உன் நினைவெனும் புதை குழி
என் தனிமையின் சுமைகூடித்
தொலைபேசியில் கசியும்
உன் பிரியங்கள்
என் உயிர் பிளந்து
இரட்சிக்கும்
சிலந்தியின் கால்களில்
துவளும் எனதிருப்பை
உன் நினைவுகள்
கடும் பனியின் நிசப்தமாய்
என்னோடிருக்க
இன்று உன் இன்மையை உணர்த்த
ஏதொன்றும் நிகழவில்லையென்றாலும்
ஏதோ ஒன்று நிகழ்ந்துவிட்டிருக்கிறது
உன்னை வேண்டும்
ஆன்மாவிற்கு உயிரூட்ட
ஒலிக்கும் உன் குரல்
எப்போதோ தாழிடப்பட்டுவிட்ட
அதிர்ஷ்டத்தின் கதவுகளைத்
தட்டிவிட்டுப் போகும்
மெழுகின் ஒளியில்
சுவரில் வளர்ந்து ததும்பும்
நிழல்கள் போல
இந்த நிலவொளி
என் இதயத்தில் வளர்த்தெடுக்கும்
உன் பிம்பத்தை
சுடரும் நெருப்பாய் வெடித்துச் சிதறும்
மூச்சுக் காற்றில் கருகும்
இந்த அறையும்
எனது உடலும்
இந்தத் தவிப்புகளையெல்லாம்
நள்ளிரவில் இல்லாத எதிரியைத் துரத்தும்
நாயின் ஆவேசமெனவோ
அடர்ந்தேயிருக்கும் இருளை
துளையிட்டுச் செல்லும்
மின்மினிப் பூச்சியெனவோ
அர்த்தம் கொள்கிறேன்
இந்த இரவை விடாப்பிடியாகப்
பற்றியிருக்கும் மழையைப் போல
எனைப் பற்றியிருக்கும்
உன் நினைவுகள் அழிக்கும்
எனது முந்தைய சுவடுகளை
எப்போது வீழ்ந்தாலும்
எப்படி வீழ்ந்தாலும்
பற்றியெழுவதென்னவோ
உன் நினைவுகளில் மட்டும்தான்
பாதைகளற்ற வனமொன்றிற்கு
நீ வந்து சேரவும்
இருக்கத்தான் செய்தது
ஒரு ஒற்றையடிப் பாதை
சருகென உலர்ந்த உடலில்
சிறு தளிர்கள் முளைவிட
இந்நினைவுகளின்
புதைகுழிக்குள்
மூழ்கிவிடும் அபாயத்துடன்
மறுபடியும்
அந்நினைவுகளுக்குள்ளேயே
தடுமாறி நுழைகிறேன்
Labels: சல்மா

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home