Wednesday, 17 April 2013

ஒரு மனநோயாளியென அறியப்படும் உன்னோடு

நாளெல்லாம்
உன் செவிகளிடம் உரையாடுகிறாய்
இலக்கற்ற உன் பாதங்களினால்
நீ கணக்கிட முயல்வது
உனதறையின் நீள அகலங்களை
தூக்க மாத்திரியும் கைவிட்ட
உன்னைத் துன்புறுத்தும் நீண்ட இரவை
விளக்கொளியைப் பிரகாசிக்கச் செய்து
விடியவைக்கக்
கடும் பிரயத்தனம் செய்கிறாய்

எதிர்படும் முகமற்றவர்களிடமும்
நேரம் கேட்டுக்
காலத்தின் மீது
சிறு குறுக்கீடொன்றை
நிகழ்த்த முனைகிறாய்
காலை வேளைகளில்
தலையணைக்கடியில்
சுருட்டித் திணித்து நிரம்பிய
காகித உருண்டைகளைச்
சரிபார்க்கத் தவறுவதில்லை நீ

தனித்திருந்தபோதும்
பதுங்கிப் பதுங்கி
நடமாடுகிறாய் காலத்திடமிருந்து
சில நினைவுகளை
உருவி எடுப்பதுபோலப்
பாய்க்குச்சிகளை உருவிப்
பத்திரப்படுத்துகிறாய்
நெகிழ்ந்துகொண்டிருக்கிறாய்
என்கிற என் கற்பிதங்களில்
நிரம்பிக்கொண்டிருக்கிறது
உன் இறுக்கங்கள்

ஒரு மனநோயாளியென
அறியப்படும் உன்னோடு
இருந்துகொண்டிருக்கும் வேளைகளில்
கனத்துவிடும் என் வாதைகளுக்கு
உன்னிடத்தான கருணை மட்டுமே
காரணமெனச் சொல்லமாட்டேன்

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home