இளவரசியின் தவளை ஆடை
நீ வாங்கியதுதான் இந்த உடை
அதனை அணிந்துகொள்ள வேண்டுமென்ற
உன் விருப்பத்தில்
மிகுந்திருக்கும் பிரியத்தை
வியந்தபடி அதனை
அணிய முயல்கிறேன்
என்னைச் சரியாகப் பொருத்தவிடவோ
அதனுள் அனுமதிக்கவோ மறுக்கிறது
அதன் விஸ்தீரணம்
உடைகளுக்கேற்ப அமையாத
உடலின் அளவை மாற்றுவதில்
தவறில்லை என்கிறாய்
எனக்கென
நிண்டகாலமாக
வடிவமைத்தாய்
அவ்வுடையை
எனது அசௌகரியத்தை
ஒப்புக்கொள்ளவே
உனக்கு முடிவதில்லை
வெகு சிரமத்துடன்
நான் அணிந்திருந்த நேரம்போக
எஞ்சிய நேரங்களில்
நீயே பத்திரப்படுத்துகிறாய்
இளவரசியின்
தவளை உடைபோலாகுமோவென
தூங்குவதில்லை நீ
கொஞ்சம் பசையை எடுத்து
என் உடலோடு
அதனைக் கச்சிதமாக
ஒட்டிவிடுகிறாய்
உன் வேலை முடிந்த ஆயாசத்தைக்
குடித்துக் கொண்டாட
நீ சென்றபின்
உடலின் அங்கமான அதனுடன்
வளைய வருகிறேன் நான்
Labels: சல்மா

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home