மூடுதல்
ஓர் அரண் அமைத்து
இன்றெனைக் காக்கிறேன்.
அழைப்பின்
எந்தக் குரலுக்கும்
நான் விலக்கப் போவதில்லை
எனது அரணை.
என்னிடமிருந்ததையெல்லாம்
ஒவ்வொரு முறையும்
பலவந்தமாகப்
பறித்துச் சென்றீர்கள்.
இன்று
இச் சாய்வு நாற்காலியில்
யாருக்கும் தயங்காமல்
கால்களை நீட்டி
அமர்ந்திருக்கிறேன்.
இப்பொழுதுதான்
தைரியமாய் இருக்கிறேன்
பாதுகாப்பாய் இருக்கிறேன்.
யாரையும் அனுமதிக்க மாட்டேன்
என்னிடமிருந்து
எதையுமே பெற முடியாது.
பொறுக்க இயலாதபடி
கத்துகிறார்கள்
சத்தமிடுகிறார்கள்
தூங்கவிடுவதே இல்லை.
எனினும் என் தனிமையை
உருவாக்குகிறேன்
இந்த இரைச்சல்களின் உள்ளிருந்து.
எப்போதாவது கேட்கிறது
புதுமையாய்
வியப்பூட்டும் அழைப்பு
யாரோ
எதையோ
கொடுக்க வந்திருக்கிறார்கள்.
வஞ்சகமுள்ள அழைப்புகளின்
பயங்களால்
எனது அரண்களை இன்னும்
வலுப்படுத்துகிறேன்.
வழி தவறி வந்த
தேவதைகள் சிலவும்
திரும்பிப் போயிருக்கக் கூடும்.
Labels: சல்மா

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home