யாருமில்லாத இடத்தில்
யாருமறியாதவண்ணம்
என்னுள் ஒளித்து வைத்திருப்பதாய்
நம்பிக்கொண்டிருந்த வேளையொன்றில்
நீ கேட்கிறாய்
எப்போதும் ஏன் தனிமையிலிருக்கிறாய்
என்று
சலனமேயில்லாமல்
என் தனிமையின் துயரங்களைக்
கடந்து செல்பவர்களுக்கு மத்தியில்
என் நினைவில் நெடும் காலமாய்ப்
புதையுண்டிருக்கிற துயரங்களை
எழுப்பும் விதத்தில்
நீ கேட்கிறாய்
உனக்கு ஒரு பதிலை
உனக்காகவேனும்
சொல்ல முடியாத நிலையில்
நானில்லையென்றாலும்
முடிவுறாத குழப்பத்தினூடே சொல்கிறேன்
யாருமேயில்லாத இடத்தில்
தனியாகத்தானிருக்க முடியுமென்று
உயர்ந்த மலைகளுக்கிடையில்
யாரோ விட்டுச் சென்று அலைகழியும்
குரலாகவோ
அலை ஒதுக்கித் தள்ளிய
துரும்பாகவோ
நான் எனதிந்தத் தனிமையுடன்
மிக நிராதரவான நிலையில்தான்
தொடங்கிற்று
தனிமையுடனான எனதிந்த உறவும் கூட
எனதிந்தத் தனிமையின் மொழி
பிறிதொரு வேளையில்
கவிதையாய் மாறலாம்
எனதிந்தத் தனிமை
ஆகாய நீலத்தில் கரைந்து
தனக்கொரு நிறத்தை அடையலாம்
என்னை மீறித் தீர்ந்து கொண்டிருக்கிறது
வாழ்க்கை
தீரவே தீராத தனிமையுடன்
நான் இங்கேதான் இருந்து வருகிறேன்.
நடு இரவில்
பாதியில் தொடர இயலாக் கனவில்
மனம் வழி மறித்துப் பற்றியிருக்கும்
மிதக்கும்
எனது காலத்தின் சிறகுகளை
அவற்றின் வேகத்தை
மற்றும் அதன் எடையின்மையை
விரைவில்
நைந்து கிழிந்தே போகக்கூடும்
நான் புரட்டிக் கொண்டேயிருக்கும்
உன் ஞாபகங்கள்
Labels: சல்மா

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home