ஒரு மாலையும் இன்னொரு மாலையும்
தனிமையின் இடுக்கில்
நசிந்து விழும்
இன்னொரு மாலை நேரம்.
சுவர் தாண்ட
திரணியற்ற கால்கள்
வளைய வருகின்றன
உள்ளறைகளின் இருட்டில்.
அறையின்
ஒழுங்குகளது
மூச்சுக் காற்றின் வெப்பத்தில்
எழுகிறது கந்தக நெடி.
உறைந்த கனவுகளை
வெட்டியெடுத்து
உருக்க யத்தனிக்கும்
அர்த்தமின்மையின் மீதில்லை
ஏதொரு மாற்று அபிப்ராயமும்.
சுமுகமான
தாம்பத்தியங்களுடன்
தன் இரைகளோடு மட்டும்
ஜீவித்து சுகித்திருக்கும்
உயிரினங்கள் இருக்கக் கூடும்
இப் பிரபஞ்சத்தில்.
தொடர்ந்து வரும்
பதற்றமான இரவுகளும்
குழந்தையின் அமைதியற்ற
சிணுங்கல்களும்
பின் உருமாறும்
என்னைப் பற்றி பெரும் வேடிக்கையாக.
2
சமையலறையில்
பதுங்கும் பூனையின்
உலகமெனச் சிக்கலானது
இந்த இருப்பு.
குடிப்பதற்கு இறுத்த டீயின் மீது
படிகிறது அடர்த்தியான ஆடை
தீய்ந்த வாசனை விரட்டுகிறது.
நடமாட்டம் நிறைந்த
வரவேற்பறைகளில்
பரிச்சயம்கொள்ள
யாருமிருப்பதில்லை.
குளியலறையின்
தனிமை ஏற்படுத்துகிறது
நிர்வாணம் பற்றிய
அருவருப்பின் பயம்.
கூண்டுகளுள் எழுப்பிய
வீடுகள் தமது பரப்புகளை
அதிகரிப்பதன் நோக்கம்
என்னைப் பயமுறுத்துவது மட்டுமே.
சுவர்களுக்குள் உருவாகிவிட்ட
தோட்டத்தில் இல்லை
அமர்வதற்கான நிழல்.
மொட்டை மாடியின்
திறந்த வெளிகள்
அந்தரங்கத்தை உறுதி செய்வதுமில்லை.
காலாட்டி அமரும்படி
சௌகர்யமாய் இருப்பதில்லை
எந்த இருக்கையும்
என் குழந்தை
தன் தொட்டிலைத்
தரக்கூடுமெனில்
உறங்குதல் சாத்தியமாகலாம்.
Labels: சல்மா

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home