என் பூர்வீக வீடு
தன் அடையாளமிழந்து
நொறுங்கிக்கிடக்கிறது
முன்பு நானிருந்த
பூர்வீக வீடு
இன்று
நானங்கு இல்லையெனினும்
அது என்னோடுதானிருந்துகொண்டிருக்கிறது
என் பால்ய காலத்தோடு
நான் பறந்துகொண்டிருந்திருக்கிறேன்
தடுப்பரண்களுடனான
அதன் வனத்தில்
நிலா
இருந்த நாள்களிலும்
இல்லாத நாள்களிலும்
என்னை ஒளித்துவைத்திருந்த
தூண்களும்
முதல் தீட்டில் பயந்திருந்த
என்னோடிருந்த
கழிப்பறைச் சுவரும்கூடச்
சரிந்து கிடக்கிறது
ஏனைய தன் ரகசியங்களோடு
பெரும்பாலான பொழுதுகள்
ஒண்டியிருந்திருக்கிறோம்
சுவரில் ஒருபுறம் நானும்
மறுபுறம் இந்த வேம்பும்
தன் சுவரிழந்தபின் அது
தன் நிழல் உதிர்த்த
நிலம் பார்த்து
தான் மட்டும்
தனித்திருக்கிறது
என் விளையாட்டின் தடயங்கள்
இன்றும்கூட எஞ்சியிருந்திருக்கலாம்
மச்சு அறைச் சுவரொன்றில்
Labels: சல்மா

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home