Wednesday, 17 April 2013

நகரம்

ஒளி நிறைந்து பளிச்சிடுகிறது நகரம்
கனவாக
கொஞ்சம் வாசனையாக
மீதிப் பயமாக
எப்போதும் ஒரு சூழலாக
என் கண்களில் படியும் முகங்களின் காடு
இருசக்கர வாகனத்தில் தன் காதலனின் முதுகில்
முலை அழுத்திக்
கடக்கிறாள் ஒருத்தி

வெயிலை மறுத்தபடி
வெயில் பொறுக்கத் தெருக்களில் திரியும் மனிதர்கள்
இந்த நொடியின் இறுதிக் கணத்தில்கூட
அது தின்று செரித்திருக்கலாம்
தன் நீண்ட வீதிகளில்
நடமாடித் திரிந்த
சில எளிய மனிதர்களை

நகரத்து மனிதர்கள்
எனக்காகச் சொல்லிய ஒரு வார்த்தையும்
என்னை வந்து சேர்வதில்லை
என் தாகம் தணிப்பதில்லை
அவர்களது தண்ணீர்
வெகு அருகில் ஓசையாய்ப் பெருகும்
கடல்

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home