Sunday, 9 November 2014

பன்னீர் பிரட் பால்ஸ்

மாலையில் பள்ளி முடிந்து வீட்டிற்கு பசியோடு வரும் குழந்தைகளின் பசியைப் போக்குமாறு ஏதேனும் ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க நினைத்தால், பன்னீர் பிரட் பால்ஸ் செய்து கொடுங்கள். இதனால் குழந்தைகளுக்கு வேண்டிய கால்சியம் சத்து அதிகம் கிடைப்பதுடன், அவர்கள் வளர்ச்சிக்கு வேண்டிய சத்துக்களும் கிடைக்கும். 

இங்கு அந்த பன்னீர் பிரட் பால்ஸ் ரெசிபியை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து அதை செய்து கொடுங்கள்.

பன்னீர் பிரட் பால்ஸ்

தேவையான பொருட்கள்: 

பன்னீர் - 1 கப் 
பிரட் - 3 துண்டுகள் 
வேக வைத்த உருளைக்கிழங்கு - 1/2 
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது) 
கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன் 
தக்காளி சாஸ் - 1 டேபிள் ஸ்பூன் 
ரவை - 1/2 டேபிள் ஸ்பூன் 
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு 
எண்ணெய் - தேவையான அளவு 

செய்முறை: 
முதலில் பன்னீரை துருவிக் கொள்ள வேண்டும். பின்னர் அதனை 5 நிமிடம் நன்கு பிசைய வேண்டும்.

 பின்பு ஒரு பாத்திரத்தில் பன்னீரை சேர்த்து, அதில் உருளைக்கிழங்கு மற்றும் உப்பு சேர்த்து நன்கு பிசைந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். 

பிறகு பிரட் துண்டுகளைச் சுற்றியுள்ளதை நீக்கிவிட்டு, தண்ணீரில் நனைத்து பிழிந்து பன்னீருடன் சேர்த்து, அத்துடன் மீதமுள்ள பொருட்களையும் சேர்த்து நன்கு மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும். 

அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிசைந்து வைத்துள்ள சிறு உருண்டைகளாக பிடித்து எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், பன்னீர் பிரட் பால்ஸ் ரெடி!!!

Labels:

Monday, 17 June 2013

பன்னீர் கட்லெட்

அனைவருக்குமே கட்லெட் என்றால் மிகவும் பிடிக்கும். அதிலும் மாலை வேளையில், பருவமழையின் போது டீ, காபி குடிக்கும் போது சாப்பிடுவது என்றால் சூப்பராக உடலுக்கு இதமாக இருக்கும். மேலும் கட்லெட்டில் பல வகைகள் உள்ளன. அதில் பன்னீரானது சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்குமே பிடித்த ஒரு உணவுப் பொருளாகும். 
 
 அத்தகைய பன்னீரைக் கொண்டும் கட்லெட் செய்யலாம். அந்த பன்னீர் கட்லெட் செய்வது என்பது எளிமையான ஒன்று. அதன் செய்முறையைக் கொடுத்துள்ளோம். அதைப் படித்து பார்த்து செய்து மகிழுங்கள்.
paneer cutlet monsoon special recipe  

தேவையான பொருட்கள்: 
 
பன்னீர் - 250 கிராம் (துருவியது) 
பிரட் துண்டுகள் - 2 இஞ்சி பூண்டு 
பேஸ்ட் - 1 டீஸ்பூன் 
வெங்காயம் - 1 (நறுக்கியது) 
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது) 
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் 
சாட் மசாலா - 1 டீஸ்பூன் 
மிளகு தூள் - 1/2 டீஸ்பூன் 
புதினா - 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது) 
பிரட் தூள் - 1 கப் 
மைதா - 2 டேபிள் ஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு 
எண்ணெய் - தேவையான அளவு (பொரிப்பதற்கு) 
 
செய்முறை:  
 
முதலில் பிரட் துண்டுகளை 1 நிமிடம் தண்ணீரில் ஊற வைத்து, பின் அதிலுள்ள அதிகப்படியான நீரை பிழிந்து விட வேண்டும். 
 
 பின்னர் ஒரு பாத்திரத்தில் பன்னீர், பிழிந்து வைத்துள்ள பிரட் துண்டுகள், இஞ்சி பூண்டு பேஸ்ட், வெங்காயம், பச்சை மிளகாய், மஞ்சள் தூள், சாட் மசாலா, மிளகு தூள், உப்பு, புதினா மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பிசைந்து, கட்லெட்டுகளாக தட்டிக் கொள்ள வேண்டும். 
 
பின்பு ஒரு பௌலில் மைதா மாவை சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கரைத்து, அதில் கட்லெட்டுகளை நனைத்து, பிரட் தூளில் பிரட்டிக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கட்லெட்டுகளை சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். 
 
இப்போது சூப்பரான பன்னீர் கட்லெட் ரெடி!!!

Labels:

Thursday, 30 May 2013

முட்டைகோஸ் கட்லெட்

மாலை வேளையில் ஏதேனும் வித்தியாசமான ஸ்நாக்ஸ் ரெசிபியை செய்ய ஆசைப்படுகிறீர்களா? அப்படியெனில் ஒரு சூப்பரான ஸ்நாக்ஸ் ரெசிபி உள்ளது. கட்லெட்டில் நிறைய வகைகள் உள்ளன. ஆனால் முட்டைகோஸ் கட்லெட்டை கேள்விபட்டிருக்கிறீர்களா? இல்லையெனில், அந்த முட்டைகோஸ் கட்லெட்டை ட்ரை செய்து பாருங்கள். உங்களுக்காக, முட்டைகோஸ் கட்லெட்டை எப்படி செய்வதென்று எளிமையான செய்முறை.


cabbage cutlet snacks
தேவையான பொருட்கள்: 
 
முட்டைகோஸ் - 1 கப் (நறுக்கியது) 
உருளைக்கிழங்கு - 2 (வேக வைத்து மசித்தது) 
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது) 
கறிவேப்பிலை - சிறிது (நறுக்கியது) 
கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது) 
சாட் மசாலா - 1 டீஸ்பூன் 
மைதா மாவு - 2 டேபிள் ஸ்பூன் 
பிரட் தூள் - 1/2 கப் 
எண்ணெய் - தேவையான அளவு (பொரிப்பதற்கு) 
உப்பு - தேவையான அளவு 
தண்ணீர் - 1/2 கப் 
 
செய்முறை: 
 
முதலில் ஒரு பௌலில் முட்டைகோஸ், உருளைக்கிழங்கு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு மற்றும் சாட் மசாலா சேர்த்து நன்கு கொள்ள வேண்டும். 
 
பின்பு அதனை சிறு சிறு உருண்டைகளாக்கி, கட்லெட் போன்று தட்டையாக தட்டிக் கொள்ள வேண்டும். 
 
 பிறகு மற்றொரு பௌலில் மைதாவை போட்டு, 1/2 கப் நீர் ஊற்றி கலந்து கொள்ள வேண்டும். பின் தட்டி வைத்துள்ள கலவையை, மைதா மாவில் நனைத்து, பிரட் தூளில் பிரட்டி, ஒரு தட்டில் வைக்க வேண்டும். 
 
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தீயை குறைவில் வைத்து, அந்த கட்லெட் துண்டுகளை எண்ணெயில் பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். 
 
இதேப் போன்று அனைத்தையும் பொரித்து எடுக்கவும். 
 
இப்போது சுவையான முட்டைகோஸ் கட்லெட் ரெடி!!!

Labels:

பசலைக் கீரை கச்சோரி

கச்சோரியில் பல வகைகள் உள்ளன. அவற்றில் வித்தியாசமான ஒரு கச்சோரி தான் பசலைக் கீரை கச்சோரி. இது மிகவும் ஆரோக்கியமான ஒரு ஸ்நாக்ஸ் என்று சொல்லலாம். அதிலும் இது வட இந்தியாவில் மிகவும் பிரபலமானது. குறிப்பாக இந்த ஸ்நாக்ஸை கீரை சாப்பிட விரும்பாத குழந்தைகளுக்கு செய்து கொடுத்தால், அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். மேலும் இந்த பசலைக் கீரையில் இரும்புச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. 
 
எனவே இதனை மாலை வேளையில் குழந்தைகளுக்கு செய்து கொடுங்கள். இப்போது அந்த பசலைக் கீரை கச்சோரியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

crispy spinach kachori
தேவையான பொருட்கள்:  
 
பசலைக் கீரை - 1 கட்டு 
கோதுமை மாவு - 2 கப் 
இஞ்சி - 1 டீஸ்பூன் (துருவியது) 
ஓமம் - 1 டீஸ்பூன் 
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு 
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை: 
 
 
முதலில் பசலைக் கீரையை சுத்தம் செய்து, அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து, தீயை குறைவில் வைத்து 5 நிமிடம் அடுப்பில் வைக்க வேண்டும்.
 
 பின்னர் அதனை எடுத்து, ஒரு தட்டில் வைத்து, தண்ணீர் முற்றிலும் வடியும் வரை வைக்க வேண்டும். 
 
பிறகு பசலைக் கீரையை மிக்ஸியில் போட்டு நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு பௌலில் கோதுமை மாவு, இஞ்சி, ஓமம், உப்பு, மிளகாய் தூள் மற்றும் அரைத்த பசலைக் கீரையை ஊற்றி, வேண்டுமெனில் தண்ணீர் சேர்த்து, போண்டா பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும். 
 
பின்பு அதனை சிறு உருண்டைகளாக உருட்டி தட்டில் 5 நிமிடம் தனியாக வைக்க வேண்டும். அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உருட்டி வைத்துள்ள உருண்டையை எண்ணெயில் பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். 
 
இதேப் போல் அனைத்து உருண்டைகளையும் பொரித்து எடுத்தால், சுவையான பசலைக் கீரை கச்சோரி ரெடி!!!

Labels:

சூரை மீன் கட்லெட்

அனைவருக்குமே கட்லெட் என்றால் மிகவும் பிடிக்கும். அதிலும் உருளைக்கிழங்கு கட்லெட் தான் அனைவரது மத்தியிலும் மிகவும் பிரபலமானது. ஆனால் மீனை வைத்து கட்லெட் செய்வது மிகவும் அரிதானது. ஏனெனில் அதில் முள் இருப்பதால், பெரும்பாலானோர் மீன் கொண்டு கட்லெட் செய்யமாட்டார்கள். 
 
இப்போது மீன்களில் ஒன்றான டூனா எனப்படும் சூரை மீனைக் கொண்டு, எளிதான முறையில் எப்படி கட்லெட் செய்வதென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, வீட்டில் செய்து மகிழுங்கள். 
canned tuna fish cutlets
தேவையான பொருட்கள்: 
 
சூரை மீன் - 2 சிறிய டின் 
வெங்காயம் - 2 (பெரியது மற்றும் பொடியாக நறுக்கியது) 
பச்சை மிளகாய் - 5 (பொடியாக நறுக்கியது) 
கறிவேப்பிலை - சிறிது (பொடியாக நறுக்கியது 
இஞ்சி - 2 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது) 
பூண்டு - 1 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது) 
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன் 
மிளகு தூள் - 1/2 டீஸ்பூன் 
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன் 
முட்டை - 1-2 (நன்கு அடித்தது) 
உருளைக்கிழங்கு - 1 (வேக வைத்து, மசித்தது) 
பிரட் தூள் - சிறிது 
எண்ணெய் - தேவையான அளவு 
உப்பு - தேவையான அளவு

கரம் மசாலாவிற்கு... 
 
கிராம்பு - 2 டேபிள் ஸ்பூன் 
ஏலக்காய் - 2 டேபிள் ஸ்பூன் 
சோம்பு - 2 டேபிள் ஸ்பூன் 
பட்டை - 3 சிறிய துண்டுகள் 
 
செய்முறை: 
 
முதலில் கரம் மசாலாவிற்கு கொடுத்த பொருட்களை லேசாக 2 நிமிடம் வறுத்து, குளிர வைத்த, பின் பொடியாக அரைத்துக் கொள்ள வேண்டும். 
 
பின்னர் சூரை மீனை நன்கு சுத்தமாக கழுவி, துண்டாக வெட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். 
 
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை போட்டு 1 நிமிடம் வதக்க வேண்டும். பின் நறுக்கிய வெங்காயத்தை போட்டு, பொன்னிறமாக வதக்கி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மிளகு தூள், கரம் மசாலா மற்றும் உப்பு சேர்த்து, 3 நிமிடம் வதக்கி விட வேண்டும். 
 
பின்பு துண்டுகளாக்கப்பட்ட மீனை சேர்த்து, மீன் வேகும் வரை அடுப்பில் வைத்து கிளறி இறக்க வேண்டும். (குறிப்பாக தண்ணீர் சேர்க்கக்கூடாது.) 
 
 பின்னர் அந்த மீன் கலவையை குளிர வைத்து, மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கை அத்துடன் சேர்த்து, கையால் நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் அதனை கட்லெட் போன்று தட்டையாகவோ அல்லது வட்டமாகவோ தட்டி, அதனை அடித்து வைத்துள்ள முட்டையில் நனைத்து, பிரட் தூளில் பிரட்டிக் கொள்ள வேண்டும். 
 
இறுதியில் ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, தட்டி வைத்துள்ள மீன் கலவையை எண்ணெயில் பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். இப்போது சுவையான சூரை மீன் கட்லெட் ரெடி!!! இதனை தக்காளி/புதினா சட்னியுடன் சாப்பிட்டால், நன்றாக இருக்கும்.

Labels:

Tuesday, 16 April 2013

உப்பு சீடை

Salt Uppu Seedai Recipe Aid0174குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் திண்பண்டம் தர வேண்டும் என்பதில் பெற்றோர்கள் அதிக மெனக்கெடுவர். தினசரி புதிது புதிதாக எதையாவது கேட்டுக்கொண்டே இருப்பர் குழந்தைகள். அவர்களுக்கு பிடித்தமான நொறுவைகளை கொடுத்தால் நொடியில் காலி செய்துவிடுவர் குழந்தைகள். வீட்டிலேயே தயார் செய்யக்கூடிய சத்தான சிநாக்ஸ் உப்பு சீடை குழந்தைகள் மட்டுமல்லாது பெரியவர்களுக்கும் ஏற்றது. இது கிருஷ்ண ஜெயந்தி தினந்தன்று அநேக வீடுகளில் செய்யப்படும் பலகாரமாகும்.
 
தேவையான பொருட்கள்:  
 
பச்சரிசி 2 கப் 
ஒரு பிடி உளுத்த மாவு 
தேங்காய் துருவல் 2 டேபிள் ஸ்பூன் 
எள் – 2 டீ ஸ்பூன் 
பெருங்காயப்பொடி 1/4 டீ ஸ்பூன் 
வெண்ணை 1 டேபிள் ஸ்பூன் 
உப்பு தேவையான அளவு 
எண்ணெய் பொரிக்க தேவையான அளவு 
 
செய்முறை:  
 
முதலில் அரிசியை களைந்து உலர்த்தவேண்டும். நன்றாக காய்ந்ததும், மாவாக அரைத்து , சலித்து வைக்கவும். எள்ளை சுத்தமாக எடுத்து வைக்கவும். தேங்காய்யை துருவி அளந்து எடுத்துக்கொள்ளவும். 
 
அகலமான ஒரு பேசினில் அரிசிமாவு, வறுத்து அரைத்த உளுத்தம் மாவு, எள், தேங்காய் துருவல், பெருங்காயப்பொடி, உப்பு , வெண்ணை எல்லாம் போட்டு தண்ணீர் விடாமல் நன்கு கலக்கவும்.வெண்ணை நன்கு கலந்ததும், லேசாக தண்ணீர் விட்டு பிசையவும் . 
 
 மாவு நல்ல கெட்டி பதமாக இருக்கவேண்டும். பின்னர் அந்த மாவினை லேசாக எண்ணை தடவிய தாம்பாளத்தில் சின்ன சின்னதாக 'சீடை" யாக உருட்டிவைக்கவும். அடுப்பில் அடிகனமான வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கொஞ்சம் கொஞ்சமாக சீடைகளை அதில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். 
 
சுவையான சத்தான 'உப்பு சீடை ' ரெடி . எளிதில் தயாரிக்கலாம். சீடை தயாரிப்பதில் முக்கியமாக மாவு சுத்தமாக இருக்கவேண்டும். 
 
அதில் கல், மண் எதுவும் இல்லாமல் சுத்தமாக அரைத்த மாவினை பயன்படுத்தவேண்டும். எள் போடும் போதும் சுத்தமானதாக பயன்படுத்த வேண்டும். இல்லையெனில் சீடை வெடிக்கும் ஆபத்து உள்ளது.

Labels:

மனகோலம்

Chettinadu Sweet Manakolam Aid0174மனகோலம் நினைத்தாலே எச்சில் ஊறவைக்கும் மிகவும் ருசியான இனிப்பு சிற்றுண்டியாகும். இது சத்தானது. பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு, உளுந்தப்பருப்பு ஆகியவையோடு வெல்லம், பொட்டுக்கடலை நாட்டுச் சர்க்கரை சேர்ப்பதால் இது குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மிக்க இனிப்பாகும். இது செட்டிநாடு பகுதியில் பிரசித்தி பெற்றது.
 
தேவையான பொருட்கள் 
 
 பச்சரிசி – 100 கிராம் 
பாசிப் பருப்பு – 1/2 கிலோ 
கடலைப் பருப்பு – 1/4 கிலோ 
உளுந்தம் பருப்பு – 1/4 கிலோ 
பொட்டுக் கடலை – 1/4 கிலோ 
தேங்காய் – 1 
வெல்லம் – 3/4 கிலோ 
சர்க்கரை – 1/4 கிலோ 
எண்ணெய் – 1/2 கிலோ ( பொரிக்க ) 
நெய் – 3 டீ ஸ்பூன் 
 
மனகோலம் செய்முறை 
 
 பச்சரிசி, பாசிப் பருப்பு, கடலைப் பருப்பு , உளுந்தம் பருப்பு ஆகியவற்றைத் தனித்தனியே வறுத்து, அரைத்து, சலித்துக் கொள்ளவும். 
 
மாவு அனைத்தையும் அகலமான பாத்திரத்தில் ஒன்றாக கொட்டி சிறிதளவு உப்புப் போட்டு, தண்ணீர் ஊற்றிக் கெட்டியாகப் பிசைந்து கொள்ளுங்கள். 
 
வாணலியில் எண்ணெய் ஊற்றி, அடுப்பில் வைத்துக் காய வைக்கவும். முறுக்கு பிழியும் அச்சில் மாவை வைத்து, காய்ந்து கொண்டிருக்கும் எண்ணெயில் பிழிய வேண்டும். 
 
வெந்த உடன் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும் அகலமான பாத்திரத்தில் மனகோலத்தை உதிர்த்து விட்டு தேங்காயை நறுக்கி, நெய் விட்டு வதக்கி போடவும். 
 
அதன் மீது பொட்டுக் கடலையையும் இளஞ் சூடாக வறுத்து போடவும். பின்னர் ஏலக்காய் – சர்க்கரை ஆகியவற்றைத் தூளாக்கிக் மனகோலத்தின் மீது தூவி விடவும். வெல்லத்தில் கொஞ்சம் தண்ணீரை தெளித்துக் கொதிக்க வைத்துக் கம்பிப் பாகு போல காய்ச்ச வேண்டும். 
 
பாகு சூடாக இருக்கும் போதே மனகோலத்தின் மீது ஊற்றிக் கொண்டே, கரண்டியினால் கிளற வேண்டும். பாகை ஊற்றுவதும், கரண்டியினால் கிளறுவதுமாக இருங்கள். 
 
அப்போதுதான் கெட்டியாகாது. இந்த கலவை நன்றாக ஆறிய பின்னர் காற்றுப் புகாத பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். சுவையான, சத்தான மனகோலம் தயார். ஒருமாதம் வரை கெட்டுப்போகாது.

Labels:

Sunday, 7 April 2013

மொறு மொறு செட்டிநாடு கை முறுக்கு

Chettinadu Kai Murukku Recipe Aid0174முறுக்கு வகைகளில், கைகளால் சுற்றி செய்யப்படும் கை முறுக்கின் சுவை அலாதியானது. மாலை நேரங்களில் குழந்தைகளுக்கு ஏற்ற சுவையான சிற்றுண்டி. 
 
 தேவையான பொருட்கள் 
 
அரிசி மாவு - 3 கப் 
உளுத்தம் மாவு - கால் கப் 
டால்டா - ஒன்றரை டேபிள் ஸ்பூன் 
உப்பு – தேவையான அளவு 
சீரகம் – 100 கிராம் 
வெண்ணெய் - அரை கப் 
எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு

முறுக்கு செய்முறை 
 
அகலமான பாத்திரத்தில் அரிசி மாவுடன் உளுத்தம் மாவு, உப்பு, போட்டு டால்டா, வெண்ணைய்யை லேசான சூட்டில் சற்று உருக்கி எடுத்து ஊற்றவும். 
 
இதோடு சீரகம் சேர்த்து போட்டு நன்றாக பிசையவும்.
 
 பின்னர் மாவின் மேல் 2 கப் தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி பிசைந்துக் கொள்ளவும். 
 
 மிகவும் தோய்வாக இல்லாமல் பிசையவும். ஒரு உருண்டை மாவை எடுத்துக் கொண்டு, கட்டை விரல், ஆள்காட்டி விரல் மற்றும் நடுவிரல் ஆகிய மூன்று விரல்களைக் கொண்டு முறுக்கினை சுற்றவும். 
 
கட்டை விரலாலும், ஆட்காட்டி விரலாலும் மாவினை சிறிது அழுத்திவிட்டு, பிறகு அதனைத் திருகி திருகி, வட்ட வடிவில் சுற்றவும். முதலில் ஒரு பேப்பரில் சுற்றிக் கொள்ளவும். 
 
முறுக்கு பெரிதாக இருந்தால், பேப்பரை அப்படியே ஒரு தட்டில் கவிழ்த்து, தட்டில் முறுக்கை மட்டும் எடுத்துக் கொள்ளவும். இந்த வகை முறுக்கினை மிகவும் மெல்லியதாக சுற்றக்கூடாது. முறுக்கு சுற்றின பிறகு சிறிது நேரம் உலர வைக்கவும். 
 
 வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் முறுக்கு வைத்துள்ள தட்டை எண்ணெய்க்கு அருகில் கொண்டு சென்று, சற்று கவனமுடன் எண்ணெய்யில் போடவும்.
 
 எண்ணெய் நுரைத்து வருவது குறைந்தவுடன், இரண்டு புறமும் பொன்னிறமாக வெந்ததும், ஒரு கம்பி கொண்டு முறுக்கினை எடுத்து எண்ணெய் வடியவிடவும். சுவையான கை முறுக்கு ரெடி. குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான சிற்றுண்டி இது.

Labels:

சுவையான ஓமப்பொடி ரெஸிபி

How Make Omapodi Aid0174மாலை நேரத்தில் குழந்தைகளுக்கு தேவையான சிற்றுண்டிகளை செய்து தருவது என்பது சற்று சிரமமான செயல்தான். சத்தான அதே சமயத்தில் எளிதான சிற்றுண்டி செய்து தருவதற்கு ஏற்றது ஓமப்பொடி. அரைமணி நேரத்திற்குள் செய்து விடலாம். நீங்களும் செய்து பாருங்களேன். 
 
தேவையான பொருட்கள்
 
ஓமம் – 50 கிராம் 
கடலை மாவு – 4 கப் 
பச்சரிசி மாவு – 2 கப் 
காரப்பொடி – 2 டீஸ்பூன் 
உப்பு – தேவையான அளவு 
நெய் – சிறிதளவு 
எண்ணெய் பொரிக்கத் தேவையான அளவு 
கறிவேப்பிலை – 2 கப் 
 
ஓமப்பொடி செய்முறை 
 
ஓமத்தை நன்கு அரைத்துக் கொண்டு, சாறு பிழிந்து, வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும். 
 
அகலமான பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, காரப்பொடி, உப்பு ஆகியவற்றுடன் ஓமம் சாறையும் சேர்த்து, சூடான எண்ணெய், நெய் விட்டு பிசைந்து கொள்ள வேண்டும். 
 
 வாணலியில் எண்ணெய் விட்டு காயவிடவும். எண்ணெய் காய்ந்த உடன் ஒமப்பொடி அச்சில் இந்த மாவுக் கலவையைப் போட்டு, எண்ணெயில் பிழிய வேண்டும். 
 
வெந்தவுடன் எண்ணெயை வடித்து எடுக்க கரகரப்பான சுவையான ஒமப்பொடி தயார். கறிவேப்பிலையை எண்ணெயில் பொரித்து எடுத்து மேலே தூவி பரிமாறலாம்.

Labels:

மாம்பழ ஜூஸ்

கோடைகாலத்தில் மாம்பழம் அதிக அளவில் கிடைக்கும். எனவே அத்தகைய மாம்பழத்தை முடிந்த அளவில் கோடைகாலத்தில் வாங்கி சாப்பிட்டு மகிழுங்கள். அதிலும் அதனை வெயிலில் சென்று, வீட்டிற்கு வந்ததும் ஜூஸ் போட்டு குடித்தால், வெப்பத்திற்கு நன்கு இதமாகவும், உடலுக்கு ஆரோக்கியமாகவும் இருக்கும். 
 
சரி, இப்போது மாம்பழத்தை வைத்து எப்படி எளிதான முறையில் ஜூஸ் செய்வதென்று பார்ப்போமா!!!

fresh mango juice recipe
தேவையான பொருட்கள்: 
 
மாம்பழம் - 1 
பால் - 1 கப் 
சர்க்கரை - 3-4 டேபிள் ஸ்பூன் 
 
 செய்முறை: 
 
முதலில் மாம்பழத்தின் தோலை சீவி, சிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் போட வேண்டும். 
 
 பின்னர் அதில் பால் மற்றும் சர்க்கரை சேர்த்து, நன்கு நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும். அடுத்து அதனை டம்ளரில் ஊற்றி ஐஸ் கட்டியை போட்டு பரிமாற வேண்டும். 
 
 இப்போது சுவையான மாம்பழ ஜுஸ் ரெடி!!!

Labels: ,

Friday, 8 March 2013

பொட்டுக்கடலை வடை

தென்னிந்தியாவில் வடை மிகவும் பிரபலமானது. அதிலும் கிராம பகுதிகளில் சென்றால், காலை மற்றும் மாலை வேளைகளில் வடை, பஜ்ஜி போன்றவற்றை வீட்டில் செய்தோ அல்லது கடைகளில் வாங்கியோ சாப்பிடுவார்கள். 
 
அத்தகைய வடையில் நிறைய வெரைட்டிகள் உள்ளன. இப்போது அவற்றில் ஒன்றான சட்னி செய்வதற்கு பயன்படுத்தும் பொட்டுக்கடலையை வைத்து, வித்தியாசமான சுவையில் ஒரு வடை செய்து சாப்பிடுவோமா!!!
pottukadalai vadai
தேவையான பொருட்கள்: 
 
பொட்டுக்கடலை - 1/2 கப் 
கடலை மாவு - 2 டேபிள் ஸ்பூன் 
கசகசா - 1 டீஸ்பூன் 
சோம்பு - 1 டீஸ்பூன் 
முந்திரி - சிறிது 
வெங்காயம் - 1 (நறுக்கியது) 
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது) 
கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது) 
தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன் (துருவியது) 
உப்பு - தேவையான அளவு 
எண்ணெய் - தேவையான அளவு 
 
செய்முறை: 
 
முதலில் மிக்ஸியில் பொட்டுக்கடலை, முந்திரி, கசகசா, சோம்பு போட்டு, நன்கு நைஸாக அரைத்து, பொடி செய்து கொள்ள வேண்டும். 
 
 பின்னர் அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் கடலை மாவு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, துருவிய தேங்காய் மற்றும் உப்பு சேர்த்து, தண்ணீர் ஊற்றி ஓரளவு கெட்டியாக பிசைந்துக் கொள்ள வேண்டும். 
 
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் விட்டு, சூடேற்ற வேண்டும். 
 
எண்ணெய் சூடேறியதும், அதில் பிசைந்து வைத்துள்ள மாவுக் கலவையை எலுமிச்சை பழ அளவில் எடுத்து, லேசாக தட்டி, எண்ணெயில் போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். 
 
இதேப் போல் அனைத்து மாவையும் பொரித்து எடுக்க வேண்டும். இப்போது சுவையான பொட்டுக்கடலை வடை ரெடி!!! இதனை தக்காளி சாஸ் உடன் சாப்பிட்டால், அருமையாக இருக்கும்


Labels:

மைசூர் போண்டா

போண்டாவில் நிறைய உள்ளன. இவை அனைத்தும் விருப்பத்தை பொறுத்ததே ஆகும். மேலும் போண்டாவில் மிகவும் பிரபலமானது மைசூர் போண்டா. இத்தகைய போண்டா செய்வது மிகவும் எளிது. அதிலும் இதனை வீட்டிலேயே மாலை வேளையில் செய்து சாப்பிடலாம்.
இப்போது அந்த மைசூர் போண்டாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

mysore bonda
தேவையான பொருட்கள்: 
உளுத்தம் பருப்பு - 1 கப் 
பச்சை மிளகாய் - 2 
இஞ்சி - 1/2 இன்ச் 
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது) 
கறிவேப்பிலை - சிறிது 
தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன் (துருவியது) 
மிளகு - 1 டீஸ்பூன் 
சீரகம் - 1/2 டீஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு 
எண்ணெய் - தேவையான அளவு 
செய்முறை: 
முதலில் உளுத்தம் பருப்பை நீரில் 2-3 மணிநேரம் ஊற வைத்து, பின் கிரைண்டரில் போட்டு, லேசாக தண்ணீர் ஊற்றி, நைஸாக சற்று கெட்டியாக அரைத்துக் கொள்ள வேண்டும். 
பின்னர் அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி மற்றும் கறிவேப்பிலை போட்டு கலந்து கொள்ளவும். 
அடுத்து அதில் மிளகு, சீரகம், துருவிய தேங்காய் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். 
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கலந்து வைத்துள்ள கலவையை எலுமிச்சை அளவு எடுத்து, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். 
இப்போது சுவையான மைசூர் போண்டா ரெடி!!! இதனை தேங்காய் சட்னியுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.

Labels:

Wednesday, 13 February 2013

பஞ்சாபி கட்லெட் - Punjabi Cutlet


செய்முறை:

1/2 கிலோ உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி, தேவையான உப்புத்தூள் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும். 4 பச்சை மிளகாய்களைச் சிறியதாக நறுக்கிக் கொள்ளவும். 1/2 கப் அளவு கொத்தமல்லி தழையை சிறிதாக நறுக்கிக் கொள்ளவும். ரஸ்க் அல்லது உலர்ந்த ரொட்டியைத் தூள் செய்து 2 கப் சேகரித்துக் கொள்ளவும்.

கட்லெட்டின் உள்ளே வைக்கும் பூரணம் தயாரிக்க, 50 கிராம் முந்திரி பருப்பு, 50 கிராம் வேர்க்கடலை, 50 கிராம் சாரப்பருப்பு (சாரோலி), 50 கிராம் பிஸ்தா பருப்பு, 50 கிராம் திராட்சை ஆகியவற்றை வறுத்துக் கொள்ளவும்.

1/2 கப் தேங்காய் துருவலையும் நன்கு சிவக்க வறுத்துக் கொள்ளவும். வறுத்த பருப்பு வகைகளுடன், தேங்காய் துருவல், தேவையான அளவு உப்புத்தூள், 2 தேக்கரண்டி மிளகாய் தூள், 1/2 தேக்கரண்டி சிரகத்தூள் ஆகியவற்றைக் கலந்து தனியாக வைத்துக் கொள்ளவும்.

பிசைந்து வைத்துள்ள உருளைக்கிழங்கில் நறுக்கியப் பச்சை மிளகாய், மல்லி தழை, 2 தேக்கரண்டி மிளகாய்தூள் இவற்றைக் கலந்து, நன்கு பிசைந்து கொள்ளவும். உருளைக்கிழங்கு கலவையையும், பூரணத்தின் அளவையும் சமமாகப் பிரித்துக் கொள்ளவும், உருளைக்கிழங்கு கலவையைச் சிறிதளவு எடுத்து கிண்ணம் போல செய்து இதனுள் பூரணத்தைச் சிறிதளவு வைத்து ஓரங்களை மூடி ரொட்டித் தூளில் புரட்டி, இதன் நடுவே அக்ரூட் பருப்பு ஒன்றை மெதுவாக அமுக்கி வைத்துக் கொள்ளவும். இது போல் உருளைக்கிழங்கு கலவை முழுவதையும் செய்து வைத்துக் கொள்ளவும்.

வாணலியில் 2 கப் சமையல் எண்ணெய் ஊற்றி, காய வைத்து, செய்து வைத்துள்ள கட்லெட்களை மிதமான தீயில் பொரித்து எடுக்கவும். கட்லெட்டின் நடுவே அக்ரூட் பருப்பு வைப்பதால் எண்ணெய்யில் போடும் போது கவனமாகப் போட்டு பொரிக்க வேண்டும். தக்காளி சாஸீடன் பரிமாறவும்.

Labels:

கோயா கட்லெட் - Kooya Cutlet



 உருளை- 1/2 கிலோ
ரஸ்க் அல்லது உலர்ந்த ரொட்டியைத் தூள் செய்து - 2 கப்
1/2 கப் அளவு மல்லித்தழை,
1/4 கப் அளவு புதினா இலை,
4 பச்சைமிளகாய்,
1 அங்குலம் இஞ்சி
50 கிராம் காரட்,
ஒரு பெரிய வெங்காயம்,
50 கிராம் பீன்ஸ்,
1 டர்னிப் 
 சீரகத்தூள் 2 மேசை கரண்டி
 1கப் பால்
பூரணம் தயாரிக்க,

1l பால்
25 gபாதாம் பருப்பு,
25 gபிஸ்தா பருப்பு,
25 முந்திரிபருப்பு,
25 g திராட்சை


செய்முறை:


1/2 கிலோ உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி தேவையான அளவு உப்புத்தூள் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும்.

ரஸ்க் அல்லது உலர்ந்த ரொட்டியைத் தூள் செய்து 2 கப் சேகரித்துக் கொள்ளவும்.

1/2 கப் அளவு மல்லித்தழை,

1/4 கப் அளவு புதினா இலை,

4 பச்சைமிளகாய், 1 அங்குலம் இஞ்சி - இவற்றை மிகச்சிறியதாக நறுக்கிக் கொள்ளவும்,
50 கிராம் காரட், ஒரு பெரிய வெங்காயம், 50 கிராம் பீன்ஸ், 1 டர்னிப் ஆகியவற்றையும் சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்.

1 மேஜைக்கரண்டி சிரகத்தை வறுத்து தூள் செய்து கொள்ளவும். 3 ரொட்டித் துண்டுகளை ஒரு கப் பாலில் நனைத்து, நன்றாக பிழிந்து வைத்துக் கொள்ளவும்.


கட்லெட்டின் உள்ளே வைக்கும் பூரணம் தயாரிக்க,

 ஒரு லிட்டர் பாலைக் காய்ச்சி 125 கிராம் கோயா செய்து கொள்ளவும்.

 பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு, முந்திரிபருப்பு, திராட்சை ஒவ்வொன்றிலும் 25 கிராம் எடுத்து அரைத்துக் கொள்ளவும்.

நறுக்கியப் பீன்ஸ், காரட், டர்னிப் இவற்றை ஆவியில் வேக வைத்து, அதனுடன் நனைத்த ரொட்டித் துண்டுகளையும் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும்.

 இத்துடன் இஞ்சி, பச்சை மிளகாய், மல்லித்தழை, புதினா இலை, சிரகத்தூள், தேவையான உப்பு ஆகியவற்றை சேர்த்துப் பிசைந்து கொள்ளவும்.

வாணலியை மிதமாக காய வைத்து 2 மேஜைக்கரண்டி நெய் ஊற்றி, கோயாவைப் போட்டு, பொன்னிறமாக வறுத்து இறக்கிக் கொள்ளவும்.

இத்துடன் காய்கறி கலவையையும், அரைத்த பருப்பு கலவையையும், தேவையான உப்பும் சேர்த்து மெதுவாக பிசைந்து கொள்ளவும்.

பிசைந்து வைத்துள்ள உருளைக்கிழங்கைக் கிண்ணங்களாக செய்து, இதனுள் பூரணத்தை வைத்து கட்லெட்களாக செய்து ரொட்டித் தூளில் புரட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும். வாணலியில் 2 கப் சமையல் எண்ணெய் ஊற்றி, காய வைத்து கட்லெட்களைப் பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும். சூடாக பரிமாறவும்

Labels:

காலிஃப்ளவர் பக்கோடா- Cauliflower Pakkoda


கூட்டு பொருட்கள் :

சிறு துண்டுகளாய் வெட்டப்பட்ட காலி ஃபளவர் 1
கடலை பருப்பு 2 கப்
இஞ்சி 1/2 தேகரண்டி
மல்லி 1 தேகரண்டி
உப்பு தேவையான அளவு
நறுக்கப்பட்ட வெங்காயம் 1
துண்டாக்கப்பட்ட பச்சைமிளகாய் 2
மிளகாய் தூள் 1/2 தேகரண்டி
கரம் மசாலா 1/2 தேகரண்டி
சீரகம் 1/2 தேகரண்டி
சிறிதாய் நறுக்கப்பட்ட கொத்தமல்லி
தேவையான எண்ணெய்

செய்முறை:
2 கப் கடலை மாவைச் சுத்தம் செய்து கொள்ளவும். ஒரு அங்குலம் இஞ்சியைச் சிறியதாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு தேக்கரண்டி மாதுளை விதையைத் தூளாக்கிக் கொள்ளவும். 1/2 தேக்கரண்டி கொத்தமல்லி விதையைச் சற்று கரகரப்பாகப் பொடித்துக் கொள்ளவும்.

ஒரு தேக்கரண்டி சிரகத்தை அரைத்துக் கொள்ளவும். கடலை மாவுடன் தேவையான உப்புத்தூள், 2 தேக்கரண்டி மிளகாய்தூள், 1 சிட்டிகை சோடாமாவு, 2 மேஜைக்கரண்டி நெய், அரைத்த சிரகம், மாதுளை விதை தூள், அரைத்த இஞ்சி, கொத்தமல்லித் தழை, புதினா, கொத்தமல்லி விதை ஆகியவற்றைக் கலந்து, சிறிது தண்ணீர் சேர்த்துக் கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும்.

இக்கலவையை அரைமணி நேரம் அப்படியே வைத்திருக்க வேண்டும்.

1/2 கிலோ காலிஃப்ளவரை தண்டு நீக்கி, பூப் பூவாக எடுத்துக் கொள்ளவும். கொதிக்கும் தண்ணீரில் பூக்களைப் போட்டு ஒரு நிமிடத்தில் எடுத்து விடவும்.

இப்பூக்களைக் கடலைமாவுக் கலவையில் முக்கி எடுத்து, வாணலியில் 2 கப் சமையல் எண்ணெய் ஊற்றி, காய வைத்து, அதில் போட்டு நன்கு சிவக்கப் பொரித்து எடுக்கவும்.

Labels:

அச்சு முறுக்கு - Achu Murukku


 

தேவையான பொருள்கள் :

ஐ.ஆர்.20 அரிசி - 1/2 கிலோ
உளுந்தம் பருப்பு - 125 கிராம்
டால்டா - 500 கிராம்
உப்பு - கொஞ்சம்

செய்முறை :

புழுங்கல் அரிசியை ஊற வைத்து கிரைண்டரில் மழுமழுப்பாக ஆட்டிக் கொள்ளவும்.

மாவு தோசை மாவு பதம் இருக்க வேண்டும். உளுந்தம் பருப்பை லேசாக வறுத்து மிக்ஸியில் பவுடராக அரைத்து சல்லடையில் சலித்துக் கொள்ளவும்.

இரண்டு மாவையும் ஒன்றாகக் கலந்து பிசைந்து கொள்ளவும். வாணலியில் டால்டாவை ஊற்றிக் காய வைத்துக் கொள்ளவும்.

முறுக்கு அச்சில் மாவை வைத்து பிழியவும். சிவக்க வெந்ததும் எடுத்துத் தட்டில் போட்டுக் கொள்ளவும்.

Labels:

மட்டன் சமோஸா - Mutton Samosa


தேவையானவை :
 
மைதா - 350 கிராம்
பேக்கிங் பௌடர் - 1/2 தேக்கரண்டி
கொத்துக்கறி - 250 கிராம்
பெரிய வெங்காயம் - 1
மல்லித்தழை - 1/2 கப்
புதினா இலை - 1/4 கப்
இஞ்சி - 1 அங்குலம்
பச்சை மிளகாய் - 4
உப்புத் தூள் - தேவையான அளவு
நெய் - 2 தேக்கரண்டி
தயிர் - 1 தேக்கரண்டி
தக்காளி - 1 பெரியது
கரம் மசாலா - 1 தேக்கரண்டி

செய்முறை:

350 கிராம் மைதா மாவில் 1/2 தேக்கரண்டி பேக்கிங் பௌடரைக் கலந்து கொள்ளவும். 250 கிராம் கொத்துக்கறியை வாணலியில் போட்டு, தண்ணீர் இல்லாமல் வதக்கிக் கொள்ளவும்.

ஒரு பெரிய வெங்காயம், 1/2 கப் அளவு மல்லித்தழை, 1/4 கப் புதினா இலை, 1 அங்குலம் இஞ்சி, 4 பச்சை மிளகாய் ஆகியவற்றை மிகவும் சிறியதாக நறுக்கிக் கொள்ளவும். மைதா, பேக்கிங் பௌடரைச் சலித்த பின் தேவையான உப்புத் தூள், 2 தேக்கரண்டி நெய், 1 தேக்கரண்டி தயிர், தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். 1/2 மணி நேரம் கழிந்த பின்னர் மறுபடியும் பிசைந்து சிறு உருண்டைகளாக செய்து கொள்ளவும்.

ஒரு பெரிய தக்காளியை 1/2 கப் தண்ணீரில் வேக வைத்து தோல் நீக்கி, இத்துடன் கரம் மசாலா 1 தேக்கரண்டி, மல்லித்தழை, புதினா இலையைக் கலந்து இறக்கிக் கொள்ளவும்.
 
கொத்துக்கறியுடன் நறுக்கிய வெங்காயம், இஞ்சி, தேவையான அளவு உப்புத்தூள் மற்றும் தக்காளிக் கலவையையும் கலந்து கொள்ளவும். மாவு உருண்டைகளைப் பூரிப் பலகையில் வட்டங்களாகத் தேய்த்து ஒவ்வொரு வட்டத்தையும் 1/2 வட்டமாக செய்து அதை கோன் (cone) வடிவமாக அமைத்து, இதனுள் கொத்துக்கறி கலவையை வைத்து மூடவும்.

1/2 மணி நேரம் அப்படியே வைக்கவும். அதன்பின் வாணலியில் 2 கப் சமையல் எண்ணெய் ஊற்றி காய வைத்தக் கோன்களைப் பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும். சட்னியுடன் பரிமாறலாம்.

Labels:

வாழைக்காய் பஜ்ஜி - Vazhakkai Bajji


தேவையான பொருள்கள் :

வாழைக்காய் - 5
கடலைப் பருப்பு மாவு - 1/2 கிலோ
எண்ணெய் - 500 கிராம்
மிளகாய்த தூள் - போதுமான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை :

வாழைக்காய்களைத் தோல் சீவாமல் அரிவாள் மணையில் அல்லது தற்காலத்தில் வந்திருக்கும் சீவு கருவியில், நீள வாக்கில் துண்டுகளாக அரிந்து கொள்ளுங்கள்.

கடலைப் பருப்பு மாவில் மிளகாய்த் தூளைக் கலந்து, தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்புப் போட்டுக் கரைத்துக் கொள்ளுங்கள்.

 வாணலியில் எண்ணெயை ஊற்றிக் காய வைக்கவும். ஒவ்வொரு வாழைக்காய்ச் சீவலாக எடுத்து, கடலைப் பருப்பு மாவுக் கலவையில் பக்குவமாய்த் தோய்த்து, காய்ந்து கொண்டிருக்கும் எண்ணெயில் போட்டு, வேக விடுங்கள்.

வெந்ததும் எடுத்துத் தட்டில் போட்டுக் கொள்ளுங்கள். சுடச் சுடத் தின்றால், வாழைக்காய் பஜ்ஜி மிகவும் சுவையாக இருக்கும்.

Labels:

ஆம வடை - Masala Vadai - Paruppu Vadai - Amea Vadai


தேவையான பொருள்கள் :

கடலைப் பருப்பு - 1/2 கிலோ
துவரம் பருப்பு - 1/4 கிலோ
உளுந்தம் பருப்பு - 1/4 கிலோ
மிளகாய்த் தூள் - 5 ஸ்பூன்
பெரிய வெங்காயம் - 6
எண்ணெய் - 1/2 கிலோ
இஞ்சி - 2 துண்டு
உப்பு - தேவையான அளவு

செய்முறை :

கடலைப் பருப்பு, துவரம் பருப்பு, உளுந்தம் பருப்புகளைத் தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளவும். உரலில் அல்லது மிக்ஸியில் நெறுநெறுவென்று அரைத்துக் கொள்ளவும்.

 வெங்காயத்தை அரிந்து கொள்ளவும். இஞ்சியைத் தட்டிக் கொள்ளவும். அரைத்த பருப்புக் கலவையில் மிளகாய்த் தூள், வெங்காயம், இஞ்சி ஆகியவற்றைப் போட்டுப் பிசைந்து கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைத்துக் காய வைக்கவும். பிசைந்த பருப்புக் கலவையை வடையாகத் தட்டி, காய்ந்து கொண்டிருக்கும் எண்ணெயில் போட்டு வேக விடவும். பக்குவமாய் வெந்ததும், எடுத்துத் தட்டில் போடவும்.

Labels: