Wednesday, 17 April 2013

காலத்தின் ஒட்டடைகள்

கனல் உமிழ்ந்து
பளிச்சிட்டுப் பிரகாசிக்கும் பொழுதில்
எங்கிருந்துதான் உயிர்க்கிறதோ
இந்தக் கொடுங்கசப்பு
உன் திரும்புதலுக்கான உணவை
எப்போதோ
சமைத்தாகிவிட்டது
தயவுகள் வேண்டா
சுவர்ப் பல்லிகள்
இரவை நோக்கி
காத்திருக்கின்றன

முடிவில்லை
முடிவேயில்லை
என் மீதான அக்கறையின்மைகளுக்கு
இந்த அறையெங்கும்
இந்தப் படுக்கையெங்கும்
அத்துமீறி நுழைந்த கால்களின்
சுவடுகள்
எங்கோ தொடங்கிற்று
பாதைகள் அழிக்கப்பட்ட பாதையில்
அதிசயங்கள் நேரா குகை வாழ்வுக்கு
நமதிந்தப் பயணம்
யாரேனும் ஒருவர்
கொலையாளியாகும் சாத்தியங்களுடன்
ஒன்றாக உறங்குகிறோம்
வண்ண உடைகளுக்குள்
கால காலமாய்
ஒட்டடை படிகிற உடல்
எண்ணற்ற சதிகளால்
புனையப்பட்டதிந்த வாழ்க்கை
ஒட்டடைகள் துளைத்துச் செல்கின்றன

சீன அரசிளங்குமரனைப்பற்றிய கனவினை
தனித்த மாலைப்பொழுதினில் திடீரென ஜன்னல் கம்பிகளில் துடிக்கின்றன
யாரேனும் ஒருவர் விட்டுச் செல்லும்
அதிர்வுகள்
கறுப்பு அங்கிக்குள்
பெருகிச் சிதறும்
யாருமில்லாத
யாரோ ஒரு அன்னியனின் முகம்

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home