Wednesday, 17 April 2013

பயணத்திற்குப் பிந்தைய வீடு

தொலைதூரப் பயணத்திற்குப் பின்
திரும்பும் வீடு எதிர்கொண்டு வரவேற்கிறது
சென்று வந்த நகரத்தின்
வன்முறையுடனும் சூழ்ச்சியுடனும்
அகோரப்பசியுடன் விழுங்கக் காத்திருக்கும்
ஒரு மிருகத்தைப் போல
வழி தவறாத பயணத்தில்
வந்து சேரும் வீடு
தயங்கவைக்கிறது

யாரோ ஒருவருடைய வீடு போல
நானும் அதுவும்
விரோதத்துடனும் சந்தேகத்துடனும்
பிந்தைய பொழுதுகளை எதிர்கொள்கிறோம்

கற்காலக் குகையொன்றின் தோற்றமாகவோ
சிறைச்சாலையொன்றின் சாயலாகவோ இல்லாமல்,
வீடு வீடாக இருப்பது
அதனுடன் தொடர இயலாத உறவாய் மாறி
மிகுந்த சங்கடத்தைத் தருகிறது

முதுகுகளுக்குப்பின் நீளும் ஆயுதங்களுடனும்
மௌன யுத்தங்களுடனும் தொடரும் உறவுகளின்
அதிகாலைப் பிரியங்கள்
தாழிடப்பட்ட அறைகளைக் காட்டிலும்
தாழிடப்படாத அறைகள் இயல்பாய் இருக்கின்றன

பதற்றங்களின்றி
எப்பொழுதும்
என் மனப் பிறழ்வுகள்
ஆரம்பமாவது
இந்த வீட்டின் ஒழுங்குகளுக்குள்

தனது எல்லா வர்ணங்களும்
உதிர்ந்துவிட்ட பிறகும்கூட
மயானத்திற் ஈடான அமைதியுடனும்
இறுமாப்புடனும் இருக்கிறது
என் வீடு

எப்போதோ பூட்டப்பட்டுவிட்ட
அதன் கதவுகளுக்குப்பின்
சாவிகளை வைத்துப்
பாதுகாப்புடன் விளையாடும்
நம் குழந்தைகள்

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home