்
குழப்பத்தோடும்
பயத்தோடும்
பொய்களோடுமே அணுகுகிறான்
அவன் தன் ஒவ்வொரு மாந்தரையும்
அதி தீவிர கண்காணிபபுக் குட்படுத்தி வைத்திருக்கிறான்
சொத்துக்காக கொலை செய்யப்பட்ட
அப்பாவின் ஆபத்தான உறவினர்களிடம் இருந்து தப்பி
தன்னையும் தன்சொத்தையும் பாதுகாத்து கொள்ள வேண்டிய சூழலின்
மிக அதிகப்படியான பயத்தாலும்
யாராலும் ஏமாற்றப்பட்டுவிடக் கூடாது எனும்
அதீத கவனத்தாலுமே
அவன் யாரையும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறான்
என எனக்கு தெரியும்
ஆதலாலே
தான் பொய்களிலேயே பாதுகாப்பாய் இருக்கிறோம் எனும்
அவனின் ஸ்திரமான நம்பிக்கையை
நானும் திடப்படுத்திக் கொண்டே இருக்கிறேன்
நாளை அவன் உங்களிடம்
தன் ஜிகினா கதைகளை சொல்லலாம்
நீங்களும் நம்புவதை போலவே பாவனைத்து
அவன் பாதுகாப்பாய் உள்ளதை உறுதி செய்யுங்கள்
Labels: ஆதி

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home